வெள்ளி, 22 ஏப்ரல், 2011

104 தொகுதிகளில் ஆண்களை விட அதிகமாக வாக்களித்த பெண்கள்-மகிழ்ச்சியில் திமுக

தமிழகத்தில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் ஆண்களை விட அதிக பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதனால் தேர்தல் முடிவு தங்களுக்கு சாதமாக இருக்கும் என திமுக நம்பிக் கொண்டுள்ளது.


தமிழகத்தில் இம்முறை வரலாறு காணாத வகையில் 77.8 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து மாவட்டங்களிலும் சராசரி ஓட்டுப்பதிவு 70 சதவீதத்தைத் தாண்டியது.

மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் உள்ள 104 தொகுதிகளில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதில் 43 தொகுதிகள் தென் மாவட்ட தொகுதிகளாகும்.

ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், தர்மபுரி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்ட தொகுதிகளில் தான் அதிக அளவில் ஆண்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த 104 தொகுதிகளில் சராசரியாக ஆண்களை விட பெண்கள் 3,500 பேர் வாக்களித்துள்ளனர். சில தொகுதிகளில் 100 ஓட்டுகள் முதல் அதிகபட்சமாக 12,475 ஓட்டுகள் வரை பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் உள்பட அந்தத் தொகுதியை உள்ளடக்கிய திருவாரூர் மாவட்டம் முழுவதுமே மிக அதிகமான பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தவிர மீதமுள்ள 5 தொகுதிகளிலும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும், வேலூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி தொகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.

25 மாவட்டங்களில் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டிருப்பதன் மூலம், இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தரப்பட்ட சலுகைகள்-உதவிகள், இலவச டிவி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி, கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, கைம்பெண்களுக்கு உதவித் தொகை, குடிசை வீடுகளை மாற்றி காங்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களே பெண்களை அதிகளவில் வாக்களிக்க வைத்துள்ளதாக திமுக கருதுகிறது. இதனால் பெண்கள் அதிமாக ஓட்டு போட்ட தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக திமுக கருதுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இங்கு ஆண்கள் 89,916 பேரும் பெண்கள் 88,951 பேரும் வாக்களித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். பெண்கள் 88,633 பேரும், ஆண்கள் 83,292 பேரும் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக தலைவர் விஜய்காந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் தான் மிக மிக அதிகபட்சமாக பெண்கள் வாக்களித்துள்ளனர். இங்கு ஆண்களை விட 19,000 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
English summary
Women voters outnumbered men in 104 Assembly constituencies across 25 districts in the Wednesday's elections. Forty-three of these constituencies are in the southern districts like Madurai, Virudhunagar, Dindigul, Theni, Ramanathapuram, Sivaganga, Tirunelveli, Tuticorin and Kanyakumari.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக