வியாழன், 2 டிசம்பர், 2010

பேசாம டைவர்ஸ் பண்ணிடலாம்னு தோணுது. வழி இல்லைன்னாலும் பொறுத்துக்கலாம்

சந்திரா சீனிவாசன். எம்பிஏ படிப்பு. வசதி படைத்தவர்கள் வசிக்கும் சென்னை அண்ணாநகரில் பிரம்மாண்டமான வீடு. சமையல், வீட்டு வேலைகளுக்கு ஆள்கள். கணவர் மிகப் பெரிய நிறுவனத்தில் வைஸ்பிரசிடெண்ட். இரண்டு புத்திசாலிக் குழந்தைகள்.
குழந்தைகள் பராமரிப்பு, அடிக்கடி கணவரின் அலுவலகத்தில் பார்ட்டி, வெளியூர்ப் பயணம், உடல் நலமின்மை போன்ற காரணங்களால் சந்திராவால் தன் படிப்புக்கு ஏற்ற வேலைக்குச் செல்ல முடிந்ததில்லை. அப்படியும் லைஃப் இன்சூரன்ஸ், கார் இன்சூரன்ஸ் என்று பணம் சம்பாதித்துக்கொண்டுதான் இருந்தார். ஆனாலும் தன் படிப்பு வீணாகிறதே என்று தோன்றும் சமயங்களில் பார்ட் டைம் வேலைக்குக் கிளம்பி விடுவார். அப்படித்தான் எங்கள் அலுவலகத்தில் அவர் வேலைக்குச் சேர்ந்திருந்தார்.
சாதாரண சேலைகளில் அவரைப் பார்த்ததில்லை. ஜரிகை இல்லாத பட்டுப் புடைவைகள் ஏராளமாக வைத்திருக்கிறார். கொஞ்சம் பழைய பட்டுப் புடைவைகள் அலுவலகத்துக்கு. அவருக்கு என்று இருக்கும் தனி காரை ஓட்டிக்கொண்டு எங்கும் செல்வார். மிகவும் தைரியமானவர். சென்னையில் உயர் பொறுப்பில் இருக்கும் முக்கியமான பெண்மணிகளுடன் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது.
ஒருநாள் சற்றுத் தாமதமாக அலுவலகம் வந்தார். வழக்கமான மேக் அப் இல்லை. சிரிப்பு இல்லை. இஸ்திரி போடாத ஓரம் கிழிந்த பட்டுப் புடைவை. யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. நான் கேட்டதற்கும், உடல்நிலை சரியில்லை என்று முகத்தைத் திருப்பாமலே பதில் சொன்னார்.
மாலையில் மீட்டிங்குக்காக மற்றவர்கள் சென்றுவிட, நானும் சந்திராவும் மட்டுமே அறையில் இருந்தோம்.
என்னைப் பார்த்தார்.
‘ஐயோ, என்ன உங்க உதடுல ரத்தம்? இடிச்சுக்கிட்டீங்களா?’
’இல்ல… நேத்து எனக்கும் சீனுவுக்கும் பயங்கர சண்டை… என்னை அடிச்சிட்டார்…’ என்று அழ ஆரம்பித்தார்.
‘என்னது… உங்களை அடிச்சிட்டாரா?’
’நேத்து என் பர்த் டே. என் மாமியார் விஷ் பண்ணினாங்க. என்ன வாங்கினேன்னு கேட்டாங்க. எங்க அம்மா ஒரு பட்டுப் புடைவையும் எங்க அக்கா ஒரு பட்டுப் புடைவையும் வாங்கிக் கொடுத்தாங்கன்னு சொன்னேன். அதை சீனுக்கிட்ட, அவர் ஒண்ணுமே வாங்கித் தரலைன்னு நான் சொன்னதா சொல்லிட்டாங்க. அவர் என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டார். பர்த் டேயும் அதுவுமா தப்பு செய்யாம நான் எதுக்குத் திட்டு வாங்கணும்? நானும் கத்திட்டேன்…’
‘….’
‘அப்புறம் என்ன நினைத்தாரோ, பாலிமரில் லஞ்ச் சாப்பிடலாம்னு கூப்பிட்டார். பிள்ளைகளுக்கு வேலை இருந்ததால, என்னை மட்டும் கிளம்பச் சொன்னாங்க. நானும் டிரஸ் பண்ணிட்டுக் கிளம்புனேன். போற வழியில் மறுபடியும் ஏதேதோ பேசி, மாமியாரில் வந்து நின்னுது. உங்கம்மா நினைச்சதை சாதிச்சிட்டாங்க. என் மூடைக் கெடுத்துட்டாங்கன்னு சொன்னேன்.’
உடனே காரை நிறுத்தி என்னை இறங்கச் சொன்னார். நான் கோபத்தில், ‘கல்யாணமாகி பதினெட்டு வருஷமாச்சு. இன்னும் அம்மா அதைச் சொன்னா… இதைச் சொன்னான்னு சண்டை போடறதுக்கு வெட்கமா இல்லையான்னு கேட்டேன். கார் கதவைத் திறந்து, என்னை வெளியில் இழுத்தார். ஓங்கி அறைஞ்சிட்டார். காரை எடுத்துட்டுப் போயிட்டார்…’
நடுத் தெருவில் அவமானத்தால் குன்றிப்போன சந்திரா, ஆட்டோ பிடித்து, அருகில் இருந்த தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.
’சே! படிச்சு, பெரிய பதவியில் இருந்தும் இப்படி நடந்துக்கிறாரே! நீங்களும் படிச்சிருக்கீங்க. சம்பாத்தியம் இருக்கு. எந்தத் தைரியத்துல இப்படி எல்லாம் நடந்துக்கறார்?’
’நாங்க பரம்பரை பணக்காரங்க. ரொம்ப லேட்டா பிறந்த பொண்ணுன்னு ரொம்பச் செல்லம். எனக்கென்ன இல்லை? எங்க அப்பா கொடுத்த வீடு இருக்கு. மாசம் முப்பதாயிரம் சம்பளம் வருது. என்னால தனியா இருக்க முடியாதா? எந்தத் தைரியத்துல இப்படி நடந்துக்கறார்னு தெரியல… ’
’எப்பவும் இப்படித்தானா?’
‘ஆமாம். ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பார். யாரும் நம்பக்கூட மாட்டாங்க. வெளியில அவ்வளவு நாகரிகமா நடந்துப்பார். அவங்க அம்மாதான் எல்லாத்துக்கும் காரணம். எதையாவது சொல்லி ஏத்திட்டே இருப்பாங்க.’
’அவங்க சொன்னா, இவருக்குப் புத்தி இல்லையா?’
’பேசாம டைவர்ஸ் பண்ணிடலாம்னு தோணுது. வழி இல்லைன்னாலும் பொறுத்துக்கலாம். அவரும் சரின்னு சொல்லிட்டார். சரி, நான் கிளம்பறேன். ரொம்ப டயர்டா இருக்கு… இந்த விஷயத்தை யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க… ப்ளீஸ்…’
எத்தனையோ வெளிநாடுகளுக்கு அவர் அடிக்கடிச் சென்றாலும் ஒருநாளும் தன் மனைவியையோ, குழந்தைகளையோ அழைத்துச் செல்ல மாட்டார். சந்திரா குழந்தைகளுடன் அமெரிக்கா, சிங்கப்பூர் என்று போய்விட்டு வந்திருக்கிறார். அலுவலக பார்ட்டிகளில் குடும்பத்துடன் வர வேண்டும் என்பதால் அங்கு மட்டும் அழைத்துச் செல்வார். மற்றபடி எங்கே போக வேண்டும் என்றாலும் தனியாகத்தான் செல்லவேண்டும் சந்திரா.
வீணை நன்றாக வாசிப்பார் சந்திரா. ஆனாலும் அவர் வீணை வாசிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். இவ்வளவுக்கும் சீனிவாசனுக்கு இசையில் ஆர்வம் இருந்தது. வீணை ஓர் அலங்காரப் பொருளாக மட்டுமே அவர்கள் வீட்டில் இருக்கிறது அவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை சரியில்லை, தண்ணீர் வரவில்லை, குப்பை அள்ளவில்லை போன்ற பிரச்னைகளுக்கு, சந்திரா முதல் ஆளாக இறங்கிப் போராட ஆரம்பித்து விடுவார். அலைந்து, திரிந்து காரியத்தைச் சாதித்து விடுவார். அவர்கள் காலனி அசோஷியேஷன் செகரட்டரியாக இருக்கிறார். இதுபோன்ற சமூக சேவைகளில் மனைவி ஈடுபட்டு, தெருவில் இறங்கிப் போராடுவது சீனிவாசனுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. குழந்தைகளின் மீது அன்போ, அக்கறையோ கிடையாது. சகஜமாகக் கூடப் பேச மாட்டார் அவர்களிடம்.
மூன்று மாதங்களாகச் சந்திரா பிரச்னை இன்றி, அமைதியாக வந்து, போய்க்கொண்டிருந்தார். அல்லது என்னிடம் பிரச்னைகளைச் சொல்லவில்லை.
அன்று தாமதமாக அலுவலகத்துக்கு வந்தார். மேக அப் இல்லா
முகத்தைப் பார்த்ததும் திக் என்றது. சாப்பாட்டு இடைவேளையில் பேச ஆரம்பித்தார்.
’என் ஃபிரெண்ட் வக்கீலா இருக்கா. பார்த்துட்டு வரேன். டைவர்ஸுக்கு அப்ளை பண்ணப் போறேன். எங்க அம்மா, அப்பா, குழந்தைகள் கிட்டேயும் பேசிட்டேன். எல்லாரும் ஓகேன்னு சொல்லிட்டாங்க…’
‘என்ன திடீர்னு?’
’அடிக்கடி சண்டை வர்றதால அப்பலோ ஹாஸ்பிடலில் கவுன்சிலிங் போகலாம்னு முடிவு பண்ணினோம். சண்டை இல்லாம இருந்தா சந்தோஷம்தானே? நானும் போனேன். டாக்டர் அவருடைய நண்பர். சீனு மட்டுமே பேசினார். என்னைப் பத்தி நிறைய கம்ப்ளெயிண்ட்ஸ். அவர் பேசினதை நம்பின டாக்டர், நான் சொல்றதை நம்பலை. எனக்கு மருந்து எழுதிக் கொடுத்தார். நான் முடியாதுன்னேன். பெரிய சண்டை. வழி இல்லாம சாப்பிட்டுட்டு வரேன். அடிக்கடிப் போய் இம்ப்ரூமெண்ட்ஸ் பத்திச் சொல்லணும்…’
‘உங்களுக்கு பெட்டரா இருந்ததா?’
‘பிரச்னை அவருக்குத்தான். ஆனா எனக்குத்தான் ட்ரீட்மெண்ட். ரெண்டு நாளைக்கு முன்னால மாத்திரை தீர்ந்து போச்சு. பேசாம விட்டுட்டேன். நேத்துதான் அவருக்குத் தெரிஞ்சுச்சு. திட்டினார். நானும் கத்தினேன். உடனே, பிள்ளைகளைக் கூப்பிட்டு, உங்க அம்மா ஒரு பைத்தியம்… நான்தான் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டிருக்கேன்னு சொன்னார்… எனக்குக் கோபம் எல்லை மீறிடுச்சு…. பயங்கரமா சண்டை போட்டேன். டைவர்ஸுன்னு சொல்லிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.. யார் தயவும் இனி தேவை இல்ல. அவர் முகத்துல முழிக்கப் போறதில்லை…’
‘என்ன சொல்றதுன்னு தெரியலை…’
‘என்னைப் பைத்தியம்னு சொன்னதுல குழந்தைகள் ரெண்டு பேரும் அப்செட். டாடியை டைவர்ஸ் பண்ணிடு. மீதி வாழ்க்கையாவது நிம்மதியா இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. மீச்சுவல் கன்சண்ட் படி டைவர்ஸ்ன்னு போனால் சீக்கிரம் கேஸ் முடிஞ்சிடுமாம். எனக்கு அவர்கிட்ட இருந்து ஒரு பைசா கூட வேண்டாம். ஆளை விட்டால் போதும்…’
‘உங்க போன் அடிக்குதுன்னு நினைக்கிறேன்…’
’ஐயோ… சீனுகிட்ட இருந்து கால்… எதுக்குப் பண்ணறார்?’
‘யெஸ். ம்ம்… ஓகே. வேர் இஸ் த பார்ட்டி? வினை அண்ட் பூஜா ஆல்சோ?’
‘……..’.
‘வாட் டைம்? 7 ஆ? ஓகே, ஐயம் ரெடி அட் 6.30. ஓகே ஹனி. சீ யு லேட்டர். பை…’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக