திங்கள், 21 பிப்ரவரி, 2011

வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி


நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் விழாவுக்கு வாழும் வள்ளுவப் பெருந்தகை வந்திருந்தார். ஆனால் அவர் வாய்திறந்து குறளோவியத்தை அள்ளித் தெளிப்பதற்குள் நான் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். அப்போது தன்னை ‘வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி கடிந்துகொண்டதாகக் கேள்வி.
மிக்க நல்லது.
ஆனால் கலாசார மாற்றம் அப்படியெல்லாம் ஓரிரவில் நடந்துவிடக்கூடியதா என்ன? கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் நடந்திருப்பது என்ன? மேடைகளில் நடப்பது சாதாரணப் புகழ்ச்சியா என்ன? காதுகள் இரண்டும் வலிக்க வலிக்க, கதற்கக் கதற நிகழ்த்தப்படும் வன்புகழ்ச்சி. அப்படி காது குளிரப் புகழ்ந்தால் நமக்கும் நாலு நல்லது நடக்கும் என்று நம்பத்தொடங்கும் காக்கைகள் கா கா என்று கரைவது இயல்பே. இதன் விளைவாக மேடையில் ஏற்றப்படும் நிஜமான அறிஞர்கள்மீது சுமத்தப்படும் அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களும் புகழ்ந்து தள்ளவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயம்.
இதில் சொந்தத் தொலைக்காட்சிகள் செய்யும் ஆபாசம் கொஞ்சநஞ்சமல்ல. கலைஞரின் உடலில் அதிகப் புண்ணியம் செய்திருப்பது இடதுகைக் கட்டைவிரலா, வலதுகால் சுண்டுவிரலா என்று பட்டிமன்றம் நடத்திக் கொஞ்சுவது அதில் தலையாய ஒன்று. இந்தக் கூத்தில் சொந்தக் கட்சிக்காரர்கள் தாண்டி தோழமைக் கட்சிக்காரர்களும் சேர்ந்துகொள்வார்கள்.
சரி போகட்டும். கருணாநிதியே சொல்லிவிட்டாரே, இன்று முதலாவது இந்த வாழும் வள்ளுவமே, காவியமே, கற்பகமே எல்லாம் அடங்கிப்போய்விடும் என்று பார்த்தால் அது எப்படி?
சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் அன்று நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, பொது நூலக இயக்குனர் அறிவொளி, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேயர் சுப்பிரமணியனும் கயல் தினகரனும் கட்சிக்காரர்களுக்கே உரித்த தன்மையோடு கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினர்.
கயல் தினகரன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவலைச் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மதன் எழுதிய ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாராம். மற்றபடி தமிழகத்திலேயே அண்ணாதுரைக்கு அடுத்து கருணாநிதிதான் படிப்பில் சிறந்து விளங்கும் முதல்வராம். (ஆக, முதல் இரு இடங்கள் உறுதியாகிவிட்டன. ராஜாஜி முதல் பிறர் மூன்றாவது இடத்துக்கு வேண்டுமென்றால் போட்டி போட்டுக்கொள்ளலாம்.)
இப்படித் தொடர்ந்த பேச்சைத் தாங்கமுடியாது, நேராக ‘கலைஞர் செய்திகள்’ சானலில் ‘ஒரு மணியில் ஒரு நாள்’ நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் பற்றி உரையாடச் சென்றுவிட்டேன்.
மேயர் சுப்பிரமணியன் சொன்னதில் ஒரு உருப்படியான விஷயம். சொத்து வரிமீது வசூலிக்கப்படும் மீவரி (நூலகத்துக்குச் செல்லவேண்டியது) சுமார் 40 கோடி சென்னை மாநகராட்சி தரவேண்டியது இன்னும் நிலுவையில் உள்ளது என்று அறிவொளி கூறியிருந்தார். அதனை உடனடியாகத் தருவதோடு, இனி ஒவ்வோர் ஆண்டும் இந்த நிலை ஏற்படாது உடனடியாகத் தந்துவிடுவதாக வாக்களித்துள்ளார் மேயர். இதனை குடிமக்களாகிய நாம்தான் கண்காணிக்கவேண்டும்.
*
இன்று இறுதி நாள் ஆனதால், நடைபாதைக் கடைகளைப் பார்வையிட்டேன். இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது. முதலில் ஒரு கடையில் பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களாக அழகாக அடுக்கிவைத்திருந்தார் கடைக்காரர். அவரைப் பார்த்தால் படித்த நபராகத் தெரியவில்லை. குத்துக்காலிட்டு பீடி பிடித்தபடி இருந்தார். ஆனால் அவ்வளவு சரியாக அவர் புத்தகங்களை அடுக்கியிருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது. எப்படி அவருக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்று விசாரித்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.
பைரேட் செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி, அமர்த்தியா சென்னின் தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ், நந்தன் நீலகெனி, நாராயண மூர்த்தி என்று எக்கச்சக்கமான புத்தகங்கள் இப்படி. இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
பிற அனைவரும் பழைய புத்தகங்களை 20 ரூ, 30 ரூ, 50 ரூ என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒருசிலவே மாணிக்கங்கள், மீதம் உபயோகமற்றவை. உட்கார்ந்து தேடினால் மட்டுமே நல்லவை கிடைக்கும். நான் ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டேன். காவ்யாவின் பல புத்தகங்கள் கிடைத்தன. ஒரியண்ட் பிளாக்ஸ்வான் முன்னொரு காலத்தில் போட்ட தமிழ்ப் புத்தகங்கள் சில கருக்கழியாமல் கிட்டத்தட்டப் புதிதாகக் கிடைத்தன.
*
இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறந்த இரண்டு நாள்கள் முதல் வார இறுதிதான். அதாவது 8, 9 ஜனவரி 2011. அந்த நாளில்தான் பெரும்பாலும் அனைத்துக் கடைக்காரர்களும் தங்கள் சிறந்த விற்பனையைப் பார்த்திருப்பார்கள். பொதுவாக இரண்டாவது சனி, ஞாயிறுதான் எல்லாப் புத்தகக் கண்காட்சிகளிலும் சிறப்பானவையாக இருக்கும். இம்முறை பொங்கல் காரணமாக அது தடைப்பட்டுள்ளது என்பதே என் கருத்து.
*
ஒரு முக்கியமான பரிசோதனையை இந்த ஆண்டு பபாஸி செய்து பார்க்கவேண்டும். ஆறு மாதம் கழித்து ஜூன், ஜூலை மாதவாக்கில், நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டரில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும். ஒரேயடியாக ஜனவரி கண்காட்சியை அங்கே எடுத்துக்கொண்டு போகவேண்டியதில்லை. ஆண்டுக்கு இரு புத்தகக் காட்சிகளை சென்னையில் எளிதாகச் செய்யலாம். தென் சென்னை ஆசாமிகள் வருவதற்கு எளிதாக இருக்கும்.
இதனை இம்முறை வலியுறுத்திப் பேசப்போகிறேன். வேறு சிலருக்கும் இதேபோன்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது.
*
ஹரன்பிரசன்னா சொன்னதுபோல, ஒவ்வொரு தினமும் விடாது எழுதுவது, அதுவும் இரவில் நெடுநேரம் விழித்திருந்து செய்வது அசதியாக உள்ளது. ஆனால் எடுத்துக்கொண்டுவிட்டோமே என்றுதான் ஓட்டினேன். படித்திருக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றியிருக்கும். இன்றுடன் நிறைவுபெறுகிறது இந்தத் தொல்லை. இனி, பிற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

1 கருத்து: