சனி, 4 டிசம்பர், 2010

நிரா ராடியா மூலம் அந்நாளைய பாஜகவின் தலைவர் வெங்கையா நாயுடு தொடர்பு கொள்ளப்பட்டார்

2Gல் பிரபலமானவர்கள் இரண்டு 'ரா'க்கள் ஒன்று ராசா அடுத்து ராடியா. டாடா, அம்பானி, ராசா, ராசா, பர்க்கா தத், வீர் சிங்வி என்று எல்லோரிடமும் பேசிய ராடியா கருணாநிதியின் துணைவியரையும் விட்டு வைக்கவில்லை. அவரிடமும் பிஸினஸ் பேசியுள்ளார். டாடா பேரம்.

ரத்தன் டாடா நான் பர்சனலாக பேசியதை எப்படி பொதுவில் போடலாம் என்று கேட்கிறார். நல்ல கேள்வி தான் ஆனால் ராடியா ஏன் டாடா பற்றி ராஜாத்தி அம்மாளிடம் பேச வேண்டும் ?

வெளியெ வந்த டேப் 140ஆம் வராத டேப் 5000 என்கிறார்கள். அதில் என்ன என்ன இருக்கிறதோ. சொல்ல முடியாது அவர் இட்லிவடையுடன் கூட பேசியிருப்பார். யார் கண்டது.

இன்று பெரிதாக பெரிதாகப் பிரபலமடைந்த அதிகாரத் தரகர் நிரா ராடியா என்ற பெண்மணி. இன்னும் கொஞ்ச நாளில் பிஜேபியில் சேர்ந்து எம்.பி ஆனாலும் ஆச்சரிய பட கூடாது. எடியூரப்பா போன்றவர்கள் கோயிலுக்கு போய்விட்டு செய்யும் காரியங்களுக்கு இவர் எவ்வளவோ மேல்.

கென்யாவில் பிறந்து வளர்ந்து, பிரிட்டிஷ் பிரஜையாக வலம் வரும் இவர்தான் தற்போதைய இந்திய மீடியாக்களின் தலைப்புச் செய்திக்குரியவர். விமானப் போக்குவரத்துத் துறையின் பால் அதீத ஈடுபாடு கொண்ட இவர் முதன் முதலில் இந்தியாவிற்குள் தொழில் ரீதியாக அடியெடுத்து வைத்தது 1990 களின் ஆரம்பத்தில். அப்போது டாடா நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தொழில் துவங்க முயன்ற நேரம். அப்பொழுது விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்தவர் அனந்த் குமார். அப்பொழுது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இந்தியாவிற்குள் நுழைக்க முயன்றதிலிருந்து துவங்குகிறது நிரா ராடியாவின் சரிதம். ஆனால் அப்பொழுது இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அந்நியர்கள் அனுமதிக்கப்படாததால் அவ்வளவாக அவரது முயற்சிகள் எடுபடவில்லை. மிக சமீபத்தில் டாடா குழுமத்தின் தலைவர் கூட இது தொடர்பாக அங்கலாய்த்திருந்தார்.

அப்பொழுது டாடா குழுமத் தலைவருடன் நிரா ராடியாவிற்கு பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிரா ராடியா மூலமான முயற்சிகள் இந்தியாவில் செல்லுபடியாகவில்லை. பிறகு நிரா ராடியாவே தன்னுடைய சொந்த முயற்சியாக வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுடன் விமான போக்குவரத்து நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக விண்ணப்பித்து, அந்த அமைச்சரகத்தையே அதிர வைத்திருக்கிறார். ஆனாலும் பல காரணங்களுக்காக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்த முயற்சியின் மூலமாக டாடா குழுமத்துடனான நெருக்கம் ராடியாவிற்கு அதிகரிக்கவே, ரதன் டாடா தன்னுடைய வியாபாரத் தொடர்புகளுக்கு ஆலோசகராக ராடியாவை நியமித்திருக்கிறார். அதன் பிறகு உருவானதுதான் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்கிற நிறுவனம். டாடா குழுமத்தின் அனைத்து தொடர்புகளையும் இந்நிறுவனமே கவனிக்கப் போக, ஒரு கட்டத்தில் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் டாடா நிறுவனத்தின் ஒரு அங்கம்தானோ என்று சம்சயிக்கும் அளவிற்கு டாடா குழுமத்துடன் ராடியாவின் நெருக்கம் அமைந்திருக்கின்றது. டாடா குழுமம் தவிர அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கும் ஆலோசகராகவும், தொடர்பாளராகவும் நிரா ராடியா செயல்பட்டு வந்திருக்கிறார்.

இப்பொழுது இந்த 2G விவகாரத்திலும் இவர் பெயர் அடிபடுகிறது. காரணம், இவருடைய வாடிக்கையாள நிறுவனமாக இருக்கும் டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனமும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுள் ஒன்று.

இவ்விவகாரங்களெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கூட்டு பாராளுமன்றக் குழு விசாரணை கோரி பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்து வரும் எதிர்க்கட்சிகளில் ஒன்று கூட இந்த ஆடியோ டேப் விவகாரங்களை சட்டை செய்யவில்லை. முக்கியமாக பாஜக. இந்த சர்ச்சைக்குரிய தரகு பேச்சு ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் பாஜகவின் மெளனத்திற்கு இப்பொழுது ஒரு முகாந்திரம் கிடைத்துள்ளது. அதுவும் பாஜகவை தர்மசங்கடப் படுத்துவிதமாக, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் டெலிகாம் துறை மந்திரி அருண் ஷோரியே வாய் திறந்துள்ளார். அதாவது அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு சில சலுகைகளைச் செய்விக்கும் விதமாக, நிரா ராடியா மூலம் அந்நாளைய பாஜகவின் தலைவர் வெங்கையா நாயுடு தொடர்பு கொள்ளப்பட்டார் என்பதே அத்தகவல். அதைத் தொடர்ந்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்தைத் துவக்கி வைப்பதாக இருந்த அருண் ஷோரிக்குப் பதிலாக வெங்கைய நாயுடுவே பேசினார் என்றும், அவ்வாறு அருண் ஷோரி முதலில் பேசியிருந்தால், அனில் அம்பானி தொடர்பான நிறுவனங்கள் சார்ந்த முடிவுகளில் அருண் ஷோரி சற்றே கடுமை காட்டியிருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, கர்நாடக நில மோசடி வழக்கில் பாஜக திண்டாடிக் கொண்டிருப்பது காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்க அத்வானியால் தாம் முடியும் என்று ஒரு காலத்தில் நம்பிக்கொண்டு இருந்தோம். ஆனால் இன்று அவரால் எடியூரப்பாவையே ஒன்று சொல்ல முடியவில்லை. கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போய் விடுவேன்" என்று மார் தட்டின கதைதான்.

இந்நிலையில் இப்படியொரு செய்தி எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியாயினும், யாரும் எவரையும் குறை கூறிச் சாடுமளவிற்கு தன்னளவில் யோக்கியரல்ல என்பதுதான் இன்றைய அரசியல் அரங்கில் உண்மை. வெளிவரும் செய்திகளும் அதைத்தான் நிரூபிக்கின்றன.

ஆல் இந்தியா ராடியா செய்திகள் தான் இன்னும் கொஞ்சம் நாள் வந்துக்கொண்டு இருக்கும். எது எப்படியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக