புதன், 30 மார்ச், 2011

Vaiko:கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை

அதே இருபத்தியொன்று... ஊழ்வினையில் நமக்கு நம்பிக்கையில்லை. அது பகுத்தறிவுக்கு எதிரானது. அதே நேரம் 'எல்லா வினைக்கும், இணையான எதிர்வினை உண்டு' என்கிற அறிவியல் கூற்றை நாம் நம்புகிறோம். இன்றைய மதிமுக பொதுச்செயலாளரும், கலைஞரின் முன்னாள் போர்ப்படைத் தளபதியுமான வைகோவும் இந்த கூற்றினை நம்பியே ஆகவேண்டும்.


2001ல் ஜெ. ஆட்சிக்கு வந்தார். கலைஞரை கைது செய்தார். வைகோவை கைது செய்தார். சுபவீயை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். இன்னும் ஏராளமானோரை தகுந்த காரணம் ஏதுமின்றி, வெறும் காழ்ப்புணர்வு காரணமாகவே கைது செய்தார். வைகோ கைது செய்யப்பட்ட காட்சி இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்புகையில், விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி மாதிரி கைது செய்யப்படுகிறார். போலிஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்ல "ஆணவக்காரியின் ஆட்சி ஒழிக" என்று கோஷமிட்டவாறே கம்பி போட்ட வாகனத்துக்குள் சென்றார்.

அகில இந்தியாவும் அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்க்க கலைஞர் மட்டுமே பதறினார். உடன்பிறப்பு ஆயிற்றே? ஆட்சியிலிருந்த பாஜகவோடு பொடாவில் முரண்பட்டார். திமுகவின் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கர்ஜித்தார்கள். வேலூர் சிறைக்கு நேராக சென்று வைகோவுக்கு ஆறுதலும் சொன்னார் கலைஞர். ஒருவழியாக 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வைகோ உள்ளிட்டவர்கள் வெளியில் வந்தார்கள். உள்ளே இருந்தபோது ஆதரவளித்த கலைஞருக்கு (நெடுமாறன் தவிர்த்து) நன்றியோடும் இருந்தார்கள். வைகோ, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.

இது பழைய கதை.

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்று அவர்களது கட்-அவுட்டுகள் மாநாட்டு முகப்பில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. திமுகவினருக்கு இயல்பாகவே வைகோ மீது பாசம் அதிகம் என்பதால் 'கலைஞரின் போர்வாளுக்கு'தான் வரவேற்பு தொண்டர்கள் மத்தியில் அதிகம். மாலை நடைபெறும் நிகழ்வில் வைகோ பங்கேற்பார் என்று அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மதிமுகவினரும் திரளாக வந்திருந்தனர்.

மாலை வைகோ வரவில்லை. மதிமுகவினர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். மாநாட்டு முகப்பில் திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது படம் ஒட்டிய சுவரொட்டிகளை நகரெங்கும் கிழித்து எறிந்தனர். ஏனெனில் அன்று மதியம் வைகோ, போயஸ் தோட்டம் சென்று அன்பு சகோதரியோடு 35 சீட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தை செய்திருந்தார் வைகோ.

திமுக கூட்டணியை விட்டு அவர் வெளியேற அப்போது சொன்ன காரணம் இருபத்தியொன்று.

ஆம். திமுக இருபத்தியொன்று சீட்டுகள் மட்டுமே தர முன்வந்ததால் அன்புச்சகோதரியோடு தேர்தலை சந்திக்க முடிவெடுத்ததாக சொன்னார் (திமுகவே அப்போது மொத்தமாக 132 சீட்டுகளில்தான் போட்டியிட்டது). இந்த அடாத முடிவினை மதிமுக தொண்டர்களை சுலபமாக ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடிந்தது. ஒரே ஒருவரை மட்டும் அவரால் சமாதானப்படுத்த இயலவில்லை. கலிங்கப்பட்டிக்கே நேராக சென்று அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் வைகோவை ஈன்றெடுத்த அன்னையார். மகனை வெஞ்சிறையில் போட்ட சீமாட்டியுடனேயே, அதே மகன் தேர்தல் களம் காண்பதை அந்த தாயுள்ளத்தால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

இதோ ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.

இப்போதும் காரணம் அதே இருபத்தியொன்று.

அன்று கலைஞர் தருவதாக சொன்ன இருபத்தியொன்றை வைகோ உதாசீனம் செய்தார். இன்று புரட்சித்தலைவியிடம் அதே இருபத்தியொன்றை மட்டுமாவது தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை. கடைசிவரை காக்க வைத்து கழுத்தறுத்திருக்கிறார்.

இப்போதும் வைகோ கலிங்கப்பட்டிக்கு விரைகிறார், அன்னையின் திருமுகத்தை காண. ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு முன்பு அன்னையின் உள்ளத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதற்காகவும் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக