திங்கள், 6 டிசம்பர், 2010

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதியைத் தொலைத்துவிடாதீர்கள்


பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபா கணேஷன் மற்றும் பீ. திகாம்பரம் ஆகியோர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தனர். புலம்பெயர் தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக இருந்தால், வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டுமென்று நேற்று (04) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பிரித்தானியாவின் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்றிருந்த ஜனாதிபதிக்கு எதிராக புலம் பெயர்ந்தவர்களில் ஒரு சிலராலும் சில சிங்கள அமைப்புகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் தெரிவித்தார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில்:
இன்றைய யுத்தத்திற்கு பின்பான காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிப்படைவது இலங்கை நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழ்மக்களேயாகும். இதனை உணர்ந்து இப்படியான செயல்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்துவது ஆரோக்கியமானதாகும்.
யுத்தத்திற்கு முன் தமிழர்களை சிங்கள மக்கள் சந்தேக கண்ணோட்டத்தில்தான் நோக்கினார்கள். அனைத்து தமிழர்களையும் புலிகளாகவே நோக்கினார்கள். இதனால் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் மிகவும் இன்னலுக்குள்ளானார்கள். இதனை இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் அனுபவித்துள்ளோம்.
இன்று யுத்தம் நிறைவுற்று விடுதலைப் புலிகள் முற்றாக வீழ்ச்சியடைந்து போயுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் யுத்தத்திற்கு பின்னரான கடந்த ஒரு வருட காலத்தில் தமிழ் மக்களை சகோதர மனப்பான்மையுடன் சிங்கள மக்கள் பார்க்க தொடங்கியுள்ளார்கள். இரு இனங்களுக்கிடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகின்றது. இலங்கையர் நாங்கள் என்ற நிலைப்பாட்டில் அபிவிருத்தி நோக்கி நாம் அனைவரும் கைகோர்த்து செல்ல தேவையேற்பட்டுள்ள இந்த தருணத்தில் புலம் பெயர்ந்த ஒரு சிலரது செயல்பாட்டினால் மீண்டும் சிங் கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதி ரான நிலைப்பாட்டை இது ஏற்படுத்துகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் உடன் பிறப்புகளுக்கு நாம் விடுக்கும் அன்பான வேண்டுகோள், தயவு செய்து எமது இன்றைய அரசியல் கள நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். உண்மையிலே எமது இலங்கை மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பாட சாலைகளை கட்டியெழுப்ப வேண்டும். அங்கு வீடுகள் இன்றி வசிப்பவர்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி அப்பகுதிகளில் தமது முதலீடுகளை செய்து பொருளாதார அபிவிருத்திகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் எமது பிரச் சினை எமது ஜனாதிபதி மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு சக்திகள் எமக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. எவ்விதமான தீர்வோ, அபிவிருத்தியோ எமது ஜனாதிபதி அவர்களுடன் பேசியே தீர்க்க வேண்டும் என்பது இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இதனை புலம் பெயர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக