ஞாயிறு, 29 மே, 2011

புலிகளின் பதுமனுக்கு தடுப்புக் காவல் உத்தரவு

 புலிகளின் திருகோணமலைக் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமனுக்கு திருமலை உயர்நீதிமன்றம் தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் மீது திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் பொலிசாரால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
சிவசுப்பிரமணியம் வரதநாதன் எனும் இயற்பெயர் கொண்டவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பதுமன் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தவருமான அவரை பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸார் நேற்று திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நிறுத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட காலத்தில் அவருடைய கட்டளையின் கீழ் விடுதலைப் புலிகள் பல இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அத்துடன் ஏராளமான படையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் அவருக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவ்வாறான சம்பவங்கள் காரணமாக பதுமனுக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது சட்டப்பிரிவின் பிரகாரம் பயங்கரவாதத்துக்கு உதவியளித்தமை மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பொலிசார் முன்வைத்த விடயங்கள் மற்றும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட திருகோணமலை உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி பதுமனை ஜுலை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக