புதன், 30 மார்ச், 2011

பட்டியல் தராததால் காங்.,குக்கு வந்தது சிக்கல்:தேர்தல் களத்தில் தேசிய தலைவர்களை கா‌ணோம்

:அரசியல் கட்சிகளின் சார்பில், பிரசாரம் செய்யும் வி.ஐ.பி.,க்களின் பட்டியல் தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்பட்டு, அவர்களுக்கான, "பாஸ்' பெறப்பட்டுள்ளது. இதில், தேசிய கட்சியான காங்கிரஸ், ஒருவரது பெயரைக் கூட தராததால், அக்கட்சி வேட்பாளர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யவுள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பட்டியலை, தேர்தல் கமிஷனிடம் இம்மாதம் 25ம் தேதிக்குள் அளித்து, அவர்களுக்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற முக்கியஸ்தர்களின் பிரசாரத்துக்கு ஆகும் போக்குவரத்து செலவு போன்றவை, வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலா 40 பேருக்கும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு தலா 20 பேருக்கும் அதிகபட்சமாக, "பாஸ்' வழங்கப்படுகிறது.
இதன்படி, தமிழகத்தில் பிரசாரம் செய்ய, 340 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய கட்சியான காங்கிரஸ் இம்முறை 63 தொகுதிகளில் போட்டியிட்டும், கட்சிக்காக பிரசாரம் செய்ய வரும் வி.ஐ.பி.,க்கள் பட்டியலையே தரவில்லை. இதனால், இந்த சட்டசபை தேர்தலின் போது, சோனியா, ராகுல் போன்றவர்கள் தமிழகத்துக்கு வருவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, தேசிய தலைவர்கள், அக்கட்சியின் மாநில முதல்வர்கள் அனைவரது பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அத்வானி, கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, ராமன் சிங், எடியூரப்பா, சிவராஜ் சிங் சவுகான், வருண், ஹேமமாலினி, குட்டி பத்மினி, வெங்கய்யா நாயுடு, பங்காரு லட்சுமண், ரவிசங்கர் பிரசாத், ராஜிவ் பிரதாப் ரூடி, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார் உட்பட 40 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை பிரகாஷ் கராத், சீத்தாராம் யெச்சூரி, கே.வரதராஜன், மானிக் சர்க்கார், பிருந்தா கராத், டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன், என்.வரதராஜன், நன்மாறன் உட்பட 40 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க., சார்பில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், அழகிரி, தமிழரசு, துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், திரைப்படத் துறையைச் சேர்ந்த பாக்யராஜ், நெப்போலியன், குஷ்பூ, வடிவேலு, வாகை சந்திரசேகர், திண்டுக்கல் லியோனி, ரித்தீஷ் உட்பட 40 பெயரும் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க., சார்பாக ஜெயலலிதா, பன்னீர் செல்வம், பொன்னையன், செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம், செம்மலை, பாலகங்கா, மைத்ரேயன், அன்வர்ராஜா, மனோஜ் பாண்டியன், திரைப்படத் துறையைச் சேர்ந்த டி.கே.கலா, ராதாரவி, செந்தில், சரவணன், குண்டு கல்யாணம், விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, பொன்னம்பலம், ஆர்.வி.உதயகுமார், நெத்தியடி நாயகன், லியாகத் அலி கான், ஜெயசூரியகாந்த், கவிஞர் முத்துலிங்கம் உட்பட40 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
பா.ம.க., சார்பில் ராமதாஸ், அன்புமணி, மணி, மூர்த்தி, வேலு, வேல்முருகன் உட்பட 40 பெயரும் இடம் பெற்றுள்ளன. சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார், ராதிகா உட்பட 20 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த், பிரேமலதா, பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உட்பட 20 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஜனதா கட்சி சார்பில் கூட சுப்பிரமணியசாமி, சந்திரலேகா ஆகிய இருவரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது தவிர, அகில பாரத வள்ளலார் பேரவை, கிறிஸ்தவ முன்னேற்ற கழகம், இந்திய கிறிஸ்தவ முன்னணி, புரட்சி பாரதம், தமிழ் மாநில காயிதே மில்லத் லீக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் கூட பட்டியல் அளித்து அனுமதி பெற்றுள்ளன.ஆனால், ஐந்து மாநிலங்களிலும் தேர்தலைச் சந்திக்கும் காங்கிரஸ், தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக, அனுமதி பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா, ராகுல் தவிர, சிதம்பரம், வாசன் போன்றவர்கள் பிரசாரத்துக்காவது அனுமதி வாங்கியிருக்கலாம். ஆனால், "சீட்' பெறுவதில், இங்குள்ள கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வந்ததால், தேர்தல் கமிஷன் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களின் பிரசார செலவு, வேட்பாளர்கள் தலையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக