புதன், 8 டிசம்பர், 2010

நாம் தமிழர்… நாம் தமிழர்… கட்டுரை எழுதுக…

நாம் தமிழர்… நாம் தமிழர்… கட்டுரை எழுதுக…
பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்காலம் இது. மாணவர்களின் மொழித்திறனை அறிவதற் காக தமிழ் ஆசிரியர் ஒருவர் கட்டுரை எழுதும்படி மாணவர்களைப் பணித்தார்.கட்டுரைத் தலைப்பு ‘ நாம் தமிழர்… நாம் தமி ழர்…’ மாணவர்கள் மிகவும் வேகமாக எழுதத் தொடங்கினர்.
ஒரு மாணவன் எழுதிய கட்டுரையை ஆசிரியர் வாசிக்கத் தொடங்கினார்.நேற்றைய தினம் நான் யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்குச் சென்றிருந்தேன். ஒரு பெரியவர் நாரி யைச் சவட்டிய வண்ணம் வந்தார். கையில் கிளினிக் கொப்பி. அங்கு நின்ற வைத்தியசாலைப் பணியாளரைப் பார்த்து, தம்பி எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் எங்கே இருக்கிறது என்று கேட்டார். அந்தப் பணியாளரோ பெரியவரின் கையிலிருந்த கிளினிக் கொப்பியைப் பார்த்துவிட்டு, ஐயா! இது பிறசர்க் கிளினிக் கொப்பி. அங்கு போங்கள் என்றார்.
பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது. இது எனக்கு தெரியும் தம்பி. இப்ப எனக்கு நாரி முறிந்துவிட்டது என்றார். ஏன் ஐயா நாரி முறிந்தது என்று கேட்டார் அந்தப் பணியாளர். அதையேன் தம்பி கேட்கிறியள் இன்றைக்கு பிறசர்க் கிளினிக். அதற்காக தீவகத்திலிருந்து வந்தனான். வந்த மினி பஸ் பண்ணைப் பாலத்தில விழுந்து எழும்பினதில என் நாரி சவண்டது. பின்னர் யாழ்.பிரதம தபால்கந்தோர்ச் சந்தியில்- பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒரு பெரிய பள்ளம். அதில் வெள்ளம். அந்தப் பள்ளத்தில் மினி பஸ் விழுந்து எழுந் ததில் சவண்டுபோன என்ர நாரி முறிந்து போயிற்று.
அதுதான் தம்பி… பெரியவர் கூறிமுடிக்க அந்தப் பணியாளர் அதோ! என்று இடத்தைக் காட்டினார்.பெரியவரைப் பரிசோதித்த டாக்டர், பெரியவரே; நாரி எலும்பில வெடிப்பு. பத்துப் போட்டிருக்கிறது வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்க வேணும். அசையக் கூடாது என்று ஆலோசனை கூறினார்.டாக்டர் ஐயா! அப்பநான் வீட்ட போக முடியாது.
ஏன்? எதில போறது? வாகனத்தில போகலாமே! எந்த வீதியால போறது? பெரியவரின் இந்தக் கேள்வி டாக்டருக்குக் குழப் பத்தை ஏற்படுத்த, டாக்டர் ஐயா எங்கட யாழ்ப்பா ணத்தில எல்லா வீதியும் குண்டும் குழியுமாக இருக்கு. நான் என்ன செய்ய… அந்தப் பெரியவரின் நியாய மான கேள்விக்கு விடை காணமுடியாமல் டாக்டர் தனது காரில் ஏறிக்கொள்கிறார்.
காரில் டக்கு… டக்கு… என்ற சத்தம். அப்படியே கராச்சுக்கு செல்கிறார் டாக்டர். மெக்கானிக்… ஐயா! காரைக் கிடங்கில விட்டுட் டியள். அதால வில்லுத் தகடு உடைந்து போச்சு. ஓ! முதியவருக்கு எலும்பு முறிவு. என் காருக்கு வில்லுத்தகடு உடைவு. இந்தச் சிந்தனையில் டாக்டர் இருக்க, கராச் தூணில் தொங்கிய வானொலியில்… இது வரை நீங்கள் கேட்ட செய்திகளின் சாரம்… வடக்கின் வசந்தம் யாழ்.குடாநாட்டில் வெற்றிகரமாக நிறை வடைந்து வருகின்றது. வீதிகள் யாவும் புனரமைக் கப்பட்டுள்ளன. இத்துடன் செய்திகள் முடிவடைந்தன… ஓ! செய்திகள்தான் முடிபடைந்தன. எல்லாம் செய்திகளில்தான் முடிபடைகின்றன.
டாக்டர் வீதியில் இறங்கி நேர் கொண்ட பார்வையில் நடக்கத் தொடங்கினார். வீதியில் காத்திருந்த கிடங்கு டாக்டரை தடக்கி விழுத்த… விழுந்தெழுந்த டாக்டர் ஓ! நாம் தமிழர்… நாம் தமிழர்… தலை நிமிர்ந்து நடப்பது மகாதவறு. தலை நிமிர்ந்தால் தட்டி விழுத்த வீதியும் ரெடியாய் இருக்கு… இப்படி அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
வலம்புரி தலையங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக