வியாழன், 7 ஏப்ரல், 2011

ஹட்டன், திடீர் தீயினால் பல கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன்


ஹட்டன் பிரதான நகரில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீயினால் பல கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட் டது. ஹோட்டலொன்றில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் மேலாக பற்றி எரிந்தது. இதில் ஹோட்டலும் அடுத்தடுத்ததாக அமைந்திருந்த ஏழு கடைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகின.
கட்டுப்பாட்டை மீறி தீ பரவத்தொடங்கியதையடுத்து வானம் முழுவதும் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டதுடன் சுமார் 100 மீற்றருக்கு அப்பாலும் தீ பரவியது. ஹட்டன் பகுதியில் தீயணைப்பு நிலையமொன்று இல்லாமையினால் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பொது மக்கள் தீயையணைப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்த போதிலும் தீ கட்டுப்பாட்டை மீறி பரவிய தனால் அது பலனளிக்கவில்லை.
தீயினால் தகரங்கள் மற்றும் சுவர்களும் சிதறி வெடித்தன. பிரதான நகரின் ஏனைய கடைகளிலிருந்தவர்களும் அவசர அவசரமாக தமது உடைமைகளை அகற்றிய வண்ணம் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மக்களை அங்கிருந்து அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்புக் கருதி பிரதான நகருக்கு வரும் இரண்டு பாதைகளும் மூடப்பட்டதுடன் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதேவேளை நேற்றுக் காலை முதல் மின் இணைப்பிலுள்ள திருத்த வேலைகள் காரணமாக ஹட்டன் நகரில் முன் அறிவித்தலுடன் அதிகாலை 5 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.விடயமறிந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சம்பவ இடத்தக்கு உடனடியாக விஜயம் செய்தார். தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாதென்பது உறுதியானதன் பின்னர் தீ மேலும் ஏனைய கடைகளுக்கு பரவுவதை தடுக்கும் முகமாக பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு முழுமையாக தீப்பற்றிய ஏழு கடைகளும் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்தும் தீ கட்டுப்பாட்டுக்குள் வராது எரிந்து கொண்டிருந்தது. சுமார் 6.45 அளவில் நுவரெலியாவிலிருந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹட்டன் நகரில் பதற்றம் தணிந்ததையடுத்து அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
ஹோட்டல்கள், புடவைக் கடைகள், நகைக் கடைகள், ஹார்ட்வெயார் கடைகள் உள்ளிட்ட ஏழு கடைகளே இதன் போது எரிந்து சாம்பராகியுள்ளன.தீயினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸார் தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக