புதன், 4 மே, 2011

திமுக-காங். கூட்டணி வெற்றி உறுதி: திருநாவுக்கரசர்

சென்னை: தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் கருணாநிதி 6வது முறையாக முதல்வராவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.

முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய பின் நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற பிறகு முதல்வர் கருணாநிதியை நான் மரியாதை நிமித்தமாக இன்றைக்கு சந்தித்தேன்.

அவர் 6வது முறையாக மீண்டும் முதல்வராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அதற்கான வாழ்த்தை அவருக்குத் தெரிவித்தேன். தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று, கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்படும்.

தேர்தல் முடிந்த பிறகும், தேர்தல் கமிஷனுடைய கெடுபிடிகள் அதிகமாக உள்ளது குறித்து முதல்வர் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார். பொதுவாக 5 மாநிலத் தேர்தல்களைப் பார்க்கும்போது, தமிழகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கெடுபிடிகள் இருக்கின்றன. பொதுமக்களுடைய கருத்தும், என்னுடைய கருத்தும் இதுதான்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், முதல்வரும் கூறியிருப்பதைப்போல, இது குறித்து விளக்கமாக நாடாளுமன்றத்திலே விவாதித்து, தேர்தல் ஆணையத்திற்கான அதிகாரங்களை வரையறுக்க வேண்டும்.

ஏனெனில், அவர்களது நடவடிக்கைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, ஒரே மாதிரியான கொள்கையை, ஒரே மாதிரியான சட்ட திட்டங்களை தேர்தல் ஆணையம் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக