வெள்ளி, 8 ஏப்ரல், 2011

துக்ளக்"அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு’ as a brahmin

தமிழகத் தேர்தல் – 2011; ஒரு பார்வை!
- துக்ளக்
tamilnadu election2011தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிற இரண்டு பெரிய கட்சிகளாகிய தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களுடைய கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதில், சில பிரச்சனைகளைச் சந்தித்தன.

காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுமா அல்லது தனியே செல்லுமா என்பது, ஒரு நிலையில் கேள்விக்குரியதாகியது. இதன் காரணமாக, மத்திய அமைச்சரவையிலிருந்தே விலகுவதாக அறிவித்த தி.மு.க. – ‘இனி மத்திய அரசுக்கு வெளியிலிருந்து, பிரச்சனைகளின் அடிப்படையில்தான் ஆதரவு’ என்று அறிவித்த தி.மு.க. – இறுதியில் காங்கிரஸிடம் பணிந்தது. தி.மு.க. மந்திரிகளாகிய அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரிடம் சோனியா காந்தி மிகவும் கடுமையாகப் பேசியபோதும் கூட, தி.மு.க. அடங்கிச் சென்றது.

இதற்குக் காரணம், தேர்தலில் காங்கிரஸ் கட்சியினால் ஏற்படக் கூடிய ஓட்டு லாபம் மட்டுமல்ல – ஸ்பெக்ட்ரம் விசாரணை உரிய வகையில் நடந்து முடிந்தால் பேராபத்து என்பதால், அந்த வேகத்தை தடுப்பதற்காக, காங்கிரஸின் சினேகம் தி.மு.க.விற்குத் தேவைப்பட்டது. அதனால்தான் முதலில் சுயமரியாதை என்று ஒரு சவடால் மிரட்டலை விடுத்த தி.மு.க., பின்பு முழுமையாகச் சரணடைந்தது.

இப்படி, இது ‘சுமுகமாக’ முடிந்தாலும், ஏற்கெனவே காங்கிரஸ்காரர்களுக்கு தி.மு.க. மீது இருந்த கோபம், இதனால் மேலும் அதிகமாகி இருக்கிறது. டெல்லியில் ‘ஆட்சியில் கூட்டாட்சி, ஊழலில் சுயாட்சி’ என்று செயல்பட்ட தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காதது, காங்கிரஸாருக்குக் கோபத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. இது தவிர, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால், தி.மு.க. ‘சம்பாதித்ததில்’ காங்கிரஸுக்கு பங்கு உண்டோ இல்லையோ – தி.மு.க. சம்பாதித்த கெட்ட பெயரில் காங்கிரஸிற்குப் பங்கு நிச்சயம் உண்டு என்ற நிலை, காங்கிரஸாருக்குக் கோபத்தைக் கூட்டியது.

பா.ம.க.விற்கு சீட்களை ஒதுக்கி விட்டு, அதைக் காட்டியே காங்கிரஸிற்கு சீட்டை குறைக்கப் பார்த்த கலைஞரின் மலிவான தந்திரம் (இதை பல பத்திரிகைகளும் ராஜதந்திரம் என்று போற்றினாலும்), காங்கிரஸ் மேலிடத்திற்கு எரிச்சலை ஊட்டியது. விளைவு – காங்கிரஸாரின் கோபம்; கழகத்தின் சரணாகதி; தந்திரத்தின் தோல்வி.

இப்படி காங்கிரஸிற்கும், கழகத்திற்கும் இடையே உள்ள உறவு பெரும் பிரச்சனைகளைக் கண்டுள்ளதால், காங்கிரஸாரின் ஓட்டு, எந்த அளவிற்கு கழக வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும், கழகத்தினரின் ஓட்டு எந்த அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும் நிச்சயமற்ற விஷயங்கள். இந்த உறவு மட்டுமல்ல – விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க.வின் உறவும் இப்படிப்பட்டதுதான்; தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால், அவரவர்கள் ஓட்டு அந்தந்த கட்சிகளுக்குப் போகுமே தவிர, மற்றவர்களுக்கு கிட்டாமல் போகும்.

இது போதாதென்று, அண்ணன் – தம்பி உறவும், சலசலப்புகளை சந்தித்து வந்துள்ளதால், கழகத்தில் அவர்களுடைய பிரிவுகளைச் சார்ந்தவர்களின் பரஸ்பர ஒத்துழைப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.
இப்படி, உறவுகளிடையே உள்ள வேற்றுமைகள், தி.மு.க. கூட்டணியை உடனிருந்தே கொல்லும் நோயாக வாட்டக் கூடிய வாய்ப்புகள் அதிகம். எதிர் பக்கத்தில், அ.தி.மு.க. உள்ளடக்கிய கூட்டணியிலும் பிரச்சனைகள் எழுந்தன. சீட் பிரச்சனை, தொகுதிப் பிரச்சனை போன்ற அந்த பிரச்சனைகள், தி.மு.க. கூட்டணியில் இருந்தது போல், உறவுப் பிரச்சனைகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

வேட்பாளர்கள் தேர்வு முடிந்து, தொகுதிப் பிரச்சனை, தொங்கலில் நின்ற நேரத்தில் அ.தி.மு.க. தரப்பு, தான் போட்டியிடுகிற தொகுதிகளின் பட்டியலை, வேட்பாளர்களின் பெயர்களுடன் வெளியிட்டு விட்டது. யாருமே எதிர்பார்க்காத இந்த நடவடிக்கை, கூட்டணிக் கட்சிகளுக்கு ‘அதிர்ச்சி’யைத் தர, அவை ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதைச் சாக்கிட்டு, ‘அ.தி.மு.க. கூட்டணி முறிந்து, ஒரு மூன்றாவது அணி உருவாகி விட்டது’ என்றே அறிவித்து, இந்த மூன்றாவது அணியின் தலைமையை விஜயகாந்திற்குத் தந்து, பத்திரிகை உலகம் ஒரு வதந்திப் புயலைக் கிளப்பி விட்டது.

ஆனால் விஜயகாந்தோ, கம்யூனிஸ்ட்களோ, மற்ற சில கட்சிகளோ, இந்தப் புயலால் நிலை தடுமாறிவிடவில்லை. மாறாக, அ.தி.மு.க.வுடன் பேசி, அந்தந்தக் கட்சிகள், தனித்தனியே தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இது நடக்காமல் இருக்க, ஆளும் கட்சி எவ்வளவோ முயன்றது. பணம், புரட்டு, உளவுத் துறையின் வித்தைகள்... என்று பல நடவடிக்கைகள் வந்தன. ஆனால், இவை எல்லாம் தோல்வியடைந்து, அ.தி.மு.க. கூட்டணி முழுமை அடைந்தது.

இதற்கு, அடிப்படைக் காரணம் – தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினரிடையே, தொண்டர்கள் மத்தியில் தோன்றி விட்ட கசப்புணர்வு, அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் வெறுத்தனர்; ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியை இரு கட்சித் தொண்டர்களும் முழுமையாக விரும்பினர்.

இதைத் தவிர, அ.தி.மு.க. தலைமை, தன்னுடைய தொகுதிப் பட்டியலை மாற்றி, அதில் பல இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்து, வேட்பாளர் பட்டியலையும் மாற்றி, கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களை மதித்து நடந்து கொண்டது. கூட்டணி அமைய இது பெரிதும் உதவியது.

இதே போல, ‘விஜயகாந்த் மூன்றாவது அணி தலைவர்’ என்று பத்திரிகைகள் உசுப்பி விட்டாலும், ‘தலைமை’ ஆசைக்கு அவர் பலியாகவில்லை. அதுமட்டுமல்ல. அவருக்கு, பெரும் தொகையைத் தர ஆளும் கட்சி சார்பில் சிலர் முன் வந்தனர். ஆளும் கட்சியின் தூதுவர்கள், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பிரிவதாக இருந்தால், கற்பனை செய்யப்பட முடியாத தொகையைத் தர தயாராக இருந்தார்கள்.

இது போதாதென்று, விஜயகாந்திற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே பிளவை ஏற்படுத்த உளவுத் துறை, அதிகார துஷ்பிரயோகம் செய்தது.

இவையெல்லாம் பலிக்காமல் போனதற்குக் காரணம் – விஜயகாந்த் காட்டிய விவேகமே. பண்ருட்டி ராமச்சந்திரனின் அனுபவபூர்வமான ஆலோசனைகளும், இளைஞரணி தலைவர் சுதிஷ் காட்டிய நிதானமும் பெரிதும் உதவ, விஜயகாந்த் சரியான முடிவை எடுத்தார். ஆளும் கட்சியின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் அவர் எடுத்த முடிவு, பாராட்டத்தக்கது.

இது தவிர, அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவும், கூட்டணிக் கட்சிகள் கடைசி நேரத்தில் கோரிய மாற்றங்களைக் கூட ஏற்றார். அது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டியது.

மார்க்ஸிஸ்ட் கட்சியும், புதிய தமிழகமும் தங்கள் பங்கிற்கு, கூட்டணிக்குப் பெரிதும் உதவின. இப்படி கூட்டணியில் பல கட்சிகளின் பங்கும் உதவியது. ஒவ்வொரு கட்சியும், சில விஷயங்களில் விட்டுக் கொடுக்க முன்வந்தது, அ.தி.மு.க. கூட்டணிக்கு பலம் சேர்க்கக் கூடிய விஷயம்.

இடையில் ஏற்பட்ட பிரச்சனை கூட, தொகுதி ஒதுக்கீடு பற்றியதே. தொகுதிகள் பங்கீடு தாமதமாவதால், தேர்தல் பணிகள் எல்லாமே ஸ்தம்பிக்கும் என்பதால்தான், அ.தி.மு.க. தொகுதி அறிவிப்பு வெளியிட்டு விட முனைந்தது – என்பது மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குப் புரிய வந்தது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கிடையாது என்று கலைஞர் அறிவித்து, ஒரு போலி மிரட்டலை விடுத்தபோது – அவருக்கு, அழகிரி முதல் வீரமணி வரை பலர் பாராட்டு தெரிவித்து – ‘இதுதான் சரி’ என்று கொண்டாடினர். அ.தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டபோது, இப்படி எந்தக் கட்சியும் மகிழவில்லை. இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வித்தியாசம். தி.மு.க. கூட்டணி, வெறுப்புற்றவர்களின் ஒப்பந்தம்; அ.தி.மு.க. கூட்டணி, விருப்பமுடையோரின் உறவு.

அடிப்படை விஷயங்களில், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்பதும், கட்சிகளின் தொண்டர்களிடையே ஒற்றுமை உள்ளது என்ற நிலையும், அந்தக் கூட்டணிக்கு உள்ள பலம். இந்த நிலையில், வெவ்வேறு கட்சியினர் பெற்று வருகிற ஓட்டுக்கள் அடிப்படையில் பார்த்தாலும், அ.தி.மு.க. கூட்டணியே, தி.மு.க. கூட்டணியை விட பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது.

இந்த வாய்ப்புடன் தேர்தலைச் சந்திக்கிற அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதற்கு முன்பு தி.மு.க.வும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த இரண்டு அறிக்கைகளையும் பார்ப்போம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிற இரண்டு முக்கிய அணிகளின் தலைமைக் கட்சிகள், வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கைகளில், முன்னணி இடம் இலவசங்களுக்கே அளிக்கப்பட்டிருக்கின்றன.

தங்களுடைய 2006-ஆம் வருட வெற்றி, இலவசங்கள் பற்றிய அறிவிப்பினால்தான் கிட்டியது என்று நம்புகிற தி.மு.க., இம்முறை மேலும் பல இலவசங்களை அறிவித்திருக்கிறது. சென்ற முறை, இலவச டெலிவிஷன்தான் கவர்ச்சி இலவசமாக இருந்தது. இம்முறை அந்த இடம் ‘மிக்ஸி அல்லது கிரைண்டர் இலவசம்’ என்ற அறிவிப்பிற்குக் கிட்டியிருக்கிறது.

கல்லூரி மாணவர்களுக்கு ‘லேப்டாப் இலவசம்’ என்ற அறிவிப்பும் சரி, மேலே சொன்ன மிக்ஸி அல்லது கிரைண்டர் அறிவிப்பும் சரி, உடனே எழுப்பிய கேள்வி ‘சரி; இவற்றை இயக்க மின்சாரத்திற்கு எங்கே போவது? உங்கள் ஆட்சியில் மின்சாரம் கிடைக்காதே? பிறகு இந்த இலவசங்களால் என்ன பயன்?’ என்பதுதான்.

மின் உற்பத்தி பெருக்கப்படும் என்று தி.மு.க. அறிக்கை கூறியிருப்பது, ஒரு கொடூரமான ஜோக்காகத்தான் தெரிகிறது. ஐந்து வருடங்களாக தமிழகத்தை இருளில் தள்ளி, சாதாரண மக்களிலிருந்து விவசாயிகள் உட்பட, தொழிற்சாலைகள் வரை, எல்லோரையும் ஹிம்சித்து விட்டு, இப்போது மின் உற்பத்திப் பெருக்கம் பற்றி தி.மு.க. பேசுவது – அக்கட்சியின் தலைமை, மக்களை அடி முட்டாள்களாகவே கருதுகிறது என்பதைத்தான் காட்டுகிறது.

இப்படி இலவசங்களை இம்முறையும் தி.மு.க. அறிவிக்க, அ.தி.மு.க. நேரடிப் போட்டியில் இறங்கி விட்டது! ‘தி.மு.க. மிக்ஸி அல்லது கிரைண்டர் என்கிறது. நாங்கள் மிக்ஸி, கிரைண்டர், அவற்றோடு ஃபேன் தருகிறோம்’ என்று ஆரம்பித்து விட்டது அ.தி.மு.க.. ‘லேப்டாப் இலவசம்கூட, பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கிடைக்கும்’ என்பதிலும், தி.மு.க.வின் இலவசத்தை அ.தி.மு.க.வின் இலவசம் மிஞ்சுகிறது. இதை எதிர்பார்க்காத தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் வெகுண்டு எழுந்துவிட்டனர்.

‘காப்பி! எங்களைப் பார்த்து காப்பி!’ என்றது தி.மு.க.. அதையே சொன்னார் ப.சிதம்பரம்! (அதிலும் ஒரு காப்பி). ‘இதெல்லாம் செய்யவே முடியாது’ என்றும் தி.மு.க. தலைவர்கள் கூற ஆரம்பித்தனர். ஆத்திரத்தில், ‘காப்பி என்றும் கூறி, செய்ய முடியாது என்றும் கூறினால், நமது அறிவிப்புகளே செய்ய முடியாதவை என்று ஆகுமே’ என்பதைக் கூட அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. ப.சிதம்பரம், வீரமணி போன்றவர்களின் ஆதரவுக் கண்டனங்களுடன் சேர்ந்து, கழகக் கண்டனம் எழுப்புகிற ஓசையைப் பார்த்தால், அ.தி.மு.க.வின் அறிவிப்புகள், தி.மு.க.வை ரொம்பவே மிரளச் செய்து விட்டன என்பது புரிகிறது. இது, அ.தி.மு.க. இலவசங்களின் வெற்றி!

‘காப்பி’ என்ற கண்டனத்தைப் பார்த்தால், ‘கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்பது ஆந்திர அரசைப் பார்த்து, தமிழக அரசு செய்ய முனைந்த காரியம்தானே! அதில் ஒரிஜினல் விஷயம், லஞ்சத்துக்கான வசதி என்பதைத் தவிர வேறு என்ன? அதே போல, ‘அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்’ என்ற மத்திய அரசு திட்டத்தை – பல மாநிலங்களிலும் உள்ள திட்டத்தை – தான் மட்டுமே செய்த திட்டம் போல, தி.மு.க. கூறுவது என்ன ரகத்தைச் சார்ந்தது...?

நம்மைப் பொறுத்தவரை, அரசு, இலவசங்களை வாரி இறைப்பதை நாம் ஏற்கவில்லை. வேலையில்லாதவர்களுக்கு ஒரு அலவன்ஸ் தந்து வந்த சில மேலை நாடுகள் கூட, பின்னர் ‘அது மக்களிடையே சோம்பேறித்தனத்தைத்தான் வளர்க்கிறது’ என்று கூறி, அந்த உதவியைத் திரும்பப் பெறுவதற்கு வழி தேட முனைந்தன. இங்கு கொடுக்கப்படுவதோ, அவசியத் தேவைகள் அல்ல; ‘வசதி’ ரகத்தைச் சார்ந்தவை.

இலவசங்களை அறிவிப்பது என்பது, ஓட்டு வாங்கப் பணம் தருவதுதான். ஆனால், இந்த மாதிரி இலவசங்களை எதிர்பார்க்கிற மனோபாவத்தை மக்களிடையே தி.மு.க. வளர்த்து விட்டது. இப்போது ஒரு கட்சி ‘நாங்கள் இந்த மாதிரி இலவசங்களைத் தர மாட்டோம்’ என்று கூறினால், மக்கள் ‘சரி. நீ தர வேண்டாம்; நாங்களும் உனக்கு ஓட்டு போட மாட்டோம்’ என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது! அந்த அளவிற்கு இலவச போதை மக்களுக்கு ஏறியிருக்கிறது. இது மாற வேண்டும். அதற்கு மாநிலத்தின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் முன்னேற வேண்டும். இதற்காகவே இந்த ஆட்சி மாற வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க.வும் இலவசங்களை அறிவித்து விட்டதால், இப்போது இலவசங்களை வைத்து யாரும் ஓட்டளிக்கப் போவதில்லை. இருதரப்பிலும் இலவசங்கள் உண்டு எனும்போது, அது ‘இர்ரெலவன்ட்’ ஆகிவிட்டது! அ.தி.மு.க. அறிக்கையின் சாதனை இது.

அப்படியே யாராவது சிலர், இரு தரப்பு இலவச அறிவிப்புகளை அலசிப் பார்க்க நினைத்தால் – அவர்கள் மனதில் ஒரு எண்ணம் எழும். ‘இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொல்லி விட்டு, உள்ளங்கை நிலம் என்று மாற்றி, அதையும் தரவில்லை தி.மு.க.; கேஸ் அடுப்பும், இணைப்பும் தருவதாகச் சொல்லிவிட்டு, அதைப் பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை தி.மு.க.. டெலிவிஷனுக்கு கேபிள் தொடர்பு இலவசமாகத் தருவோம் (‘தந்து தொலைக்கிறோம்’ என்றார் முதல்வர்) என்று கூறிவிட்டு, அதையும் கை கழுவியது தி.மு.க. – ஆகையால், தி.மு.க.வின் இலவச அறிவிப்புகளை எப்படி முழுமையாக நம்புவது?

இந்த மாதிரி சந்தேகம், ஜெயலலிதாவைப் பற்றி மக்கள் மனதில் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. தவிர, அ.தி.மு.க. அறிக்கையில், இலவசங்களைத் தவிர, வேறு பல விஷயங்களும் கூறப்பட்டுள்ளன.

விவசாய உற்பத்தியைப் பெருக்க, ஒரு திட்டம்; விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை உயர்த்துவது; சிறு பாசனத்தின் கீழ் 30,000 ஹெக்டேர் நிலத்தைக் கொண்டு வருவது; உணவு பதப்படுத்துவதற்கான மையங்கள்; விவசாயப் பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கத் தேவையான கோடௌன்கள்; இடைத்தரகர்களை நீக்கி, பதுக்கல்காரர்களை ஒடுக்கி விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடு; கரும்பு உற்பத்திப் பெருக்கம்; குடிநீர்த் திட்டம்; மின்சார உற்பத்திக்கான திட்டம்; சூரிய ஒளி மின்சார உற்பத்தி; கைத்தறித் துறை சீரமைப்பு... என்பது போன்ற பல முன்னேற்றத் திட்டங்கள் அ.தி.மு.க. அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

வீராணம் திட்டத்தை நிறைவேற்றியதிலும், மழை நீர் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டதிலும், ஜெயலலிதா காட்டிய முனைப்பையும், உறுதியையும் நினைத்துப் பார்க்கிறபோது, இப்போது அவர் அறிக்கையில் உள்ள திட்டங்கள், வெறும் பேச்சுக்காக இருக்காது என்று கூறலாம்.

அறிவிப்புகள் இருக்கட்டும். சென்ற ஐந்தாண்டுகால தி.மு.க. ஆட்சி பற்றி தீர்ப்பு கூறும் வாய்ப்பு மக்களுக்குக் கிட்டியிருக்கிறது. ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி, இதற்காக இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரலாம் என்று நினைக்க வழி இருக்கிறதா? சுத்தமாகக் கிடையாது.

கழக ஊழல், உலகப் பிரசித்தமாகி விட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில், உள்ளே சென்றது ராசாதான் என்றாலும், அதற்குப் பிறகு இன்னும் யார் யார் சிக்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும். உலகமே கேள்விப்பட்டிராத அளவிற்குப் பெரும் ஊழல். இது டெல்லியில் அமர்ந்து கழகம் செய்த ஊழல் என்றால், மாநிலத்தில் மணல் கொள்ளையிலிருந்து, நிலங்கள் அபகரிப்பு வரை, எல்லாமே அராஜகம்தான். குடும்பத்தினர் பெரும் தனவந்தர்கள் ஆனதும், கழகத்தின் பல மட்டங்களில் உள்ளவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆனதும்தான், ஐந்தாண்டு கழக ஆட்சியின் சாதனை.

மத்திய அரசுடன், கழகத் தலைமைக்கு உள்ள நெருக்கம், குடும்பத்தாருக்குப் பெரிதும் உதவியதே தவிர, மாநிலத்திற்கு ஒரு துளியும் உதவவில்லை. காவிரி ஆனாலும் சரி, பெரியாறு ஆனாலும் சரி, பாலாறு ஆனாலும் சரி – மத்திய அரசிடம் கழகத்திற்கு இருந்த செல்வாக்கு செல்லாக் காசுதான். கலைஞரே கூட டெல்லிக்குப் போய் முகாமிடுவது எல்லாம், தன் குடும்பத்தினருக்காகத்தானே தவிர, மாநிலத்திற்காக அல்ல. இப்படி வெளிப்படையான ஒரு குடும்ப நல ஆட்சி, இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்ததில்லை.

சட்டம் – ஒழுங்கு அடைந்துள்ள சீர்கேடு, பெரும் ஆபத்தான விஷயம். தா.கிருஷ்ணன் கொலை வழக்கிலும் சரி, தினகரன் பத்திரிகை அலுவகத்தை எரித்து மூன்று பேர் கொல்லப்பட்டதிலும் சரி, குற்றவாளிகளே இல்லை எனும்போது, தண்டனை ஏது? சட்டத்தையும், நீதிமன்றத்தையும் பார்த்து, கழகம் சிரிக்கிறது. நாடு, நமது மாநிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறது.

இப்படி முதன்மைக் குடும்பமே, சட்டத்தைக் கேலிக்குரிய விஷயமாக்கி விட்டபோது, சட்டத்திற்கு மற்றவர்கள் என்ன மரியாதை தருவார்கள்? தலைநகரில் நடுத்தெருவில் பெரும் அராஜகம்; ஹோட்டல் தகர்ப்பு; பயங்கரத் தாக்குதல்... இதற்கெல்லாம் வழக்கு எதுவும் கிடையாது! இது நம்ம ஊர் நியாயம்.

சட்டக் கல்லூரியில்,என்றும் இல்லாத வைபவமாக, மாணவர்கள் ஜாதி ரீதியாகப் பிரிந்து, உள்நாட்டுப் போர் நடத்தி, பெரும் வன்முறை நிகழ்த்த, போலீஸார் நின்று வேடிக்கை பார்த்த நிகழ்ச்சி, டெலிவிஷனிலேயே வந்துவிட்டது. சினிமா காட்சிகள் தோற்றன! போலீஸாரின் இந்த பரிதாப நிலை, இம்மாநிலத்தின் சாதனை!

சென்னை ஹைகோர்ட்டில், வக்கீல்களுக்கும் போலீஸாருக்கும் இடையே போர்! இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இந்தப் பெருமை உண்டா? அமைதியை நிலைநாட்ட முயன்ற போலீஸார், அரசினால் கைவிடப்பட்டார்கள் என்பது, இதற்கு முடிவுரை.

இந்த அரசின் நிர்வாக அவலங்களுக்கெல்லாம் சிகரமாக அமைந்தது, மின்வெட்டு. மின்துறை நிர்வாகம், இவ்வளவு சீரழிந்தது – இதற்கு முன் எப்போதும் இல்லாத நிலை. தங்களுக்கு நிர்வாகம் தெரியாது; தெரிந்த அளவு செய்யவும் அக்கறை இல்லை – என்று தி.மு.க. அரசே கொடுத்திருக்கிற ஒப்புதல் வாக்குமூலம் – நம்மை விட்டு விலகாத மின்சார வெட்டு.

குடும்ப நலன் தவிர வேறு அக்கறையில்லாத ஒரு அரசு தொடர்வது, இம்மாநிலத்திற்கு பெரிய நஷ்டத்தில் முடியும். இந்த முறை மீண்டும் இவர்கள் வென்றால், ‘எவ்வளவு தவறு செய்தாலும் சரி; அதை எவ்வளவு வெளிப்படையாகச் செய்தாலும் சரி; மக்களுக்கு ஏதாவது சில பொருட்களைக் கொடுப்பதாகக் கூறி, அதற்கு அச்சாரமாக ஓட்டிற்கு பணமும் கொடுத்தால் போதும் – ஜெயித்து விடலாம்’ என்ற எண்ணம் தி.மு.க.விற்கு மட்டுமல்ல, மற்ற கட்சிகளுக்கும் கூட ஏற்பட்டு விடும்.

அதன் பிறகு தமிழகம் பெரும் வீழ்ச்சியைக் காணும். ஏற்கெனவே தமிழகத்தை பீஹாரை விட, கீழே தள்ளியிருக்கிறது கழக அரசு. அந்த நிலையிலிருந்து மீட்பதற்கு ஆட்சி மாற்றம் தேவை.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில், சென்ற முறை ஆட்சி செய்தபோது, புகார்களுக்கு இடம் இல்லாத வகையில் நிர்வாகம் நடந்தது. அதனால்தான் கலைஞர் எவ்வளவோ முயன்றும், அந்த ஆட்சிக் காலம் பற்றிய வழக்கு எதையும் அவரால் கொண்டு வர முடியவில்லை. நிர்வாகத் திறன், மன உறுதி, தன்னம்பிக்கை போன்ற, ஆட்சியாளர்களுக்குத் தேவையான குணங்களைக் கொண்டவர் என்பதை ஜெயலலிதா நிரூபித்திருக்கிறார். இன்று தி.மு.க. ஆட்சியை மாற்ற, தமிழக மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஜெயலலிதாதான்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு தி.மு.க. பணத்தாசை காட்டியது; பலவித மிரட்டல்களும் விடுக்கப்பட்டன; அப்படியும் கூட, தி.மு.க. அரசை வீழ்த்த முனைவதே தனது கடமை என்று உறுதியாக முடிவெடுத்தார் அவர்; மார்க்ஸிஸ்ட்கள், தங்களுடைய அனுபவபூர்வமான அரசியல் அணுகுமுறையினால் அ.தி.மு.க. கூட்டணிக்கு வலு சேர்க்கின்றனர்; இதைப் போலவே வலது கம்யூனிஸ்ட்களும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கூட்டணியில் முனைப்பைக் காட்டியிருக்கின்றனர். ஆக, தி.மு.க. அரசை வீழ்த்தி, தமிழகத்தில் நல்ல மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதில், முனைப்புடைய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றன.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பதே, விவரம் தெரிந்த வாக்காளரின் முடிவாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். ஒரு குடும்பம் மட்டும் செழிக்கும் என்ற நிலை மாறி, தமிழகம் தழைக்க, ஆட்சி மாற்றம் தேவை.

நன்றி
: துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக