திங்கள், 11 ஏப்ரல், 2011

சப்பாத்து வாங்கக் காசு இல்லை. ஆனாலும் படிக்க வேணும்

வறுமை எனும் இருளில் அறிவைத்தேடும் கிளிநொச்சி சிறுவர்கள்!

“சப்பாத்து வாங்கக் காசு இல்லை. ஆனாலும் படிக்க வேணும் என்ட தேவை இருக்கிறதுதானே அண்ணா. சண்ட நடக்கேக்கயும் நாங்க பள்ளிக்கூடம் போனோம்” விவேகமும் தைரியமும் நிறைந்த இந்த வசனங்களைக் கேட்டு உண்மையில் ஒரு கணம் உள்ளத்தில் அதிர்ச்சி நிறைந்து மறைந்தது.கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினருடன் கிளிநொச்சி சென்றபோது வழியில் நாம் சந்தித்த மாணவர்கள் கூறிய வசனங்கள் இவை.கோணாவில் கிராமத்துக்குச் செல்லும் வழியில் நாம் இந்த மாணவர்களைச் சந்தித்தோம்.

வரும் வழியில் அன்று படித்த பாடங்களை ஆர்வத்தோடு படித்துக்கொண்டும் சிரித்து விளையாடிக்கொண்டும் சென்ற அவர்களில் சிலருக்கு சப்பாத்து இல்லை. சிலர் பாதணிகள் அணிந்திருந்தார்கள்.வறுமையின் பிடிக்குள் வாழும் சிறுவர்கள் என்பது வெயிலை வெறித்துப்பார்க்கும் பிஞ்சு முகங்களில் தெரிந்தது.
பெயரைச் சொல்வதற்குப் பயந்து அவசரமாய் செல்ல வேண்டும் எனக் காரணம் கூறிக்கொண்டிருந்த சிறுவனை அழைத்துப் பேசினோம்.எதிர்பார்ப்புடன் வாழ்கையில் வறுமை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உணர்வுபூர்வமாக அந்தச் சிறுவன் கூறிய வார்த்தைகளில் வெளிப்பட்டது.
யுத்தத்தின் கோரப்பிடியில் பல வருடங்கள். இடியா, வானவேடிக்கையா, குண்டுமழையா என பிரித்தறிய முடியாத பருவங்களில் தப்பிப் பிழைத்த பொழுதுகள்.
கூடிக்குலாவி தன்னோடு விளையாடிய நண்பர்களில் சிலரை ஊனமாகப் பார்த்த அவலம்…. என அடுத்தடுத்து அடுக்கிச் சென்ற வார்த்தைகளில் கொஞ்சம் கூட சோகம் தெரியவில்லை.
ஒன்றுமறியா பிஞ்;சு உள்ளங்களில் கபடமற்று வார்த்தைகள் வெளிவந்துகொண்டிருந்ததை அவதானித்தோம்.
ஆம்..! கல்வி கற்க வேண்டும். வைத்தியராக, ஆசிரியராக, சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருக்கிறது. அதனை சாத்தியப்படுத்திக் கொள்ளுமளவுக்கு அத்தியாவசியத் தேவைகள் கைகொடுக்கவில்லை என்பதும் புரிந்தது.
அந்தச் சிறுவர்கள் எம்மோடு பேசியதென்னவோ ஒரு சில நிமிடங்கள் தான். ஆனால் எமக்குள் பல்வேறு விடயங்களை விதைத்துவிட்டுச் சென்றதாய் உணர்ந்தோம்.தூரத்தில் சென்று திரும்பிப்பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்து மறைந்துபோனார்கள்.
யுத்தத்தின் பின்னரான மக்களின் தேவைகள் அளவுக்கதிகமானவை தான். ஆயினும் இவ்வாறான சிறுவர்களின் நலனுக்காக சமூக அமைப்புக்களாயினும் தனிநபர்களாயினும் இணைந்து கைகொடுப்பார்களேயானால் நிச்சயமாக அவர்களின் கனவு நனவாகும்.
தொகுப்பு – இராமானுஜம் நிர்ஷன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக