வியாழன், 7 ஏப்ரல், 2011

ராஜீவ், ஜே.ஆர். கைச்சாத்திட்ட இரண்டாவது ஒப்பந்தம்!

தமிழ் மக்களுக்குச் சுயாட்சி அதிகாரம் வழங்குவதை உறுதிப்படுத்த ராஜீவ், ஜே.ஆர். கைச்சாத்திட்ட இரண்டாவது ஒப்பந்தம்!


அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பற்றிய பேச்சு இன்னும் இடம்பெறவில்லை. “பதின்மூன்றாவது திருத்தம் பிளஸ்’ என்று ஜனாதிபதி கூறுகின்றார்.ஆனால் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாகவாவது பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதுவரை கூறவில்லை.எவ்வாறாயினும், பேச்சுவார்த்தையில் பதின்மூன்றாவது திருத்தம் முக்கிய இடம் பெறுவதைத் தவிர்க்க முடியாது.

பதின்மூன்றாவது திருத்தம் “பிளஸ்’ என்று இந்தியாவுக்கும் ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருக்கின்றார்.ஆனால் நடைமுறையில் இத் திருத்தம் “மைனஸ்’ ஆகிக்கொண்டிருக்கின்றது.மாகாண சபைகளுக்கான முக்கிய அதிகாரங்களை வழங்காமலும் வழங்கிய அதிகாரங்களைத் தேசியக் கொள்கை என்ற பெயரிலும் வேறு வழிகளிலும் திருப்பி எடுப்பதுமாக “மைனஸ்’ தொடர்கின்றது.
இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் “பிளஸ்’ என்று ஜனாதிபதி கூறுவதைத் தமிழர் தலைமை சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்.”திருத்தம் முழுமையாகவும் அதனிலும் சற்றுக் கூடுதலான அதிகாரங்களும்’ என்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.இந்த நிலைப்பாட்டைத் தமிழ்த் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்த முடியும்.
என்ன தான் இந்த “பிளஸ்’ என்ற கேள்வி எழும் நிலையில், மறைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் பற்றிக் கூறுவது பொருத்தமாக இருக்கும். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் 1987 ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் 1987 நவம்பர் 7 ஆம் திகதி இன்னொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டார்கள் என்பது பலருக்குத் தெரியாது.இவ்வொப்பந்தம் வெளியுலகுக்கு வரவில்லை.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மாகாண சபைச் சட்டம் தொடர்பான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான மு.சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன் ஆகியோர் 1987 அக்டோபர் 27 ஆம் திகதி கூட்டாகப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். இவ்விரு சட்டங்களிலுமுள்ள குறைபாடுகளை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். இக்குறைபாடுகளை நீக்குவதற்கான அம்சங்கள் இரண்டாவது ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனவென நம்புவதற்கு அடிப்படை உண்டு. அரசறிவியல் ஆய்வாளரான பேராசிரியர் எஸ்.டி.முனியும் பிரதமர் ராஜீவ் காந்தியும் இவ்வொப்பந்தம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துகள் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாகவுள்ளன.
இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை மேலும் மேம்படுத்துமென இவ்வொப்பந்தம் நம்பிக்கையூட்டுகின்றது என்று எஸ்.டி.முனி தனது நூலொன்றில் கூறியிருக்கின்றார். ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு 1989 ஜூன் 20 ஆம் திகதி எழுதிய கடிதத்தில் ராஜீவ் காந்தி இவ்வாறு கூறியுள்ளார். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியளிக்கப்பட்டாலும் முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தனவும் நானும் 1987 நவம்பர் 7 ஆம் திகதி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள மேலதிக விடயங்களிலும் தமிழ் மக்களுக்குச் சுயாட்சி அதிகாரம் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு எங்கள் இரண்டு அரசாங்கங்களும் சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளன.
இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் கைச்சாத்திட்ட இரண்டாவது ஒப்பந்தம் இப்போது பேசப்படும் “பிளஸ்’ ஆக அமையக்கூடியது எனக் கருதலாம். இவ்வொப்பந்தம் இலங்கையில் மறைக்கப்பட்ட போதிலும் இதன் மற்றைய பிரதி நிச்சயமாக இந்தியாவிடம் இருக்கும்.
இந்தியா இனியும் மௌனம் பேணாமல் இலங்கைத் தமிழரின் நலனில் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்துவதோடு, அதை நடைமுறைக்குக் கொண்டு வருமாறு இலங்கை மீது அழுத்தம் பிரயோகிப்பது தற்போதைய பேச்சுவார்த்தை பயனுறு வகையில் அமைவதற்கு உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக