வெள்ளி, 20 மே, 2011

இந்து சமூத்திரத்தில் மீன்பிடி:ஐரோப்பிய ஒன்றியம் தோற்கடிக்கப்பட்டது

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கான தமக்கான ஒதுக்கீட்டினை அதிகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய சில முதன்மையான மீன்பிடி நாடுகளும் ரூணா ஆணைக்குழுவிடம் முன்வைத்த வேண்டுகையினை அது நிராகரித்திருப்பதாக சிறிலங்காவினது மீன்பிடித்துறை அமைச்சர் கூறுகிறார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ரூனா எனப்படும் சூரை மீன் பெருமளவில் அழிக்கப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், தென்கொரியா மற்றும் ஏனைய மீன்பிடி நாடுகள்தான் பொறுப்பு என சிறிலங்காவினது மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேசியவிடம் கூறியிருக்கிறார்.

"உலங்குவானூர்திகள் மற்றும் செய்மதித் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தும் இந்த நாடுகள் சூரை மீன்களைப் பிடிப்பதற்காக மாத்திரம் பெரும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர்கள் குறிப்பிட்ட மீன்வகையினையே இல்லாது செய்யும் வகையிலேயே செயற்படுகிறார்கள்" என்றார் அவர்.

"மீன்வளத்தினைப் பாதுகாக்கும் எங்களது திட்டத்திற்கு மிகவும் தீங்கானதாக அமைகிறது"

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கான ஆசிய நாடுகளுக்கான ஒதுக்கீட்டினைக் குறைத்துவிட்டு தமக்கான ஒதுக்கீட்டினை அதிகரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முயற்சியை ஏனைய 17 நாடுகளுடன் இணைந்து சிறிலங்கா முறியடித்திருக்கிறது என்றார் அவர்.

"மீனினங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என வெளிப்படையாக வாய்கிழியக் கத்துபவர்கள் யாரோ அவர்கள்தான் இங்கு மீன் வளத்தையே இல்லாதுசெய்யும் வகையில் செயற்படுகிறார்கள்" என்றார் அமைச்சர்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான ரூணா ஆணைக்குழுவின் 15வது கூட்டத்தொடர் கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகிறது.

"இந்து சமுத்திரப் பிராந்திய ரூணா ஆணைக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியம் தோற்கடிக்கப்பட்டமை இதுதான் முதல்முறை' என அமைச்சர் சேனாரத்தின தொடர்ந்து தெரிவித்தார். சின்ன நாடுகளாக இருக்கலாம் அன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் யப்பான் போன்ற பெரிய நாடுகளாக இருக்காலாம்.. யார் மீன் வளத்தினைச் சிதைத்தாலும் அது குற்றம் குற்றம்தான்" என்றார் அவர்.

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் எதிர்ப்பினை அடுத்து அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கு ஒதுங்கீட்டு முறையினைக் கொண்டுவருவதில்லை என ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சிறிலங்காவினது மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக