திங்கள், 11 ஏப்ரல், 2011

பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு:

சென்னை, ஏப். 10: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழக சட்டப் பேரவைக்கு வரும் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் 4.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.  பிரசாரம் முடிந்த பிறகும், வாகன சோதனைகளும், சந்தேகமான இடங்களில் தீவிர சோதனைகளும் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  கூடுதலாக 4 ஆயிரம் போலீஸôர்: தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீஸôருடன் வெளி மாநிலங்களைச் சேர்ந்த துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தமிழகத்தில் பணியில் உள்ளனர். அவர்களுடன், மேலும் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் திங்கள்கிழமை முதல் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  வெளி ஆள்களுக்குத் தடை: தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு திருமண மண்டபங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்.  வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் யாரேனும் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா? என்பது பற்றியும், விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் எவரேனும் தங்கி உள்ளனரா என்றும் தீவிர சோதனைகள் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தேர்தலில் வாக்களிப்பதற்கு இந்த முறை இரண்டு ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டுகள் ஆவணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி சீட்டுகளை அளிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டன. விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி, தனது திருவாரூர் தொகுதியில் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார்.  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வட சென்னை, மத்திய சென்னையில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வட சென்னை தொகுதியிலும் திங்கள்கிழமை காலை முதல் பிரசாரம் செய்ய உள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் வாக்குச் சேகரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு சென்னையிலும், பாமக நிறுவனர் ராமதாஸ் செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கின்றனர்.  மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதியும் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக