வியாழன், 2 டிசம்பர், 2010

சவுண்ட் எபெக்ஸ்ட்ஸ் என்று சொல்லக்கூடிய சிறப்பு ஒலிகள் குறித்து இனி பார்ப்போம்

அத்தியாயம் 8

சவுண்ட் எபெக்ஸ்ட்ஸ் என்று சொல்லக்கூடிய சிறப்பு ஒலிகள் குறித்து இனி பார்ப்போம். கதாபாத்திரங்களின் காலடி ஓசை, கதாநாயகியின் தலைமுடி அசைந்தால் கூட அங்கே காற்றின் ஓசையை பதிவு செய்வது. இரவு காட்சி என்றால் பூச்சிகளின் ரீங்காரம் போன்ற நுட்பமான ஒலிகளை அமைப்பது. இதற்கென்றே தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு சத்தத்தையும் வாயாலேயே கொடுக்கிற ஜித்தன்கள் கூட இருக்கிறார்கள் இங்கே. ஆனால் இவற்றை நேரடியாக பதிவு செய்து பயன்படுத்துவதுதான் சிறந்த முறை.
கடந்த பல ஆண்டுகளாகவே சண்டைக்காட்சிகள் என்றால் ஒரே மாதிரி ஒலியைதான் பயன்படுத்தி வந்தார்கள் தமிழ்சினிமாவில். பிதாமகன் படத்தில்தான் அதை மாற்றினார் பாலா. அப்படியிருந்தும் பழைய வலியும் ஒலியும்தான் தொடர்கிறது பல படங்களில். சரி. பாலா என்ன செய்தார் பிதாமகனில்?
விக்ரமுக்கும் வில்லனுக்கும் சண்டை வரும்போது விக்ரம் விடுகிற ஒவ்வொரு குத்தும் அதன் சப்தமும் ரொம்ப இயல்பாக இருக்கும். ஒருவனின் தோளில் குத்தினால் என்ன சப்தம் எழுமோ, அதைதான் அமைத்திருந்தார் பாலா. இதற்காக மாட்டு மாமிசத்தை கொண்டு வந்து போட்டு அதன் மீது கைகளால் குத்தி சப்தம் வரவழைக்கப்பட்டது. அப்போது ரெக்கார்டிங் செய்யப்பட்ட ஒலியைதான் பிதாமகன் சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தியிருந்தார் பாலா. ஸ்டன்ட் சிவாவின் அடியும், இந்த யதார்த்தமான ஒலியும் படத்தின் சண்டைக்காட்சிக்கு ஒரு நம்பக தன்மையை உருவாக்கியதை யாவரும் அறிந்திருப்போம்.
இத்தகைய சிறப்பு சப்தங்களை பதிவு செய்யும்போது சில இடங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவார்கள். இந்த இடத்திற்கு பொருத்தமாக லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் செய்தபின் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசித்திருக்கலாம். அந்த காட்சிகளை குறித்துக்கொள்வது உதவி இயக்குனர்களின் பணி.
இந்த சிறப்பு சப்தங்களை பதிவு செய்ததும் ஒரு முறை இயக்குனர் பார்ப்பார். அப்போது அவருடன் அமர்கிற உதவி இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் டிக் செய்து கொள்ள வேண்டும். எந்த காட்சியிலாவது அவர் மாற்றங்களோ, கருத்துக்களோ சொன்னால் அதையும் குறித்து வைத்துக் கொண்டு பின்பு சரி செய்வதும் உதவி இயக்குனர்களின் வேலை.
பின்பு டப்பிங் என்று சொல்லப்படும் குரல் பதிவு. எடுத்தவுடன் அப்படத்தின் கதாநாயகியையோ, கதாநாயகனையோ அழைத்து குரல் பதிவு செய்வது அவ்வளவு சரியல்ல. முதலில் க்ரவுட் வாய்ஸ் என்று சொல்லப்படும் பல குரல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கூட்டம் கூடும் இடங்கள், பத்து இருபது பேர் இருக்கிற பிரேம்கள் இவற்றை தேர்வு செய்து அந்த பகுதிகளை முடித்துக் கொள்ள வேண்டும். பின்பு சப் கேரக்டர்களின் வாய்ஸ். இதில் அக்கா, பெரியப்பா, சித்தப்பா, ஒண்ணுவிட்ட அண்ணன், ஓரமாக நடந்து போகிறவர் எல்லாரும் வந்துவிடுவார்கள். இதையெல்லாம் முடித்த பின்தான் கதாநாயகி வருவார்.
பெரும்பாலும் தமிழ்சினிமா கதாநாயகிகள் சொந்த குரலில் பேசுவதில்லை. அப்படி பேசக்கூடிய ஒன்றிரண்டு கதாநாயகிகள் வந்தாலும், விரைவில் பேசிவிட்டு செல்லதான் விரும்புவார்கள். எனவே அவர்கள் தொடர்பான காட்சிகள் எதுவும் விடுபட்டு விடாத வண்ணம் கண் கொத்தி பாம்பாக கவனித்து அனுப்ப வேண்டியது உதவி இயக்குனர்களின் தலையாய பணி. இது போன்ற டப்பிங் பணிகளுக்கு இணை, துணை இயக்குனர்கள் மட்டும்தான் வருவார்கள் என்பதால் துல்லியத்தின் அளவு கவனமாக கையாளப்படும்.
மொழி தெரியாத கதாநாயகிகள்தான் இங்கு அதிகம் என்பதால் அவர்களின் குரலில் டப்பிங் பேசுவதற்கென்றே விசேஷமான டப்பிங் கலைஞிகள் இருக்கிறார்கள். இதில் விசேஷமானவர் சவீதா. ஜோதிகா, தமன்னா, நயன்தாரா, மீராஜாஸ்மின் போன்ற பலருக்கும் இவர்தான் குரல் கொடுப்பார். ஆச்சர்யம் என்னவென்றால் அத்தனை பேர் குரலையும் விதவிதமாக இவர் மிமிக்ரி செய்வதுதான்.
சில ஹீரோக்கள் வந்தால் இங்கு டப்பிங் இன்சார்ஜ் ஆக இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு கொண்டாட்டம்தான். முழு நீள படத்திற்கும் இரண்டே நாட்களில் பரபரவென்று டப்பிங் பேசிவிட்டு சென்று விடுவார்கள். போகும்போது லம்ப்பாக ஒரு தொகையை அன்பளிப்பாக கொடுப்பார்கள் இவர்களுக்கு. ரஜினி தன் ஒவ்வொரு படத்திற்கும் டப்பிங் பேச வரும்போது இந்த இணை துணை இயக்குனர்களுக்கு குறைந்தது ஐம்பதாயிரம் கொடுப்பாராம்.
பேசும்போது எவ்வித கோளாறும் இல்லாதது போல தோன்றும் சில நேரங்களில். ஆனால் டப்பிங் தியேட்டரில் இருக்கும் ஈக்குவலைசர் என்று சொல்லக் கூடிய கருவி, துல்லியமாக குறைகளை கண்டுபிடித்து ‘சாருக்கு இன்னைக்கு பேசுற தகுதி இல்லை’ என்று சொல்லிவிடும். அப்போது, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாங்க என்று அனுப்பி விடலாம் ஹீரோக்களை. அந்த ரெஸ்ட் நேரத்தில் இவர் ஐஸ்கிரீம் போன்ற ஐட்டங்களை சாப்பிடாமல் கவனமாக இருந்து மறுநாள் வருவார். தொண்டைக்கு இதம் சேர்க்கும் சில நொறுக்குகளையும் வைத்திருப்பார்கள் இந்த டப்பிங் தியேட்டரில். சில நேரங்களில் அதுவும் கை கொடுக்கும்.
டப்பிங், சிறப்பு சப்தங்கள் இவை இரண்டு பணிகளும் முடிந்த பின் ரீ ரெக்கார்டிங் என்று சொல்லப்படும் பின்னணி இசை கோர்ப்பு பணிக்கு வருவார்கள். யாரும் நுழைய முடியாத கோட்டை போலதான் இருக்கும் இந்த இடம். உதவி இயக்குனர்கள் அத்தனை பேரும் இங்கு போய் வேடிக்கைதான் பார்க்க முடியும். சில நேரங்களில் டைரக்டரையே கூட வாயைத் திறக்காதே என்று சொல்லிவிடுவார்கள் சில இசையமைப்பாளர்கள்.
சமீபத்தில் வெளிவந்த சிந்து சமவெளி படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிக்கு சென்ற அப்படத்தின் இயக்குனர் சாமியை, நீங்க வெளியே இருங்க என்று கூறிவிட்டார் இசையமைப்பாளர் சுந்தர்சி பாபு. ஏனென்றால் இந்தக் காட்சியில் எனக்கு இது போன்ற இசை வேண்டும் என வாதிடுகிற போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வரும். அப்படி வந்ததால்தான் இந்த தடுப்பாணை. கடைசியில் சுந்தர் சி பாபுவின் பின்னணி இசையை நீக்கிவிட்டு சபேஷ்-முரளி இரட்டையர்களை வைத்து மீண்டும் ஒரு முறை ரீ ரெக்கார்டிங் செய்து கொண்டார் சாமி. இது தயாரிப்பாளருக்கு இரட்டை பில்லாக வந்து விடியும்.
பெரிய பட்ஜெட் படமாக இருந்தால் ரீ ரெக்கார்டிங் பணிக்காகவே 50 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார் இசையமைப்பாளர். அதுவே சின்ன பட்ஜெட் என்றால் ஆறே நாட்கள்தான். மூன்று நாட்களில் முடித்து தருகிற இன்ஸ்ட்டன்ட் இசையமைப்பாளர்களும் கோடம்பாக்கத்தில் உண்டு. வெறும் கீ போர்டிலேயே அத்தனை சத்தங்களையும் வரவழைத்து விடுவார்கள் இவர்கள். ஆனால் பெரிய இசையமைப்பாளர்கள் அப்படியல்ல. எல்லாவற்றையும் லைவ்வாக பதிவு செய்வார்கள். காட்சிக்கேற்ப இசைக்கருவிகளை நேரடியாக வாசிக்க வைத்து பதிவு செய்வதில் இன்றும் பிடிவாதம் காட்டி வருகிறார் இசைஞானி இளையராஜா. அவரது இசைவாரிசு யுவன்சங்கர் ராஜாவும் பின்னணி இசையை நேரடியாக ஒலிப்பதிவு செய்கிறார்.
படத்திற்கு மிக முக்கியமான விஷயம் இந்த ரீரெக்கார்டிங்தான். ஒரு காட்சியின் ஜீவனே இதுதான். அழ வைக்க வேண்டிய காட்சிகளில் அழுது, சிரிக்க வைக்க வேண்டிய காட்சிகளில் சிரித்து அதற்குள்ளேயே கரைந்து போவார் இந்த பின்னணி இசை சேர்க்கும் இசையமைப்பாளர். மிஷ்கினின் நந்தலாலா படத்தின் க்ளைமாக்ஸ் சுமார் 45 நிமிடங்கள். இந்த நாற்பத்தைந்து நிமிடங்களும் எந்த டயலாக்கும் இல்லை. அதை தனது இசையால் நிரப்பியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. இதற்காக பிரத்யேக முயற்சி எடுத்துக் கொண்டாராம் இசைஞானி இளையராஜா.
கதை நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் இசையமைப்பாளர்கள். ராஜராஜசோழன் படத்தின் ரீ ரெக்கார்டிங்கில் டிரம்ஸ் வாசித்தால் எப்படியிருக்கும்? இன்று பலருடைய ரீ ரெக்கார்டிங்கும் அப்படிதான் இருக்கிறது. ஒரு உதவி இயக்குனர் இந்த பொருந்தாத இசையை கண்டும் காணாமல் போகக் கூடாது. சார் இந்த இடத்துல இந்த கருவியை வாசிச்சது தப்பு என்றாவது தனது இயக்குனரிடம் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் அதையாவது மாற்ற முயலுவார் இயக்குனர்.
டப்பிங் குரல்கள், ஸ்பெஷல் ஒலிகள், கடைசியாக பதிவு செய்யப்பட்ட ரீரெக்கார்டிங் இவற்றை இணைப்பதுதான் ஒலிக்கலவை. ஒலிகளை பிரித்து தனித்தனியாக கேட்க செய்வது டிடிஎஸ் ஒலிக்கலவை. இப்போது பிலிம்களுக்கு செய்வதை போல ஒலி கலவைக்கும் கிரேடிங் முறை வந்துவிட்டது.
இந்த டிடிஎஸ்சில் ஒலி அளவுகளை கூட்டி குறைத்துக் கொள்ளலாம். காட்சியின் தன்மையை பொறுத்து கதாபாத்திரங்களின் குரல் ஒலி அளவை மாற்றலாம். சிறப்பு சப்தங்களின் ஒலி அளவை மாற்றலாம். உதாரணத்திற்கு இரவு காட்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன். கதாநாயகி து£ங்கிக் கொண்டிருக்கிறாள். அது மழைக்காலம் என்பதை காட்ட பின்னணியில் நாலைந்து தவளைகள் கத்துவதாக வைத்துக்கொள்வோம். அந்த சப்தம் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு அதுவே ஒரு குறட்டை சப்தம் போல இருந்தால் தவளை சத்தத்திலேயே கதாநாயகி விழித்துக் கொள்வாள் அல்லவா? இப்படி எந்த சப்தம் கூட குறைய இருக்க வேண்டும் என்பதை உதவி இயக்குனர் சவுண்ட் என்ஜினியருக்கு கூறலாம். பெரும்பாலும் இந்த விஷயம் சவுண்ட் என்ஜினியருக்கே தெரியும். ஒருவேளை தவறு நேர்கிற பட்சத்தில் உதவி இயக்குனரின் ஆலோசனை வேண்டும்.
படத்தில் வரும் பல்வேறு ஒலிகளை வெவ்வேறு டிராக்குகளில் பதிவு செய்து தனித்தனியாக உணர செய்வது இந்த டிடிஎஸ் -ன் வேலை என்றாலும், அது சரியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்ப்பதுதான் உதவி இயக்குனரின் வேலை.
இறுதியாக பப்ளிசிடி டிசைன்ஸ். இதற்கென்றே இருக்கும் டிசைனரிடம் சென்று அமர்ந்து கொள்வது. போஸ்டர் டிசைன்கள், பத்திரிகை விளம்பர டிசைன்கள், தியேட்டரில் வைக்க வேண்டிய வினைல் போர்டுக்கான டிசைன்கள் என்று மினுக்கட்டாம் பூச்சி வேலைதான் இது. என்றாலும், டிசைன்களில் படத்தின் கதையும் இருக்க வேண்டுமென்றால் உதவி இயக்குனர்கள் டிசைனருடன் இணைந்து பணியாற்றினால்தான் உண்டு.
போஸ்டர்களில் கதை தொடர்பான வாசகங்களோ, வசனங்களோ இருந்தால் இன்னும் சிறப்பு. அதற்காக ஸ்கிரிப்ட் அசிஸ்டென்ட்டிடம் இந்த வேலையை கொடுப்பார் இயக்குனர்.
இப்படி செய்யப்பட்ட டிசைன்களை எடுத்துச் சென்று விளம்பர ஏஜென்சிகளிடம் கொடுப்பது, பத்திரிகையாளர் சந்திப்புக்கு மக்கள் தொடர்பாளர்களுடன் இணைந்து செயல்படுவது என்று வேலை பரபரப்பாக இருந்து கொண்டேயிருக்கும் உதவி இயக்குனர்களுக்கு. தியேட்டருக்குப் போன படப்பெட்டி ஆபிசுக்கு திரும்பி வரும்வரை உதவி இயக்குனர்களுக்கு சரமாரி வேலைதான். எப்படி?
- தொடரும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக