செவ்வாய், 29 மார்ச், 2011

கொஞ்சம் அசைகிறது அ.தி.மு.க.,வின் கொங்கு கோட்டை:கோவை மாவட்ட நிலவரம்


கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, 15 தொகுதிகளும், 34 லட்சம் வாக்காளர்களையும் கொண்டிருந்த கோவை மாவட்டத்தில், திருப்பூர் பிரிந்த பின், தற்போது இருப்பது, 10 தொகுதிகள் மட்டுமே. கோவை கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகள், கோவை வடக்கு மற்றும் கிழக்கு தொகுதிகளாக உருமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் பெற்றுள்ளன. பேரூர் தொகுதி மறைந்து, சூலூர், கவுண்டம்பாளையம் தொகுதிகள் புதிதாக உருவாகியுள்ளன.

அ.தி.மு.க.,வின் கோட்டையாக வர்ணிக்கப்படும் கோவையில், இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும்?கோவை தெற்கு: அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடும் வி.ஐ.பி., தொகுதி. அ.தி.மு.க., சார்பில் சேலஞ்சர் துரை களமிறங்கியுள்ளார். நாலரை ஆண்டுகளில், மாநகராட்சி சார்பில் ஏராளமான வேலைகள் நடந்துள்ளன. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, ரோடு விரிவாக்கம், பாலம், பூங்கா என, பல வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. பணபலம், அதிகார பலம், பலமான அறிமுகம் என, பழனிச்சாமிக்கு சாதக அம்சங்கள் அதிகம். இப்போதைக்கு பந்தயத்தில் பழனிச்சாமி முந்துகிறார். கடைசியில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

கோவை வடக்கு: கோவை மாநகர தி.மு.க., செயலர் வீரகோபாலும், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான மலரவனும் மோதும் தொகுதி. கவுன்சிலர் தேர்தலில் தோற்ற வீரகோபால், இந்த முறை எப்படியும் வெற்றிக்கனியை பறிக்க வேண்டுமென, ஓராண்டுக்கு முன்பே, தேர்தல் வேலையைத் துவக்கிவிட்டார். நகரில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள் இவருக்கும் பலம் சேர்க்கும். சிறிய தொழிற்சாலைகள் நிறைந்த நகரப் பகுதியை உள்ளடக்கிய இத்தொகுதியில், மின்தடை ஏற்படுத்தும் பாதிப்பு, ஆளுங்கட்சிக்கு, "ஆப்பு' வைக்கும் வாய்ப்புண்டு. இருவருக்குமே போட்டி கடுமையாக இருந்தாலும், இருவருக்குமே உட்கட்சி எதிரிகளால் ஆபத்து காத்திருக்கிறது.

சிங்காநல்லூர்: ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டை. கடந்த முறை மார்க்சிஸ்ட் தோற்றதால், இம்முறை அ.தி.மு.க.,வே மீண்டும் போட்டியிடுகிறது. தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால், தொழிற்சங்கச் செயலரும், "சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுமான சின்னச்சாமிக்கு, அ.தி.மு.க., தலைமை மீண்டும் வாய்ப்பு தந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக, சிதம்பரத்தின் ஆதரவாளர் மயூரா ஜெயக்குமார் களம் காண்கிறார்.

கடந்த முறை, 14 ஓட்டுகளில் ஜெயித்த சின்னச்சாமி, தொகுதிப் பக்கமே எட்டிப் பார்த்ததில்லை. ஐந்தாண்டு எம்.எல்.ஏ.,வாக இருந்தவருக்கு அறிமுகக் கூட்டம் நடத்தும் நிலை, அ.தி.மு.க.,வினருக்கு. கட்சியிலேயே கடும் அதிருப்தி உள்ளது. தொகுதியில் அதிகமாகவுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது, சின்னச்சாமிக்கு பெரும் பலம். கோஷ்டிகளைச் சமாளித்து கொஞ்சம் போராடினால், ஜெயக்குமார் ஜெயிக்கவும் வாய்ப்புண்டு.

மேட்டுப்பாளையம்: அ.தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ., சின்ராஜ், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார் மோதுகின்றனர். அ.தி.மு.க.,வின் கோட்டையாக வர்ணிக்கப்படும் இத்தொகுதியில், நீலகிரி எம்.பி.,யாக ராஜா வந்த பின், சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அவினாசி - அத்திக்கடவு திட்டத்தைக் கொண்டு வருவதில் அவர் காண்பித்த அக்கறை உள்ளிட்ட பல விஷயங்கள், மக்களை ஈர்த்தன. அவரது, "ஆப்சென்ஸ்' மற்றும் சிறைவாசம், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய பலவீனம்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு அதிக பலன் கிடைக்க வாய்ப்புண்டு. தொகுதியில் பெரும்பான்மையாகவுள்ள இனத்தைச் சேர்ந்தவர் என்பது, சின்ராஜுக்கு கூடுதல் பலம். தே.மு.தி.க.,வும் உடனிருப்பது, மற்றொரு சாதகம். எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தொகுதியில் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்தார் என்பது மட்டுமே அருண்குமாருக்கு இருக்கும் தனிச்சிறப்பு; கட்சி பலம் அதிகமில்லை; தி.மு.க.,வுக்கு சற்று திணறல் தான்.

சூலூர்: புதிய தொகுதி. கொ.மு.க., பொதுச் செயலர் ஈஸ்வரனை எதிர்கொள்கிறார், தே.மு.தி.க., வேட்பாளர் தினகரன். தொகுதியில் நல்ல செல்வாக்கு வைத்துள்ள தளபதி முருகேசனை வேட்பாளராக அறிவிக்காமல், அறிமுகம் இல்லாத இவரை வேட்பாளராக்கியதற்கு, கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவர், எதிர் வேட்பாளரிடம், "விலை போனதே' காரணமென்று ஓர் அதிர்ச்சி குற்றச்சாட்டு உள்ளது.

ஈஸ்வரனுக்கு பணபலம், சமுதாய ஓட்டுகள் பலம் உள்ளது. தி.மு.க., பிரமுகர் பொன்முடியையும் கூடவே வைத்திருக்கிறார். ஆனால், தலித் ஓட்டுகள், இவருக்கு எதிராகத் திரும்புவதைத் தவிர்க்கவே முடியாது. செ.ம.வேலுச்சாமிக்கு தொகுதியைக் கொடுத்து பறித்ததில் அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் களத்தில் இறங்கி, தினகரனுக்குத் தீவிரமாகப் பணியாற்றினால், போட்டி இன்னும் கடுமையாகும். மதில் மேல் பூனையாயிருக்கிறது வெற்றி.-தொடர்ச்சி நாளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக