செவ்வாய், 5 ஏப்ரல், 2011

உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரம்: சோனியா, கருணாநிதி சென்னையில் இன்று பேச்சு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு நாட்களே இருப்பதால், தலைவர்கள் முற்றுகையிட்டு, உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், சென்னையில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர். ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், கோவையில் நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஒன்றாக பிரசாரம் செய்கின்றனர்
.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபைக்கு, வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., அணியில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள், நடிகர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என, ஏராளமானோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க.,விலும், ஜெயலலிதா, விஜயகாந்த், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர், சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த அணியிலும், ஏராளமான நடிகர்கள், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், தலைவர்கள் முற்றுகையிட்டு, உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

ஓட்டுப்பதிவுக்கு, இன்னும் எட்டு நாட்களே இருக்கின்றன. 11ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், இரு அணிகளிலும் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தி.மு.க., கூட்டணி பிரசாரத்திற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோரின் வருகை, முதலில் சந்தேகத்திற்கிடமாக இருந்தது.

இந்நிலையில், நிருபர்களை நேற்று சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சோனியா மற்றும் ராகுல் வருகையை, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சென்னை தீவுத்திடலில், இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இது குறித்து, தங்கபாலு கூறியதாவது:செவ்வாய்க்கிழமை (இன்று) பகல் 2 மணிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கிறார். அங்கு, தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிவிட்டு, மாலை 4 மணிக்கு சென்னை திரும்புகிறார்.தீவுத்திடலில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சோனியா கலந்து கொள்கிறார். முதல்வர் கருணாநிதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காதர் மொய்தீன், திருமாவளவன், "பெஸ்ட்' ராமசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இதற்கு முன், 2004, 2009ம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் சோனியா பங்கேற்றுள்ளார். தற்போது மீண்டும் வருகிறார். 6, 7 ஆகிய தேதிகளில் ராகுல், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு, கரூர், விளாத்திகுளம், காரைக்குடி ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். ராகுல் கூட்டத்திலும், கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வர்.இவ்வாறு தங்கபாலு கூறினார்.

அ.தி.மு.க., அணியில், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து பிரசாரம் செய்யாததை, பெரும் குற்றச்சாட்டாக, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோவையில் நாளை நடக்கும் பிரசாரத்தில், ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட பலரும் பங்கேற்க உள்ளனர்.பயணத் திட்டத்தின்படி, விஜயகாந்த், நாளை தஞ்சாவூரில் பிரசாரம் செய்வதாக இருக்கிறது. எனவே, கூட்டணி தலைவர்களுடன், விஜயகாந்த் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. எனினும், கடைசி நேரத்தில், தஞ்சை பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, கோவையில் ஜெயலலிதாவுடன் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக