திங்கள், 16 மே, 2011

தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

"தஞ்சை பெரிய கோவிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம்.

கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர்.அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசி சென்றார்.

கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.

தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக