வியாழன், 11 நவம்பர், 2010
இந்தியாவே வியக்கும் தமிழக கிராமம்! பஞ்சாயத்துக்குச் சொந்தமான காற்றாலை
'அரசாங்கங்கள் கைகொடுத்தா... எவ்வளவு பெரிய தேசியச் சிக்கல்களுக்கும் விவசாயிகளாலே விடை தரமுடியுமுங்க. நாங்க காலேஜெல்லாம் போயி படிக்கலேன்னாலும்... காடும், கழனியும் எங்களுக்குப் பெரிய பாடங்கள கத்துக் கொடுத்திருக்கு!"
-அறிவார்ந்த வார்த்தைகள் சாதாரணமாக வந்து விழுகின்றன 'ஓடந்துறை' சண்முகத்திடமிருந்து.
கோவை மாவட்டத்திலுள்ள ஒரு வளமான பஞ்சாயத்து ஓடந்துறை. தொட்டுவிடும் தூரத்தில் நீலகிரி மலைப்பாதைகள், செழித்து ஓடும் பவானி ஆறு, வேர்கள் விரும்பி குடிபுகும் மண் என்று ஆசீர்வதிக்கப்பட்ட நிலம். இப்படியெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்த இயற்கை, அதை முறையாக நிர்வகிக்க நல்ல தலைமையையும் தந்ததுதான்... அந்த கிராமம் செய்த புண்ணியம்.
பத்து ஆண்டுகளாக இந்தப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்த சண்முகம், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியதன் விளைவாக, தேசிய அளவிலே முன்னோடி மற்றும் முன்மாதிரி கிராமமாக விளங்குகிறது ஓடந்துறை!
அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு, சுத்தமான சாலைகள், நூறு சதவிகித வரி வசூல்... என்று அதிசயிக்க வைக்கிறது இந்தக் கிராமம். அதற்கு மரியாதை செய்யும் வகையில்... உள்ளூர் லயன்ஸ் கிளப்பில் ஆரம்பித்து, உலக வங்கி வரை... நிர்மல் புரஸ்கார் தொடங்கி, பாரத் ரத்னா ராஜீவ்காந்தி சுற்றுச்சூழல் விருது வரை... விருதுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
பல பஞ்சாயத்துகள் முறையான நிதி வசதியில்லாமல் காற்றாடிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் கோடி ரூபாய் செலவில் காற்றாலை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதிலேயே தெரிந்து கொள்ளலாம் கிராமத்தின் பெருமையை!
பஞ்சாயத்தின் தற்போதையத் தலைவி லிங்கம்மாள், "எங்க வூட்டுக்காரரு (சண்முகம்) பிரசிடெண்டா இருந்த காலத்துலதானுங்க இந்தக் காற்றாலைய நிறுவுனாங்க. மக்களோட ஒத்துழைப்பு இல்லேனா எதையுமே சாதிச்சிருக்க முடியாது. அந்தப் பெருமையான கதையையெல்லாம் அவர்கிட்டயே கேளுங்கோ!" என்று எடுத்துக் கொடுக்க, ஆரம்பித்தார் சண்முகம்.
"நூறு சதவிகிதம் வரி வசூல் பண்ணி, மிக பெரியத் தொகையை பஞ்சாயத்துக்கு சேமிப்பா மாத்தினாலும்கூட, கரன்ட் பில் கட்டியே ஓட்டாண்டி ஆகிடுவோமோனு ஒரு பயம் எங்களுக்கு. காரணம், பஞ்சாயத்தோட வருவாயில நாற்பது சதவிகிதத்தை கரன்ட்டுக்கு கொடுத்துட்டிருந்தோம். தெருவிளக்குகளையெல்லாம் சோலார் சிஸ்டத்துக்கு (சூரியஒளி) மாத்தியும் பலன் இல்ல.
சரி, பவானி ஆறுதான் ஓடுதே! அதை வெச்சு சின்னதா நீர்மின்சக்தி யூனிட் போடலாமானு வல்லுநர்கள்கிட்ட பேசினோம். ஆனா, அது தகுதிக்கு ரொம்ப மீறுனதா இருந்துச்சு. அப்போதான் காற்றாலைத் திட்டம் எங்க கவனத்துக்கு வந்துச்சு. 'முன்னூற்று ஐம்பது கிலோவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய காற்றாலையின் விலை ஒரு கோடியே ஐம்பத்தஞ்சு லட்சம்'னு சொன்னாங்க. 2001-ம் வருஷத்துல இருந்து, 2006-ம் வருஷம் வரை பஞ்சாயத்து வருவாயில சேமிச்ச வகையில நாற்பது லட்சம் இருந்துச்சு. மீதி ஒரு கோடியே பதினைஞ்சு லட்ச ரூபாய்க்கு வங்கிக்கடன் வாங்கினோம்.
2006-ம் வருஷம் மே மாசம், ஓடந்துறை பஞ்சாயத்துக்குச் சொந்தமான காற்றாலையை உடுமலைப்பேட்டை பக்கமிருக்கற மயில்வாடியில நிறுவினோம். இது, வருஷத்துக்கு ஆறே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கக் கூடியது. எங்க தேவை நாலரை லட்சம் யூனிட். ஆக, மீதியை மின்சார வாரியத்துக்கு விக்கிறோம். அதுல கிடைக்கிற பணத்துல வங்கிக் கடனை கழிச்சுட்டு இருக்கோம். இதுவரைக்கும் நாற்பது சதவிகித கடனை அடைச்சுட்டோம். மீதியையும் கட்டிட்டா..., அதுக்குப்பிறகு, விற்கிற கரண்டுக்கான பணம்... பஞ்சாயத்தோட சேமிப்புதான்.
முப்பது வருஷம் வரைக்கும் நல்லா இயங்கக்கூடிய இந்தக் காற்றாலையை அமைச்சது மூலமா, எங்க வருவாய் இழப்பு மட்டுப்படுது, சேமிப்பு அதிகரிக்குது. அது மட்டுமில்லாம... எஞ்சிய மின்சாரத்தை அரசாங்கத்துக்குக் கொடுத்து, நாட்டுக்கும் சேவையும் செய்யுறோம். இதுலதானுங்க எங்களுக்குப் பெருமை" என்று மீசையை நீவியவர்,
"நம்ம நாட்டுலேயே காற்றாலை நிறுவியிருக்கிற ஒரே பஞ்சாயத்து எங்களோடதுதான். இந்த முயற்சியைப் பார்த்து முதுகுல தட்டிக்கொடுக்கிற மத்திய, மாநில அரசாங்கங்கள் கடனை அடைக்கிறதுக்கும் கை கொடுத்தா நல்லாயிருக்கும். வட்டியில்லா கடனோ அல்லது மானியமோ கொடுத்து உதவினா பேருதவியா இருக்கும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.
அடுத்தக் கட்டமாக பஞ்சாயத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், சூரியஒளி மற்றும் மினி காற்றாலை இரண்டையும் இணைத்து, 'ஹை-பிரீட்' சிஸ்டத்தில் வீட்டுக்கான மின்சாரத்தை உருவாக்கும் திட்டமும் இவரிடம் இருக்கிறது.
அதைப் பற்றியும் சொன்ன சண்முகம், ''எல்லா விஷயத்துலயும் 'ஒப்பில்லா ஓடந்துறை'யா இதை மாற்றணும்ங்கிறதுதான் எங்க நோக்கமே" என்று கண்களில் மின்னல் காட்டினார்.
படங்கள்: தி. விஜய்.
உங்கள் கிராமத்துக்குக் காற்றாலை வேண்டுமா?
காற்றாலை அமைக்க விரும்பும் பஞ்சாயத்துகள், ஓரளவுக்கு வருவாய் இருக்கும்பட்சத்தில் இதில் இறங்கலாம். இதற்காகப் பஞ்சாயத்தில் தீர்மானத்தை இயற்றி, வட்டார வளர்ச்சி அலுவலரின் வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். அவருடைய அனுமதி கிடைத்த பின், காற்றாலை நிறுவனங்கள், வங்கிக் கடன் என்று அடுத்தக் கட்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக