செவ்வாய், 10 மே, 2011

அமெரிக்காவுக்கு ஒசாமாவின் இருப்பிடத்தைக் காட்டிய தொலைபேசி அழைப்பு


பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின் லேடனுடன் தங்கியிருந்த அவரின் பிரதான உதவியாளரின் செல்லிடத் தொலைபேசிக்கு வந்த ஒரேயொரு தொலைபேசி அழைப்பு, ஒசாமாவை அமெரிக்கப் படையினர் நெருங்க வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒசாமாவின் மிக நம்பிக்கையான உதவியாளருக்கு கடந்த வருடம் இந்த அழைப்பு வந்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒசாமாவின் பிரதான உதவியாளரை அமெரிக்கா இனம்கண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த அந்நபரை அபு அஹமட் அல் குவைட்டி என்ற புனைப்பெயரில்தான் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரியும்.
கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த உதவியாளரும் அவரின் சகோதரரும் அடங்குவர்.
கடந்த வருடத்தில் ஒருநாள் ஒரு பழைய நண்பரிடமிருந்து அல் குவைட்டிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
"நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களை நாம் மிஸ் பண்ணுகிறோம். எப்படி போகுது உங்கள் வாழ்க்கை. இப்போது என்ன செய்கிறீர்கள்?" என்று இயல்பாகத்தான் அந்த நண்பர் கேட்டார்.
தனது அழைப்பு ஒட்டுக் கேட்கப்படலாம் என்பதை உணர்ந்தோ என்னவோ, "நான் முன்னர் கூட இருந்த ஆட்களுடனே மீண்டும் வந்து சேர்ந்துவிட்டேன்" என்று மாத்திரம் அல் குவைட்டி பதிலளித்தார்.
அல் குவைட்டி முன்னர் யாருடன் இருந்தார் என்பது நண்பருக்குத் தெரியும். ஆனால் அது அமெரிக்காவுக்கும் தெரியும் என்பதை அவர்கள் உணரவில்லை.
இந்த தொலைபேசி உரையாடலை அமெரிக்க புலனாய்வுத்துறை அறிந்தபோது அல் குவைதா தலைவரை நோக்கிய தமது வேட்டையில் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துவிட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
'இதுதான் பின் லேடன் மீதான வேட்டை குறித்த திரைப்படத்தின் ஆரம்பம்' என மேற்படி அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலும் சேகரிக்கப்பட்ட ஏனைய பல தகவல்களுமே பின் லேடனைக் கொல்வதற்கான முற்றுகையை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு நம்பிக்கையளித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அபு அஹமட் அல் குவைட்டியை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் குறைந்தபட்சம் 4 வருடங்களாக தேடித்திரிந்தினர். அவரை கண்டுபிடித்தால் பின் லேடனை கண்டறிவது இலகுவாகிவிடும் என்பதை அமெரிக்கா அறிந்திருந்தது. மேற்படி தொலைபேசி அழைப்பு அமெரிக்கப் படையினரை ஒசாமாவின் அபோதாபாத் வீட்டிற்கு வர வழி செய்தது.
ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தொலைபேசிகளோ இணைய இணைப்புகளோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைபேசி மூலம் தமது இருப்பிடத்தை அமெரிக்கா கண்டறிந்துவிடக்கூடாது என்பதில் பின் லாடன் கவனமாக இருந்துள்ளார்.
அபு அஹமல் அல் குவைட்டியோ வேறு யாருமோ தொலைபேசி அழைப்பு மேற்கொள்வதாக இருந்தால் செல்போனில் பற்றரியை போடுவதற்கு முன்னால் 90 நிமிட நேரம் (தூரம்) வாகனத்தில் பயணத்த பின்னர்தான் அதை செய்வதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் அறிந்து திகைப்படைந்தனராம். இலத்திரனியல் கண்காணிப்புகளில் இருந்து தப்புவதற்காக இந்த உத்தி.
ஆனாலும் அமெரிக்க புலனாய்வுத் துறையின் கழுகுக் கண்களிலிருந்து அவர்கள் தப்பவில்லை.
(இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக