திங்கள், 30 மே, 2011

80 வயது மார்க்சிஸ்ட் எம்எல்ஏ தற்கொலை

கொல்கத்தா, மே 29: சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியிலிருந்து குதித்து 80 வயதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தற்கொலை செய்து கொண்டார்.அண்மையில் நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பசிர்ஹட் வடக்குத் தொகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முஸ்தாபா என்ற குவாசெம் (80). மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பங்கு கொள்வதற்காக முஸ்தபா கொல்கத்தா வந்திருந்து எம்எல்ஏக்கள் விடுதியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட 3-வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென அவர் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு சென்று விசாரணை நடத்தினார்.இச்சம்பவம் குறித்து மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட முஸ்தாபா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்துள்ளார். தற்கொலை செய்யும் முன் அவர் அதுதொடர்பாக கடிதம் எழுதி வைத்துள்ளார் என்றார். முஸ்தாபாவின் மரணத்தையடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் 39 ஆக குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக