புதன், 27 ஏப்ரல், 2011

கலைஞர் டிவியை இயக்குவது கனிமொழி தான்: சிபிஐ

முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கலைஞர் டிவி பங்குதாரரான கனிமொழி மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகிய இருவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது. அதில் முன்னாள் அமைச்சர் ராசா உட்பட ஒன்பது பேர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்), ஐபிசி 420 (ஏமாற்றுதல்), ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்டோருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந் நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் சிபிஐ நேற்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு லைசென்ஸை ஸ்வான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி லஞ்சம் பெற்றதாக ராசாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மீதும் கலைஞர் டிவிக்கு பணம் வழங்கியதாக டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்களின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த 5 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஊழல் தடுப்பு) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப் பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கனிமொழி தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார். கலைஞர் டிவி துவக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றினார். தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார். இப்போதும் அந்தத் தொலைக்காட்சியை இயக்குவதில் ('active brain') முக்கிய நபர் கனிமொழி தான் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையின் முகப்பில், 'சப்ளிமென்டரி-1'என்று கூறப்பட்டிருப்பதால் அடுத்தடுத்து மேலும் துணை குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இந்த குற்றப் பத்திரிக்கையை ஏற்ற நீதிபதி சைனி, கனிமொழி மே 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். சரத்குமார், கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டதோடு, ராஜிவ் அகர்வாலையும், அசீப் பல்வாவையும் செவ்வாக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்னொரு துணை குற்றப் பத்திரிகை அடுத்து மாதம் 30ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English summary
Tamil Nadu chief minister M Karunanidhi's daughter Kanimozhi was the 'active brain' behind the operations of Kalaignar TV and was in regular touch with former telecom minister A Raja regarding the launch of the channel, claims the second chargesheet on the 2G scam filed by the CBI on Monday.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக