சனி, 30 ஏப்ரல், 2011

சினிமாவும் தணிக்கையும்

இந்தியாவில் சினிமாவுக்கு சென்சார் உண்டு. அதாவது இந்தியாவில் திரையிடப்படும் ஒவ்வொரு படமும் பொதுமக்கள் பார்ப்பதற்கு உகந்ததுதானா என்று சென்சார் செய்யப்பட்ட பின்னர்தான் பொது இடங்களில் திரையிடப்படுகிறது. சென்சார் என்பதைத் தமிழில் தணிக்கை என்று குறிப்பிடுகிறார்கள்.

 சினிமாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்துக்குத்தான் தணிக்கை என்று இல்லை. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கும் தணிக்கை செய்யப்படாத படத்துக்கும்கூட தணிக்கை உண்டு. கதைப்படங்கள் என்றுதான் இல்லை. விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் என்று எல்லாவற்றுக்கும் தணிக்கை உண்டு.

 சினிமா என்பது கலைப்படைப்பு. கலைக்குத் தணிக்கை என்பது கொடுமையானது. அது சுதந்திரத்தைப் பாதிக்கும். சில நாடுகளில் உள்ளதுபோல சினிமா தயாரிப்பாளர்களின் சுயகட்டுப்பாடே போதும்; தணிக்கை தேவையில்லை என்று சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்கள், அசல் கலைஞர்கள் எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். உச்ச நீதிமன்றம் வரையில் கலைஞர்களின் கோரிக்கை சென்றது.

 சினிமா கலைப்படைப்பு என்பது முழுக்க முழுக்கச் சரியான வாதமல்ல. அது வியாபாரம், கேளிக்கை, பொழுதுபோக்கு என்று பல அம்சங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் சினிமாவில் ஆபாசம், வன்முறை, இனக்கலவரம் ஆகியவற்றைக் காட்சிகள் வழியாகவும், வசனங்கள், இசை வழியாகவும் தூண்டிவிட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சினிமாவுக்குத் தணிக்கை அவசியமாகிறது. ஆனால், கலையைப் பாதிக்காமல் தணிக்கை இருக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது உச்ச நீதிமன்றம்.

 1952-ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் சினிமா தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. அதற்கொரு தலைவரும், அவருக்கு ஆலோசனை வழங்க 23 பேர்கள்கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அதன் தலைமை அலுவலகம் மும்பை. தணிக்கைக்குழு சுதந்திரமானது. அதன் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம்.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பெரும்பாலும் சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களாகவே நியமிக்கப்பட்டார்கள். சிலசமயத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இடம்பிடித்துக் கொண்டார்கள். இந்தியாவில் சினிமா என்பது மும்பை இந்தி சினிமா, கொல்கத்தா வங்காளி சினிமா. எனவே, சினிமா தணிக்கைக்குழுத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி, வங்காளி சினிமா தயாரிப்பாளர்களாகவோ, இயக்குநர்களாகவோ, நடிகர் நடிகைகளாகவோ இருந்தார்கள். அதன் காரணமாக, தணிக்கைக்குழு என்பது பொதுமக்களுக்கு ஆதரவாக இருந்ததென்பதைவிட சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நலம், வசூல் ஆகியவற்றைக் காப்பாற்ற ஒரு கருவியாக இருந்தது. சில சமயத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கலை, கலாசார அபிமானிகள் என்ற பெயரில் தணிக்கைக்குழுத் தலைவரானார்கள்.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவராக, தலைமைப் பதவியைப் பிடிக்கத் தனியாகத் தகுதி எதுவும் தேவையில்லை. ஆனால், சினிமாத்துறையில் இருப்பது கூடுதலான தகுதி. பிராபல்யத்தைக் கொடுக்கிறது. எனவே, சினிமாக்காரர்களில் சிலர் தணிக்கைக்குழுத் தலைவர் பதவியைக் குறிவைத்து அடைகிறார்கள். அதற்குக் காரணம் அதிகமான அளவில் பணம் புழங்கும், பிராபல்யம் கொடுக்கும், கேளிக்கைக் கொண்டாட்டங்கள் கொண்ட சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பதவியில் இருப்பதாகக் காட்டிக்கொள்வதுதான். அதனைப் பொது விதி என்றும் சொல்ல முடியாது.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பதவி சள்ளைபிடித்தது. மோசமான, ஆபாசமான காட்சிகளையெல்லாம் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் கொடுப்பது. அதனால் கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்று சிலர் ஒதுங்கிக் கொள்வதும் உண்டு.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகித் தன் பேச்சால், பதவியைப் பாதியில் விட்டுவிட்டுப் போனவர்களும் உண்டு. பிரபல இயக்குநரும், நடிகருமான விஜய் ஆனந்த் அதற்கோர் எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தவர். சினிமா தெரிந்தவர் என்று பெயரெடுத்தவர். அவர் சினிமா தணிக்கைக்குழுத் தலைவரான சிறிது காலத்துக்குள், ஆபாச சினிமாப் படத்தைத் தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதும் சில தியேட்டர்களைத் தேர்ந்தெடுத்து ஆபாசப் படங்கள் வெளியிட உரிமம் கொடுத்துவிடலாம். அதனால் பொழுதுபோக்குப் படங்களில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறாமல் போய்விடும் என்றார். அவர் பேச்சு பெரும் பிரச்னையைக் கிளப்பிவிட்டது. நாடு முழுவதிலுமிருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனால், விஜய் ஆனந்த் தன் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.

 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகப் பிரபல பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சென்னை, கலாழ்க்ஷத்ரா இயக்குநர். சங்கீத நாடக அகாதெமியின் தலைவர். அதோடுகூட பிரதமரின் கலாசார ஆலோசகர்.

 60 வயதாகும் லீலா சாம்சன் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது சினிமாக்காரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அது தங்களின் உள்வட்டத்துக்கு உரியது என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத ஆளை, அமைச்சர் பிடித்துப்போட்டு விட்டதாகக் கருதுகிறார்கள்.

 சினிமாவோடு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் வெளியாள்கள்தான். வெளியாள்கள் சினிமா பார்க்கவும், பாராட்டுக் கூட்டங்கள் நடத்தவும், பரிசு கொடுக்கவும், விருந்து வைக்கவும் உரியவர்கள். அவர்கள் சினிமா என்ற வட்டத்துக்குள் உள்ளே வரக்கூடாது. அது ஒரு மனோநிலை. அது ஜாதி அபிமானம் போன்றது. ஆனால் எல்லாத் தொழிலிலும் நிலைபெற்று இருக்கிறது. கலையாகவும், தொழிலாகவும் இருக்கும் சினிமாவில் கூடுதலாக இருக்கிறது.

 பொதுப் புத்தி கொண்ட எந்தக் குடிமகனும் சினிமா தணிக்கைக்குழுவிலும், தலைவர் பதவியிலும் இருக்கலாம். சிலர் இருந்து இருந்திருக்கிறார்கள்.

 இந்திய சினிமா எதிர்கொள்ளும் பிரச்னை ஆபாசம். வன்முறைதான். அதனைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியாது. நீக்குப்போக்குடன்தான் தணிக்கை செய்ய வேண்டும். சட்டம், விதியென்பது ஒன்றுதான் என்றாலும் படத்துக்குப் படம் அதன் கதை, அது சொல்லப்படும் விதம், காட்சிகள், வசனம் சார்ந்து மாறுபடும். அதுவே, சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறது.

 மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் சிக்கிக்கொண்ட ஓர் இளம் பெண்ணின் கதை சொல்லும் இந்திப் படத்துக்கு "யு' சான்றிதழ் கொடுத்தார்கள். மாநில அரசு, கேளிக்கை வரியில் இருந்து சலுகை அளித்தது. அதே படம் தமிழில் பிரபலமான சினிமாத் தயாரிப்பு நிறுவனத்தால் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ்ப் படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் பெரிதாகச் சண்டை போட்டார். இந்தியா ஒரே நாடு. ஒரே தணிக்கைக்குழு. ஒரே விதிமுறைதான். அப்படியிருக்கத் தமிழ் சினிமாவுக்கு எப்படி மாற்றிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று கேட்டார்.

 மும்பையில் பெண்கள் சட்டப்படி விபசாரம் செய்ய சிவப்பு விளக்குப் பகுதி இருக்கிறது. சென்னையிலோ, தமிழ்நாட்டிலோ அப்படிப்பட்ட சிவப்பு விளக்குப் பகுதிகள் ஏதுமில்லை. எனவே, விபசாரத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் காட்சிகள், வசனங்கள் கொண்ட படம் வயது வந்தவர்கள் பார்ப்பதற்குத்தான் தகுதியானது. எனவே, "ஏ' சான்றிதழ்தான் கொடுக்க முடியும்.

 நீங்கள் வேண்டுமானால் மேல்முறையீடு செய்து பாருங்கள். அவர்கள் உங்கள் விருப்பப்படிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டது.

 தணிக்கைக்குழுவின் முதல் முடிவுதான் முடிவு என்பது இல்லை. அதற்குமேல், மேல்முறையீடு இருக்கிறது. அதுவும் திருப்தி அளிக்காவிட்டால், மும்பைக்கு முறையீடு செய்யலாம். மத்திய தணிக்கைக்குழுவின் உறுப்பினர்கள் பார்த்துச் சான்றிதழ் கொடுப்பார்கள். அதிலும்,திருப்தியில்லையென்றால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று நீதிமன்றங்களை நோக்கிச் செல்லலாம்.

 சினிமா என்பது எத்தனைதான் கலையென்றாலும் அது பணம் சம்பந்தப்பட்டது. தயாரிப்பாளர் விரைவில் படத்தை வெளியிட்டு லாபம் எடுக்க ஆவலாக இருக்கிறார். சினிமா இயக்குநர், நடித்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று சினிமாவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் படம் விரைவில் திரையிடப்பட்டு பெருவாரியான மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும். அதன் வழியாகப் புதிய வாய்ப்புகள் வரவேண்டும் என்றுதான் இருக்கிறார்கள். எனவே, அதிகமான சிக்கலில் மாட்டிக்கொள்ளும் படத்தைத் திட்டமிட்டு யாரும் எடுக்க முன்வருவது இல்லை.

 2006-ம் ஆண்டில் "டாவின்சி கோடு' என்ற ஹாலிவுட் ஆங்கிலப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்தியாவில் திரையிடத் தணிக்கைக்குழு படத்தைப் பார்த்துவிட்டு அனுமதி கொடுத்தது. ஆனால், சில மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகள் எங்கள் சமய உணர்வுகளை டாவின்சி கோடு புண்படுத்துகிறது. எனவே, படத்தைத் திரையிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதனால் தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், நாகலாந்து, கோவாவில் டாவின்சி கோடு திரையிடப்படவில்லை.

 தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுத்தாலும்கூட, மாநில அரசுகள் படம் திரையிடப்படுவதால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். பொது அமைதி குலைந்துவிடும் என்று கருதினால் அந்தப் படத்தைத் திரையிடாமல் தடைசெய்து விடலாம்.

 இந்திய சினிமா தணிக்கைக்குழு சினிமாக்காரர்கள் தங்கள் ஆள் தலைவராகி அவர் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சினிமாத் துறையோடு சம்பந்தம் இல்லாதவர் தலைவராகி விட்டார். அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாதவரை எப்படித் தலைவராகப் போடலாம் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 சினிமா தயாரிக்க, சினிமாப்படத்தை இயக்க, சினிமாப் படத்துக்குக் கதை, வசனம் எழுத, பாடல் எழுத, இசையமைக்க, நடிக்க முன்அனுபவம் இல்லையென்று யாரையும் தள்ளிவைப்பதில்லை. தணிக்கைக்குழுவின் வேலை நல்ல சினிமாவா, கெட்ட சினிமாவா என்று தரம் பார்ப்பதல்ல. ஒரு படத்துக்கு விருதோ, தண்டனையோ கொடுப்பதும் அல்ல. எவ்வளவு பணச்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது, யார் யார் நடித்திருக்கிறார்கள், யார் இயக்குநர் என்று பார்ப்பதும் அவர்கள் வேலை இல்லை. ஒரு சினிமாப்படம் இந்தியக் குடிமக்கள் பார்க்கத்தக்கதா, ஆபாசம், வன்முறை அதிகமாக இருக்கிறதா, சமய நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கிறதா, இன்னொரு நாட்டை நிந்தனை செய்கிறதா, எந்த வயதினர் படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்வதுடன் முடிந்து விடுகிறது.

 இந்த வேலையைச் செய்ய சினிமாத்துறையில் பல்லாண்டுகள் இருந்து அனுபவம் பெற வேண்டியதில்லை. அது பொது அறிவும், சமூகத்தின் மீது அக்கறையும், நேர்மையும் கொண்ட எந்தவொரு குடிமகனும், குடிமகளும் செய்வார்கள்.

 லீலா சாம்சன் இந்திய சினிமாத் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது பற்றி ஒருவர், சிறந்த நடனக்கலைஞராகிய அவர் அடிக்கடி மட்டமான படங்களைப் பார்த்து கொண்டிருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாரே என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.

 லீலா சாம்சனுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதா, இப்படி ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை

தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக