புதன், 22 டிசம்பர், 2010

அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.

சின்னத் தீர்மானங்கள்

சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.  காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான்.  மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.
கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால்,  அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.
படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.
நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான்.  அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.
அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது.  அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில்  சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது.  தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.  ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.
அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.
0000
கதையைப் பற்றிப் பேசும்போது,  தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான்.  என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.
இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன.  பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள்,  ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.  இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம்.  இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
0000
இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.
தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான  விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.
இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன்.  இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை.  காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.
00000
வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம்.  ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள்.  இது உண்மை தான்.
ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.  இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.
இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது,  ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.
இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.
ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.
இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக