தமிழ் அறிஞர்களை உருவாக்கிய வித்தகர்
(லெனின் மதிவானம்)
பேராசிரியர் கைலாசபதியின் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வு இதுவரை முழுமை யாக மேற்கொள்ளப்படவில்லை. ஆதலால் அவரது நினைவுதினத்தில் அதுபற்றிய ஆய்வினை முன்வைப்பது சாலப் பொருந்தும் எனக் கருதுகிறேன். கைலாசபதியின் பல்கலைக்கழகம் சார்ந்த வாழ்க்கையை பங்களிப்பினை நான்கு கட்டங்களில் ஆய்வாளர்கள் வகுத்துக் காட்டுவர்.
1. மாணவராக இருந்த காலப் பகுதி
2. விரிவுரையாளராக, பேராசிரியராக இருந்த காலப் பகுதி
3. யாழ். பல்கலைக்கழகத் தோற்றத்தில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவராக இருந்த காலப் பகுதி
4. யாழ். வளாகத்தின் முதல் தலைவராக, கலைப் பீடாதிபதியாக இருந்த காலப்பகுதி.
மாணவராக இருந்த காலப் பகுதி
கைலாசபதி இந்துக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே எழுத்து துறையில் ஆர்வம் காட்டியிருந்தார் என்பதை அறிவோம். அத்தகைய ஆர்வம் ஒழுங்கமைக் கப்பட்டதாக வளர்ச்சியடைந்தது அவரது பல்கலைக்கழகக் காலப் பகுதியில்தான். இக்காலப் பகுதயில் கைலாசபதி திறனாய்வு நாடகம் முதலிய துறைகளில் ஆர்வம் காட்டியிருந்தார்.
கைலாசபதியின் ஆளுமை வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பினைச் செய்தவர்கள் பேராசிரியர்கள் சு. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன் ஆகியோராவர். பின்னாட்களில் தமிழ் இலக்கியத்தில் முக்கிய கணிப்புக்குரிய விமர்சகர்களாக விளங்கிய க. கைலாசபதியும் கா. சிவத் தம்பியும் பேராசிரியர் வித்தியானந்தனரிடம் கற்ற போது பல்கலைக்கழக செயற்பாடு களுக்கு அப்பால் கலை, இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அந்நாட் களில் நாடகங்களை தயாரிக்கின்ற பணி களிலும் அதற்காக விளம்பரங்களை ஒட்டுகின்ற பணிகளிலும் இரவோடு இரவாக ஈடுபடுவர்.
மறுநாட் காலையில் ஏனைய சக மாணவர்களுக்கு முன் உரிய நேரத்திற்கு விரிவுரைகளுக்கு சமுகமளிக்கின்ற பண்புகள் இவர்களிடம் காணப்பட்டதைப் பேராசிரியர் வித்தியானந்தன் குறிப்பிடு கின்றார். பின்னாட்களில் தமிழில் தலை சிறந்த விமர்சகர்களாக வளர்வதற்குரிய பயிற்சிக் களமாக பல்கலைக்கழக வாழ்க் கையை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார் கள் என்பதை இவ்வாறான நிகழ்வுகளி னூடாக அறியக் கூடியதாக உள்ளது.
கைலாசபதி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்து தமிழை சிறப்பு பாடமாக கற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையால் இயற்றப்பட்டு பேராசிரியர் சு. வித்தியானந்த னால் நெறியாள்கை செய்யப்பட்ட ‘தவறான எண்ணம்’, சுந்தரம் எங்கே? முதலிய நாடகங்களில் கைலாசபதியும், சிவத்தம்பியும் நடித்துள்ளனர்.
மேலும் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலை விழாக்கள், இலக்கிய மன்ற கூட்டங்கள், ஆய்வரங்குகள் என்பனவற்றிலும் தமது காத்திரமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.
விரிவுரையாளராக பேராசிரியராக இருந்த காலப் பகுதி
பல்கலைக்கழக வரலாற்றில் கைலாசபதி விரிவுரையாளராக பேராசிரியராக கடமை யாற்றிய காலம் ஒரு திருப்பு முனையாகவே அமைந்திருந்தது. கைலாசபதி எந்தவொரு விடயப் பரப்பினையும் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பரந்துபட்ட விஞ்ஞான கண்ணோட்டத்தில் விரிவுரையாற் றுவார் என்பதையும் பின்னர் அது தொடர்பாக அவரால் விதந்துரைக்கப்படுகின்ற நூல்களையும் தேடி வாசிக்கின்ற போது அவ்விடயம் தொடர்பான பரந்த அறிவை பெறக்கூடியதாக இருக்கும் என்று கூறுவர்.
தமது விரிவுரைகளை நடத்துகின்ற போது பரந்துபட்ட கருத்தாடலுக்கு கைலாசபதி எவ்வாறு களம் அமைத்துக் கொடுத்தார் என்பதனையும் அவரது பல்கலைக்கழக மாணவர்களாகிய எம். ஏ. எம். சுக்ரி, மனோன்மணி சண்முகதாஸ், க. நாகேஸ்வரன் ஆகியோர் எடுத்துக் காட்டுகின்றனர்.
அந்தவகையில் பேராசிரியரின் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய, சித்திரலேகா மெளனகுரு, சி. மெளனகுரு, செ. யோகராசா, மனோன்மணி சண்முதாஸ், போன்றோர்களுடன் பேரா சிரியரின் நேரடி மாணவராக இல்லாத போதிலும் பல்கலைக்கழகத்தில் வேறு துறையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த எம்.ஏ. நுஃமான், செ. யோகநாதன், என். சண்முகரத்தினம் முதலானோரின் எழுத்துக்களிலும் கைலாசபதியின் செல்வாக்கை காணக்கூடியதாக இருந்தது.
எண்பதுகளுக்குப் பின் இவர்களில் சிலர் தமது பாதையிலிருந்து விலகிச் சென்றுள்ள தையும் அவதானிக்கலாம். பின்னாட்களில் இவர்களது எழுத்துக்களில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற போக்கினைக் காண முடிந்தது. கலை இலக்கியத்தில் உள்ளடக்கம் உருவகம் என்பனவற்றை இரு துருவங்களாக நோக்கியதன் விளைவாக இத்தகைய சிதைவுகள் ஏற்பட்டன. சிலர் இன்றும் அழகியல் வாதத்திற்குள் நின்று மீண்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இவ்விடயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், கைலாசபதி யின் காலத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களே பின்னாட்களில் தமிழியல் துறையில் ஆற்றல் வாய்ந்த விமர்சகர்களாக வளர்ந்தனர். இவர்களின் பங்களிப்பு தமிழியல் துறையின் வளர்ச்சியினை ஆழ அகலப்படுத்தியுள்ளது. இவ்வாறே இக்காலச் சூழலில் பல்கலைக்கழகத்திற்குள் மாத்திர மன்றி பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் பலரை வளர்தெடுப்பதிலும் கைலாசபதி முக்கிய கவனம் எடுத்திருந்தார்.
அந்தவகை யில் இன்று கைலாசபதி சுமுந்து வந்த, மக்கள் இலக்கியம் சார்ந்த பதாகையை முன்னெடுத்து வருகின்ற கலாநிதி ந. இரவீந்திரனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவரது பாரதி குறித்த ஆய்வில் குறிப்பாக பாரதியின் ஆன்மீக பார்வையும் புரட்சிகரச் சிந்தனையும் இணைந்து எவ்வாறு இந்திய தேசிய போராட்டத்திற்கு
முக்கியமானது. இன்று கைலாசபதி விட்டுச் சென்ற ஆய்வின் தொடர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் ந. இரவீந்திரனுக்கு முக்கிய இடமுண்டு என்பதை இலங்கை இந்திய விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவர்.
மேலும் பல்கலைக்கழகச் செயற்பாடுகளி னுள்ளே பல்வேறு சமூகக் குழுக்களை உருவாக்குகின்ற பணிகளிலும் அவர்களை அமைப்பாக்கம் செய்கின்ற பணிகளிலும் கைலாசபதி ஆர்வம் காட்டியிருந்தார். அறுபது களில் அப்போது பல்கலைக்கழக மட்டத் திலே இயங்கி வந்த சோசலிச சங்கத்தின் மாணவர்களை சந்திப்பதிலும் முக்கிய கவனம் எடுத்தார்.
சமூக ஈடுபாடு கொண்டுள்ள பலரை கைலாசபதி அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி செயற்படத் தொடங்கினார். மாதாந்த ஒன்றுகூடல் மக்கள் மத்தியில் செயற்படுவது தொடர்பான விவாதங்களிலும் கைலாசபதி கலந்துகொண்டதாக ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டுவர். அந்த வகையில் ஒரு காலகட்டத்தின் சகாப்தமாக, மானுட ஆவணமாக கைலாசபதி திகழ்ந்துள்ளதை அவரது மாணவர்கள் தனது நினைவுக் குறிப்புகளினூடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத் தோற்றத்தில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவராக இருந்த காலப் பகுதி.
கைலாசபதியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக யாழ். பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் ஆற்றிய பணியினையும் அவ்வளாகத்தின் முதல் வளாகத் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்தில் அப்பல்கலைக் கழகத்தின் இலக்குகளை அடைவதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் எத்தனிப்புகளையும் சுட்டிக்காட்ட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
1960 களில் நாட்டில் சமூக பொருளாதார, அரசியல் துறைகளில் ஏற்பட்ட விழிப்பின் காரணமாக கல்வித் துறையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அன்று ‘திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங் கத்தில் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் கல்வி அமைச்சராயிருந்த பொழுது அங்கு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணக்கரு அவரது உள்ளத்தில் உதயமாயிற்று. தமிழ் மக்களும் இந்த எண்ணத்தை அவ்வப்போது வெளியிட்டனர்.
1963 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டு மென்ற ஆலோசனையை அமைச்சரவையில் கொண்டுவந்து அதன் அங்கீகாரத்தைப் பெற்றார். பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அடையாள மானியமாக ஒரு தொகைப் பணம் ஒதுக்குவதற்கு அவருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் அதற்கு அடுத்த வருடம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதால் அம்முயற்சி அத்துடன் நின்றிருந்தது.’ (இளங்கீரன் சுபைர் (1992), பேராசிரியர் கைலாசபதி நினைவு களும் கருத்துக்களும், சென்னை. ப. 80)
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு பல விடயங்கள் விவாதப் பொருளாக்கப்பட்டு யாழ். பல்கலைக்கழக வளாகம் அமைக்கும் முயற்சி கைவிடப் பட்டது. ஆயினும் 1970ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இலங்கை இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கம் அமைத்த பின்னர் யாழ். வளாகம் அமையலாயிற்று.
இவ்வளாகம் அமைவது தொடர்பில் பலர் பல தளங்களில் இருந்து கட்டுரைகள் எழுதினார்கள். அதன் பின்னணியிலேயே தமது செயற்பாடுகளை யும் முன்னெடுத்தனர்.
யாழ். வளாகத்தின் முதல் தலைவராக கலைப்பீடாதிபதியாக இருந்த காலப் பகுதி
யாழ். பல்கலைக்கழகம் தொடர்பான முற்போக்கான சிந்தனையை கொண்டிருந்த கைலாசபதிக்கு அப்போது யார் வளாகத் தலைவராக வருவார் என்ற விடயம் தெரியாதிருந்ததாகவே அவர் அப்பதவியினை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றிய சுபைர் இளங்கீரன் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் ஆகியோர் நினைவுக் கூருவர்.
யாழ். வளாகம் நிறுவுவதற்கான திகதி குறிக்கப்பெற்று அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்ட சூழலில் தான் வளாகத் தலைவர் பதவிக்காக சுழியோடு கின்ற முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. அத்தகையவர்கள் சுயநலம் மிக்கவர்களாகவும் தமது உணர்வாலோ அறிவாலோ பிற் போக்கான குணாதிசயங்களை கொண்டவர் களாக காணப்பட்டனர்.
இதன் காரணமாக முற்போக்காளர்கள் இம்முயற்சியினைக் கண்டு அச்சம் கொண்டனர். புதிய வளாகம் பற்றி சிந்திக்கையில் கல்வித் தகைமை, முற்போக்கான சமுதாயப் பார்வை, நிதானம், ஆற்றல் என்பன கைலாசபதியிடமே இருந்தது. கைலாசபதியை அப்பதவிக்கு கொண்டு வருவதிலே முற்போக்கானவர்கள் முயற்சித்து அதில் வெற்றியும் கண்டனர்.
கைலாசபதி தமது ஆசிரியரான பேராசிரியர் சு. வித்தியானந்தனுக்கு எதிராக பதவிப் போட்டியிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வந்ததைக் காணலாம். மேலோட்டமாகப் பார்க்கின்ற போது இக் குற்றச்சாட்டுகள் அர்த்தமுள்ளதாக தோன்றலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னணியிலே அரசியல், சமூகம் சார்ந்த விடயங்கள் மறைந்திருப்பதை அவதானிக்கலாம்.
கைலாசபதி பேராசிரியர் வித்தியானந்தனின் மாணவராக இருந்ததுடன் அவரை விட எட்டு வயது இளையவராக காணப்பட்டார். அவர் இறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே கைலாசபதி இறந்துவிட்டார் என்ற போதிலும் இவ்விரு பேராசிரியர்களும் ஒரே காலத்தவர்களே. இன்றைய சூழலில் இவ்விரு பேராசிரியர்களும் ஒப்பியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள். அத்தகைய ஆய்வுகள் பயனுள்ளதாய் அமைவதோடு சுவை பயப்பதாயும் அமையும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. ஆயினும் அத்தகைய முயற்சி இங்கு மேற்கொள்ளப்படவில்லை.
கைலாசபதி, பல்கலைக்கழக நிர்வாகப் பொறுப்பினை ஏற்ற பின்னர் இன, மொழி, மத, சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று தமக்கு கீழ் தொழிற்பட்ட வர்களையும், மாணவர்களையும் நோக்கி யுள்ளார். இவரது காலத்தில் தான் யாழ். வளாகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கல்வி கற்றுள்ளனர்.
‘அப்போது அவரின் கீழ் சிங்கள பேராசிரியர்களும், விரிவுரையாளர் களும், பணிபுரிந்ததுடன் ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்கள் கற்கை நெறிகளைத் தொடர்ந்துள்ளனர். இக்காலங்களில் அவர் பாகுபாடாக எந்தவொரு விரிவுரை யாளரையோ பேராசிரியரையோ மாணவரையோ நடத்தியதாக இல்லை என்பதை அறிய முடிகின்றது.
இன்னொரு வகையில், கைலாசபதியிடம் சிறந்த நிர்வாகிக்குரிய திறமையும் இருந்தது. பிரச்சினைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதனை பல கோணங்களி லிருந்தும் ஆராய்ந்து அதற்கான தீர்மானத்தை எடுக்கின்ற பண்பு அவரிடம் நிறையவே இருந்துள்ளதை பலர் சுட்டிக்காட்டுவர்.
அவர் நிர்வாக துறைசார்ந்த விடயங்களை வெறும் கோட்பாட்டு அடிப்படையில் மத்திரம் நோக்காது அதனை யதார்த்த சூழலுக்கேற்ற வகையில் பொருத்தி பார்த்து பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டுள்ள சந்தர்ப் பங்களை அப்போது யாழ். பல்கலைக்கழ கத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த எம்.வை. சித்தீக் கட்டுரையொன்றில் விபரித்துள்ளார்.
இவ்வாறாக நோக்குகின்ற போது, கைலாசபதி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக பேராசிரியராக இருந்த காலப் பகுதியில் தான் அவரது ஆய்வுப் பணிக ளும் முன்னெடுக்கப்பட்டன. அவரிடம் காணப்பட்ட சிறப்பு பண்பு யாதெனில் பல்கலைக்கழகப் பணியினை ஏனோ தானோ என்ற நிலையில் அலட்சியப்படுத்தி வெறுமனே வருமானத்தை பெறும் இடமாக கருதவில்லை. அதேசமயம், தமது பதவியைப் புனிதப்படுத்தி பதவி மோகன் கொண்ட சராசரி மனிதராகவும் அவர் இருக்கவில்லை என்பது கண்கூடு.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு