சனி, 4 டிசம்பர், 2010

'உயிர்' என்பது இது தான் என்ற அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டன்: உயிரின் அடிப்படை ரசாயனமான பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற தனிமம் கொண்ட புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு உயிர் உருவாக 6 வேதியல் பொருட்கள் கட்டாயம் என்பது தான் இதுவரை உயிரிலார்கள் கூறி வந்த 'விதி'. அந்த 6 பொருட்கள்: கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர்.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் இந்த ரசாயனங்களால் உருவானவை தான்.

இதில் டிஎன்ஏ (deoxyribo nucleic acid-DNA ) எனப்படும் நமது ஜீன்கள் உருவாக பாஸ்பரஸ் மிக மிக அவசியம். இதனால் உயிரின் அடிப்படை வேதிப் பொருள்களில் மிக முக்கியமானதாக பாஸ்பரஸ் கருதப்படுகிறது.

இதனால் பாஸ்பரஸ் இல்லாமல் உயிர் என்பதே இல்லை என்பது தான் இதுவரை கூறப்பட்டு வந்த இயற்கை விதி.

ஆனால், நேற்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா இந்த அடிப்படை விதியையே தகர்க்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதாவது பூமியில் ஒரு புதிய ரக பாக்டீரியாவை நாஸா கண்டுபிடித்துள்ளது. இந்த பாக்டீரியாவின டிஎன்ஏவில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டிஎன்ஏவி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் என்பது விஷத்தன்மை கொண்ட, உயிர்களைக் கொல்லும் திறன் கொண்ட ஒரு தனிமம். ஆனால், அதுவே ஒரு உயிரை உருவாக்கியும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஏரியில் இந்த பாக்டீரியாவை கணடுபிடித்துள்ளார் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வுப் பிரிவு விஞ்ஞானியான பெலிஸா வோல்பே சிமோன்.

இவர் சில ஆண்டுகளுக்கு முனபே, உயிர் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பூமி உருவானபோது நிலவிய சூழல், இருந்த விஷ வாயுக்கள் சூழ்ந்த வளிமண்டலம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, பாஸ்பரசின் ரசாயன குணங்களைக் கொண்ட ஆர்சனிக் போன்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கூட உயிர்களை உருவாக்கியிருக்கலாம். அந்த வகை உயிர்கள் இன்னும் கூட எங்காவது இருக்கலாம் கூறியிருந்தார்.

அப்போது இவரது இந்தக் கருத்தை ஆச்சரியத்துடன் பார்த்த நாஸா, அது குறித்து மேலும் விரிவான ஆய்வு நடத்த இவருக்கு நிதியுதவி வழங்கியது.

இதையடுத்து சிமோனின் விஞ்ஞானிகள் டீம் இந்த மாற்றுவகை உயிர் குறித்த ஆய்வுகளைத் தொடங்கினர்.

அவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த ஆர்சனிக் ஆராய்ச்சியாளராகக் கருதப்படும் ரோனால்ட் ஓரேம்லாண்ட் பெரும் உதவிகள் செய்தார். இவர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த ஆராச்சியாளர் ஆவார். உலகின் ஆர்சனிக் நிறைந்த பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சிமோனின் குழுவினரை வழிநடத்தினார்.

அவர் சொன்ன இடங்களில் ஒன்று தான் கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஆர்சனிக் நிறைந்த விஷ ஏரி. அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு GFAJ-1 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் 'உயிர்' என்பது இது தான் என்ற அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக