திங்கள், 6 டிசம்பர், 2010

வர்த்தக சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள தொல்லை கவலை அளிக்கிறது

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி உதவி செய்ததாக குற்றஞ்சுமத்தி யாழ்ப்பாணத்தில் 20 வர்த்தகர்களை அழைத்து இராணுவத்தைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருவதாக வந்த செய்தி எனக்கு கவலையைத் தருகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் எவரும் இது சம்மந்தமாக தங்களிடம் தெரிவிக்காத படியால் இதில் நான் தலையிட்டு, தங்களுக்கு இதனை தெளிவு படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என தமிழர் விடுலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி ஜனாதிபதி ராஜபக்‌ஷவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில் அவர் மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையிலும், பிறநாட்டிலும் சிறிய பெரிய வியாபாரம் என்ற பேதம் இன்றி வர்த்தகர்களிடமும், உள்ளுரிலும் வெளியிலும் இலட்ச்சிணை பொறிக்கப்பட்ட முகவர்களிடமும் மாதாமாதம் பலாத்காரமாக நன்கொடை பெற்று வந்தது உலகம் அறிந்ததே. வெளிநாட்டில் நியமிக்கப் பட்ட முகவர்கள் தாம் சேர்க்கும் பணத்தில் 33 வீதத்தை தரகு கூலியாகப் பெற்று வந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். சிறிய தேனீர் கடைகள், சிகையலங்கார நிலையங்கள், சலைவைத் தொழிலகங்கள், சிறு பலசரக்குக் கடைகள் உட்பட எதனையும் விட்டுவைக்காமல் அவர்கள் நன்கொடை பெற்றுவந்தனர். அத்துடன் செழிப்புற்று வாழ்ந்த கமக்காரர்கள், மீன் முதலாளிகள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் விடுதலைப் புலிகளால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தனர்.
புலம் பெயர்ந்த தமிழர்களிடம், அவர்களை எதிர்க்கும் தைரியமுள்ளவர்கள் தவிர்ந்த, ஏனையோரிடம், உலகம் முழுவதிலும் அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக, நிதி சேகரித்து வந்தார்கள். இந்நிலையில் பணம் செலுத்தாது எவ்வாறு தவிர்த்திருக்க முடியும். தாம் வாழ்ந்த நாடுகளில் உரிய கட்டணத்தை விடுதலைப்புலிகளுக்கு செலுத்தாதவர்கள், அவர்கள் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த போது இடைநிறுத்தப்பட்டு, அவர்களின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு கடந்த காலத்தில் கட்டத்தவறிய பணம் உட்பட முற்றாக அறவிட்ட பின்பே, கடவுச்சீட்டுக்களை திருப்பி கொடுத்தனர். இவ்வாறான சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தே மக்கள் இந்த நன்கொடையை செலுத்தினர்.
எனவே தயவு செய்து வர்த்தகர்களை விசாரிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பவர்களை, உடனடியாக இந்நடவடிக்கையை நிறுத்துமாறு, கட்டளை பிறப்பிக்குமாறு வேண்டுகின்றேன். இது தொடருமானால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களும், தொழில்புரிந்தவர்களும் ஒருவர் தப்பாது விசாரணைக்கு உட்படுத்த நேரிடும் மேலும் கடந்த காலத்தில் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவர்கள் தேவையற்ற தொந்தரவிற்கு ஆளாகவும் நேரிடும். இவ்வாறான தொந்தரவினால் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த பலர் ஏற்கனவே மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக