திங்கள், 9 மே, 2011

90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்

கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

கேரள தேவஸ்வம் போர்ட் அமைச்சர் சுதாகரன், 90% சாமியார்கள் (Godmen) பொறுக்கிகள் என்று சொல்லப்போக, உடனே ஒரு பிரச்னை எழுந்துள்ளது. சபரிமலை அர்ச்சகர்கள் பிரதிநிதி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

90% என்பது சரியான புள்ளிவிவரமாக இல்லாமல் இருக்கலாம். அது 80% ஆகவும் இருக்கலாம்; 99% ஆகவும் இருக்கலாம். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பொறுக்கித்தனம் செய்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் என்பதை தமிழகத்தில் இருக்கும் அனைவரும் அறிவர். கொலை, திருட்டு, நிலம் அபகரிப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் விளையாட்டுகள் என்று கடவுளின் அடியார்கள் ஈடுபடுவது எதனால் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கடவுளின் தீவிர அடியார்களாக, பிரதிநிதிகளாக, பீடாதிபதிகளாக இயங்குபவர்கள்தான் வெகு சீக்கிரமாக கடவுள் நம்பிக்கை இழக்கிறார்கள். சாதாரணனைவிட சங்கராச்சாரிகள்தான் கடவுள் அவநம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ‘தீய செயல்கள்' செய்தாலும் தமக்கு ஒன்றுமே ஆவதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்பவர்கள். இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கு மறுபிறவியில் தண்டனை கிடைக்கும் என்னும் கருத்தாக்கத்தை சீக்கிரமாகத் தூக்கி எறிபவர்களும் அவர்களே. உடனே இப்பிறவியின் சந்தோஷங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். இறைவனடியார் வேடம் சாதாரணர்களை ஏமாற்றத் தோதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன? சித்து விளையாடல்களில் இறங்கவேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக