சனி, 9 ஏப்ரல், 2011

உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் ஹஸôரே

புதுதில்லி, ஏப். 8: லோக்பால் மசோதாவை வரையறுக்க கூட்டுக் குழு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாள்களாக தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சமூக சேவகர் அண்ணா ஹஸôரே தனது போராட்டத்தை சனிக்கிழமை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். "எங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது நமது நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று அண்ணா ஹஸôரே கூறினார். மத்திய அரசுக்கும், ஹஸôரே பிரதிநிதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, லோக்பால் மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குழுவுக்கு தலைவராக இருப்பார். சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நீர்வளத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் அரசுத் தரப்பில் இடம் பெறுகின்றனர். பொதுமக்கள் தரப்பில் சமூக ஆர்வலர் அண்ணா ஹஸôரே, மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம் பெறுகின்றனர். வழக்கறிஞர் சாந்தி பூஷண் குழுவின் இணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். கபில் சிபல் வரவேற்பு: அண்ணா ஹஸôரேவின் முடிவை வரவேற்றுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். பொதுமக்கள், அரசுத் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய லோக்பால் மசோதா வரைவுக் குழு குறித்த அறிவிப்பாணை உடனடியாக வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். சனிக்கிழமை காலை அறிவிப்பாணை வெளியிடப்படும், அதன் நகல் கிடைத்த பின்னரே அண்ணா ஹஸôரே உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 4 நாள்கள் உண்ணாவிரதம்: ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தும் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான திருத்தப்பட்ட லோக்பால் (ஜன் லோக்பால்) மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதியான அண்ணா ஹஸôரே கடந்த செவ்வாய்க்கிழமை தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஹஸôரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக