சனி, 28 மே, 2011

ஒரு ரவுடி மந்திரியான கதை!யார் இந்த மரியம்பிச்சை?

க்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.  இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.
இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில்  புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.
இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப்  பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.
சொந்த  வாழ்க்கையில்  நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.
மேலும் தான்  வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின்  கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.
இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.
அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின்  மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.
திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும்  கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.
மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.
மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில்    தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம் , தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும்  கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள்  போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.
உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

குறிப்பு :

1.         மரியம்பிச்சை இறப்புக்கு பின்னர் 25-05-2011 அன்று தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் நேரு, “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மரியம்பிச்சை எனக்கு நல்ல நண்பர், கொலை செய்யும் அளவுக்கு என்னை மோசமாக சித்தரித்து விட்டனரே” என்று புலம்பியுள்ளார்..உடல் அடக்கம் செய்யப்பட்டபின் திருச்சி சிவா மற்றும் பலர் மரியம்பிச்சையின் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வந்துள்ளனா. அ.தி.மு.க. வில் ஒருவர் கூட இதற்கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை. தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர். இதிலிருந்து இரண்டு கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2.         பெரும்பிடுகு முத்துரையர் சதய விழாவில் பங்கேற்ற மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த பிறகும் சதய விழா நிகழ்ச்சிகள் எந்த குறையும் இல்லாமல் அன்று முழுவதும் நடந்தது. இவ்வளவு கலவரம் செய்து துக்கம் கொண்டாட வைத்தவர்கள் யாரும் அவர்களை  கண்டிக்கவில்லை. அவர்களும் குறைந்தபட்ச நாகரீகம் கருதிக்கூட மாலை அணிவிப்பு, போட்டா எடுப்பது முதல் ஊர்வலமாக டெம்போ வண்டியில் ஏறி கூச்சலிட்டு ரகளை செய்தது வரை எதையும்  குறைத்துக்கொள்ள தயாரில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக