ஞாயிறு, 22 மே, 2011

மூத்த பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசி காலமானார்

திராவிட இயக்கதின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர், நாத்திகச் செம்மல் பத்திரிக்கை ஜாம்பவான் எழுத்துலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த திரு.சின்னகுத்தூசி(எ) இரா.தியாரகராஜன் அவர்கள் 22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். தன் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தபோதிலும் தன்னை சந்தித்திட வருகை தந்த பத்திரிகை நண்பர்கள், அரசியல் நண்பர்களிடம் நாட்டுநிலைமை, அரசியல் நிலைமை, பற்றியெல்லாம் மணிக்கணக்கில் அழுத்தம் திருத்தமாக விவாதித்து வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

(முதல்வர்) கலைஞர் அவர்கள் தனது அரசாங்க நிகழ்வுகள், சட்டமன்ற நிகழ்வுகள், தேர்தல் நிகழ்வுகள் என்று பல்வேறு அயராதப் பணிகளுக்கு மத்தியிலும பில்ராத் மருத்துவமனைக்கு பலமுறை நேரில் வருகைதந்து திரு. குத்தூசி அவர்களுடன் கலந்துரையாடி அவரது உடல்நலனில் அக்கறை காட்டியதன் மூலம் அவர்கள் இருவரிடையே இருந்த நட்பு எத்தகைய வலிமை மிக்கது என்பதை உணரமுடியும்.இதேபோல் (துணை முதல்வர்) மு.க.ஸ்டாலின்  அவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஆட்சிப்பணி, கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையிலும் பல முறை நேரில் வருகைதந்து  சின்னகுத்தூசியின் உடல்நலனை அக்கறையுடன் விசாரித்தார். அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், தி.மு.கழக முன்னணியினரிடம் குத்தூசியின் எழுத்துப்பணியை பாராட்டிப் புகழ்ந்து புளகாங்கிதம் கொள்வார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் தி.மு.கழக மத்திய-மாநில அமைச்சர்கள் கழக முன்னணியினர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருகை தந்து சின்னக்குத்தூசியின் உடல் நலத்தில் அக்கறை காட்டினர்.;நக்கீரன் குடும்பத்தினர், சின்னகுத்தூசியைப் பிதாமகனாகப்  தந்தெடுத்துக்கொண்டதுடன், திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இரவு பகல் பார்க்காமல் கண்துஞ்சாமல்-ஒரு தந்தைககு மகன் என்னென்ன கடமைகளைச் செய்வாரோ அத்தனை கடமைகளையும் கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததோடு, கடந்த ஓராண்டு காலம் பில்ராத் மருத்துவமனையில் அரண்மனை வைத்தியத்தை திரு.சின்னகுத்தூசிக்கு வழங்கினார். ;மறைந்த திரு.சின்னக்குத்தூசியின் உடல் இராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கழகத் தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து மலரஞ்சலி செலுத்திய வண்ணமுள்ளனர். ;இன்று (மே 22) மாலை 4 மணியளவில் மயிலாப்பூரில் அன்னாரது உடல் தகனம் செய்யப்படுகிறது. சின்னகுத்தூசியின் வாழ்க்கை நிகழ்வுகள் வருமாறு:;சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்தபின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி (எ) இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன்பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.
குன்றக்குடியில் பணியாற்றியகாலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று சிறை சென்றார்.
திருவாரூரிலிருந்து வெளியான மாதவி வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.
நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்றுவருகின்றன.
இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய பிரசண்ட விகடன் இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.
சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக