சனி, 20 நவம்பர், 2010

Dr.Shanmugaraja: புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேற முயன்ற மக்களை புலிகள் சுட்டதாகவும் அவர்

Dr.-Shanmugarajahஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது காயமடைந்த பொதுமக்கள் புலிகள் அமைப்பின் போராளிகள் அனைவருக்கும் நாம் சிகிச்சையளித்தோம். பொதுமக்கள், புலிகள் என பிரித்துப் பார்க்கவில்லை இறுதி யுத்தம் இம முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வி. சண்முகராஜா நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின்போது; இறந்த மற்றும் காயடைந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேற முயன்ற மக்களை புலிகள் சுட்டதாகவும் அவர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் டாக்டர் சண்முகராஜா மேலும் சாட்சியமளிக்கையில்,'2006 செப்டெம்பர் முதல் 2009 மே 15 வரை முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றினேன்.
அந்த நேரத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலைதான் அப்பகுதியில் பிரதான வைத்தியசாலையாக இருந்தது.
வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை இருந்தாலும் அங்கிருந்த வைத்தியர்கள், தொண்டர்கள் உதவியுடன் சேவைகளை மேற்கொண்டோம்.
இரவு நேரங்களில் நோயாளிகளை வவுனியாவுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்ப முடியாமல் இருந்தது.
2006 இல் போர் தொடங்கியபின் ஓர் அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு மருந்துகள், பண்டேஜ் போன்ற பொருட்கள் எமக்கு வழங்கப்பட்டிருந்தன. சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளையும் பெற்றிருந்தோம்.
கட்டுப்பாடுகள் இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியுடன் நாம் மருந்துகளை பெற்றுக்கொண்டோம்.
யுத்தம் தீவிரமடைந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்றபோது நாமும் மக்கள் செல்லும் இடம் நோக்கி வைத்தியசாலைகளை இடம்மாற்ற வேண்டியிருந்தது.
நாம் முதலில் வல்லிபுரத்திலுள்ள பாடசாலையொன்றை வைத்தியசாலையாக மாற்றினோம். பின்னர் கிளிநொச்சியிலுள்ள மக்களும் முல்லைத்தீவுக்கு வந்தார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியர்கள் சேர்ந்த 2-3 இடங்களில் வைத்தியசாலைகளை நடத்தினேர்.
வைத்தியசாலைகளை மாற்றும்போது மருந்துகளை பாதுகாப்பது சிரமமாக இருந்தது. 2009 பெப்ரவரியில் முள்ளிவாய்க்காலில் வைத்தியசாலைகளை அமைத்தோம்.மாத்தளன், முள்ளிவாய்க்காலில் மக்கள் நெருக்கமாக தங்கியிருந்தார்கள். அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தோம். கர்ப்பினி, வயோதிபர்கள், காயமடைந்தவர்களை, ஐ.சி.ஆர்.சி. உதவியுடன் கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பினோம்.
இறுதிக்கட்டத்தில் எல்லா மக்களும் ஏதாவது வழியில் அங்கிருந்து முயற்சித்தார்கள். தப்பிச்செல்ல முற்பட்ட மக்கள் இரு தரப்பிற்கும் இடையிலான மோதலில் சிக்கியும் எல்.ரி.ரி,ஈ.யினரால் சுடப்பட்டும் பாதிக்கப்பபட்டனர்.
மே 13 ஆம் திகதி வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கு வைத்தியசாலையை மாற்றியபின் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற முடியாமல் இருந்தது. இது குறித்து அரச அதிபர், சுகாதார அமைச்சு, ஐ.சி.ஆர்.சிக்கு அறிவித்தோம்.
15 ஆம் திகதி இராணுவம் வந்து எம்மை அழைத்தது. காயமடைந்தவர்கள், நோயாளிகள் ரெட்டைவாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது
இந்த யுத்தம் ஏன் எப்படி ஆரம்பித்தது என எனக்குத் தெரியாது. ஆனால் நான் அங்குள்ள மக்களுடன் நெருங்கிப் பழகினேன்.
2002 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து சமாதான காலம் ஆரம்பித்தபோது மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பின்னர் 2006 ஆம் ஆண்டு யுத்தம் தொடங்கியபின் மக்கள் மிகவும் அச்சமடைந்திருந்தார்கள்.
இப்போது மீள்குடியேற்றம் ஆரம்பமாகி ஒரு வருடத்தின் பின்னரும் பல கட்டமைப்புகளை செய்யவேண்டியுள்ளது. வைத்தியசாலைகள் புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் முடிந்துவிட்டன.
மாங்குளம் - முல்லைத்தீவுக்கு இன்னும் தார்வீதி இல்லை. இப்போது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.  அங்குள்ள வைத்தியசாலைகளில் ஊழியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. அங்கு பணியாற்றம் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார்கள்' என்றார்.
  • ஆணைக்குழு அங்கத்தவர்கள் கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதாவது வைத்தியசாலைக்கு நிதியுதவி வழங்கியுள்ளர்களா?
நிதி வழங்கவில்லை. புலிகளின் மருத்துவர்கள், தாதிகள் பணியாற்றியுள்ளனர்.
  • சிகிச்சை பெற வந்தவர்களில்  பொதுமக்கள் யார்? எல்.ரி.ரி.ஈயினர் யார்? எனத் தெரியுமா?
நாம் இவர்களை பிரித்துப் பார்க்கவில்லை. காயமடைந்து வந்த அனைவருக்கும் சிகிச்சையளித்தோம்.
  • எமக்கு எண்ணிக்கை விபரங்களை பின்னர் தர முடியுமா?
இல்லை விபரங்களை நாம் அங்கிருந்து வரும்போது எந்த பதிவு விபரங்களையும் கொண்டுவரவில்லை.
  • இறந்தவர் காயமடைந்தவர் எண்ணிக்கையை ஏன் அதிகரித்துச் சொன்னீர்கள்?
அப்படியான சூழ்நிலை இருந்தது. 75 பேர் என்றால் 275 பேர் என சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டோம். யுத்தம் தீவிரமடைந்து செல்ல செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. சிலவேளை 575 என்றும் சொல்ல நேர்ந்தது.
  • யாரால்?
அதற்கு ஆட்கள் இருந்தார்கள்- எல்.ரி.ரி.ஈ.யினர்.
  • எல்.ரி.ரி.ஈ.யினர் மிகைப்படுத்தி கூறச் சொன்னதால் அப்படி கூறினீர்களா?
ஆம்.
  • சம்பவங்களின்போது எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு எப்படி உங்களை எல்.ரி.ரி.ஈ.யினர் அணுகுவார்கள்?
 காயமடைந்தவர்கள் வந்தால் எல்.ரி.ரிஈ.யினரும் வருவார்கள். அவர்களின் வீடியோ குழுவினர் வருவர்.
  • எல்.ரி.ரி.ஈயின் அழுத்தம் காரணமாக எண்ணிக்கையை அதிகரித்து சொன்னீர்களா?
 ஆம்.
இதன்பின் ஆணைக்குழுவினர் டாக்டர் சண்முகராஜாவிடம் இரகசியமாக கேள்விகளை கேட்கவிரும்புவதாக அறிவித்தனர்.
இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கிளிநொச்சி மாவட்ட பதில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றியவரும் தற்போது வவுனியா பொது வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றுபவருமான  டாக்டர் ரி. சத்தியமூர்த்தியும் நேற்று சாட்சியமளித்தார்.
2009 ஜனவரி பிற்பகுதியில் காயமடைந்தவர்களுக்கு, இருந்தத வசதிகளைக் கொண்டு சிகிச்சையளித்தாக டாக்டர் ரி. சத்தியமூர்த்தி  கூறினார். காயமடைந்த வயதான பெண்ணொருவருக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த தாதி உத்தியோகஸ்தர் ஒருவர் இறந்தமை தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக