செவ்வாய், 10 மே, 2011

2ஜி : கனிமொழி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு!

மே 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெற உள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து கனிமொழிக்கு விலக்கு அளித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள வழக்கில் கடந்த 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கனிமொழி ஒரு பெண் எம்.பி. முதல்வரின் மகள் என்ற காரணங்களால் அவரைப் பழிவாங்கும் நோக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கோரி வாதிட்டார்.

முன் பிணை கோரி அவர் தாக்கல் செய்த மணுவின் மீதான தீர்ப்பு மே 14ஆம் தேதி வழங்கப்படும் என்று டில்லி நீதிமன்றம் கூறியிருந்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. 2ஜி வழக்கின் விசாரணை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நாள்களில் தான் நேரில் ஆஜராக வேண்டும் என்பதில் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கனிமொழி டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் கனிமொழி சிபிஐ விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக