வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடி

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடித் தமிழன் தனது சக
இனத்தவனிடம் காட்டிய சாதிய ஒடுக்கு முறையின் வடிவங்கள்
சாதி அமைப்பு இன்றும் மிக இறுக்கமாக இருக்கும் இலங்கையின் வட பகுதியில் – குறிப்பாக
யாழ்ப்பாண மாவட்டத்தில், சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை மிகக் கடுமையான
சாதி ஒடுக்குமுறைக் கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன.
இன்றைய தமிழ் இளம் சந்ததியினர் அவற்றை அறிந்து கொள்ளுமுகமாக அவற்றில்
முக்கியமான சிலவற்றைத் தருகின்றோம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்ட விடயங்கள்.
1. மேலங்கி அணியக்கூடாது.
2. கணுக்கால் வரைக்குத் துண்டு (வேட்டி) கட்டக்கூடாது.
3. தோளில் துண்டு (சால்வை) போடக்கூடாது.
4. பெண்கள் மேற்சட்டை மற்றும் தாவணி போடக்கூடாது.
5. வீதிகளிலும் பொது இடங்களிலும் கண்டபடி நடமாடக்கூடாது. சிலவற்றில் ஒருபோதும்
நடமாடக்கூடாது. நடமாடக்கூடிய இடங்களில் தமது வருகையை உணர்த்தும் வகையிலும்,
அவர்களது பாதடிகள் பட்ட இடத்தின் “துடக்கை” அழிக்கும் வகையிலும், பனையின்
காவோலையை இழுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் செல்லும் போது
உயர்சமூகத்தவர்கள் யாராவது அவ்வழியால் வந்தால், வீதியோரம் ஒதுங்கி மறுபக்கம்
பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்.
6. உயர் சமூகத்தினர் அமைப்பது போன்ற மாதிரிகளில் குடிசைகள் அமைக்கக்கூடாது.
7. நகை அணியக்கூடாது.
8. திருமணத்தில் தாலி கட்டக்கூடாது.
9. விசேட சடங்குகளின் போது, பந்தல்களுக்கு வெள்ளை கட்டக்கூடாது.
10. உயர்சாதியினரின் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு வைக்கக்கூடாது.
11. இறந்தவர்களின் உடல்களை எரிக்காது புதைக்க வேண்டும். உயர்சமூகத்தினரின்
மயானங்களுக்குள் பிரவேசிக்கக்கூடாது.
12. நன்மை – தீமைக் காரியங்களின் போது வாத்தியங்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது.
13. குடை பிடிக்கக்கூடாது.
14. பாதணிகள் அணியக்கூடாது.
15. கல்வி கற்கக்கூடாது. பின்னைய காலங்களில் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட
பிள்ளைகள் அனுமதிக்கப்பட்ட போதும், இருக்கைகளில் உயர் சமூகத்தினரின்
பிள்ளைகளுடன் சமமாக அமராது, நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டும்.
16. உயர்சாதியினரின் கோவில்களுக்குள் போகவோ, அவர்கள் வணங்கும் தெய்வங்களைத்
தமது கோவில்களில் பிரதிஸ்டை செய்யவோ கூடாது.
17. கோவிலில் தேங்காய் அடிக்கக்கூடாது.
18. தேநீர்க்கடைகளுக்குள் போகக்கூடாது.
19. பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளக்கூடாது.
20. உயர் சமூகத்தினரின் சவர மற்றும் சலவைத் தொழிலாளிகளிடம் சேவை பெறக்கூடாது.
21. சைக்கிள், கார் போன்றவற்றில் பிரயாணம் செய்யவோ அவற்றைச் செலுத்தவோ கூடாது.
22. பஸ் வண்டிகளில் உயர் சமூகத்தினருடன் சமமாக அமராமல் ஒதுக்கமாக நின்று அல்லது
கீழே குந்தி இருந்து கொண்டோதான் பயணிக்க வேண்டும்.
இவை மட்டுமின்றி இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன. வட
பகுதி மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றிலொரு பகுதியினர் ‘பஞ்சமர்’ எனப்படும் தாழ்த்தப்பட்ட
மக்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: வானவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக