புதன், 8 டிசம்பர், 2010

JeganMohan Reddy:காங்கிரசை அழிப்பேன்: ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை என, ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, அக்கட்சியில் இருந்து வெளியேறினார். மேலும் தனது எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் தந்தை இறந்த போது, ஏராளமான கட்சி தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர். அவர்களை சந்திப்பதற்காக ஆறுதல் யாத்திரை துவங்கினேன். இதற்கு கட்சி மேலிடம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும், யாத்திரையின் நோக்கத்தை வலியுறுத்துவதற்காக டில்லி சென்றேன்.

சோனியா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்டேன். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆந்திராவுக்கு திரும்பிய நான், யாத்திரையை தொடர்ந்து நடத்தினேன். இந்த விவகாரத்தில் தான், கட்சி மேலிடத்துக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. தொடர்ந்து என்னை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தன. என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற, நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக, என் குடும்பத்தினரையும் பிரிக்க முயற்சித்தனர். இதனால் நானே கட்சியில் இருந்து வெளியேறி விட்டேன்.என் பலம் என்ன என்பதை நிரூபித்து காட்டுவேன்.

இன்னும் 45 நாட்களுக்குள் புதிய கட்சியை துவங்குவேன். அந்த கட்சி, ஆந்திர மக்களை பெருமைப்படுத்தும் கட்சியாக இருக்கும். ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் என் கட்சி கொடி பறக்கும்.இன்னும் மூன்று ஆண்டுக்குள் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழித்து காட்டுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக