ஞாயிறு, 8 மே, 2011

பத்திரிகைகள் செயல்பாடு அக்கிரமம்: கருணாநிதி பாய்ச்சல்

சென்னை: "பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் செயல்பாடு, அக்கிரமமாக உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: சில ஏடுகளும், ஊடகங்களும், "நடுநிலை' என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு சேட்டை விமர்சனங்கள் செய்கின்றன. "புலன் விசாரணை' என்ற பெயரில், வெளியிடும் செய்திகள் அக்கிரமமானவை. இந்தியா, மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனினும், ஜனநாயகம் முதிர்ச்சி அடையவில்லை; வளரும் நிலையில் தான் இருக்கிறது. நாட்டை, அனைத்து நிலைகளிலும் கைகொடுத்து தூக்கி விடுவதிலும், மக்களை சரியான திசையில் வழி காட்டுவதிலும், தமது கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து ஏடுகளும், ஊடகங்களும் செயல்பட வேண்டும். வன உரிமைகள் சட்டத்தின்படி, பழங்குடியினருக்கு, தி.மு.க., அரசு எதையும் செய்யவில்லை என, கம்யூனிஸ்ட்கள் கூறியிருப்பது தவறு. 2005க்கு முன்பிருந்து, வன நிலத்தை அனுபவித்து வரும் பழங்குடியினர், வனப் பகுதிகளில் மூன்று தலைமுறையாக குடியிருந்து வருவோர் ஆகியோர், நில உரிமைப் பட்டா பெற தகுதியானவர்கள். இவர்களிடம் இருந்து, 21 ஆயிரத்து 781 கோரிக்கைகள் வரப்பெற்று, பரிசீலனைக்குப் பின், 3,259 பட்டாக்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன.

பட்டாக்கள் வழங்குவதற்கு முன், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை பெற வேண்டியிருப்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த நூற்றாண்டில், உலக மக்கள் தொகை 1,000 கோடியை தாண்டும் என்று ஐ.நா., தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை, அடுத்த 50 ஆண்டுகளில் 170 கோடியாக உயரும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை, மத்திய திட்டக்குழு கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக