வியாழன், 12 மே, 2011

யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதியுடன் ஐ.நா. தூதுக்குழு சந்திப்பு


uno jaffnaஐ.நா.வின் விசேட தூதுக்குழுவொன்று யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை பலாலியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்ணிவெடி மற்றும் மனிதாபிமான பணி பற்றி அதிபிந்திய நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காகவே இந்தக்குழு யாழ்ப்பாணம் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது யாழ். யூ.என்.எச்.சி.ஆர். கள அலுவலகத்தின் தலைமை அதிகாரியான இந்துமதி மோகனதாஸ், சிறுவர் பாதுகாப்பு நிபுணரான அல்பிறட் முட்டிட்டி, ஐ.நா. அலுவலகத்தின் யாழ்ப்பாணத்துக்கான பாதுகாப்பு இணைப்பாளர் டமஸகஸ் மாச்சரி ஆகியோருக்கு யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி குடாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் பணியின் முன்னேற்றம் பற்றி விளக்கினார். தூதுக்குழுவினர், யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் பற்றி தமது திருப்தியை தெரிவித்தனர். அவர்கள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த பகுதிகளிலிருந்து விரைவாக கண்ணிவெடிகளை அகற்றி மீள்குடியேற்றத்துக்காக அனுமதி வழங்கியமைக்கு இராணுவத்துக்கு நன்றி கூறினர். இந்த தூதுக்குழுவினர், சிறுவர் தொடர்பான குற்றச்செயல்களும் துஷ்பிரயோகங்களும் குறைந்துள்ளமையையும் பாராட்டினர். தூதுக்குழுவினருக்கு அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் இராணுவத்தின் பங்களிப்புப் பற்றியும் விளக்கப்பட்டது என இராணுவத்தின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக