யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறுவதற்காகச் சென்று யாழ். ரயில் நிலையத்தில் சில வாரங்களாகத் தங்கியிருந்த பல சிங்கள குடும்பங்கள் யாழ். நாவற்குழி சந்திக்கருகில் அரசாங்கக் காணியொன்றில் குடியேறியுள்ளன.
நேற்றிரவு மேற்படி காணியில் 67 குடும்பங்கள் அங்கு குடியேறியதாகவும் அக்காணிகள் தமக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அக்குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
'இங்கு குடியேறியபின் இதுவரை அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ எம்மை வந்து பார்க்கவில்லை. ஏன் குடியேறினீர்கள் என கேட்கவுமில்லை' என சற்று முன்னர் அவர் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.
'பொலிதீனினால் கூடாரங்களை அமைத்து நாம் தங்கியிருக்கிறோம். தமிழ் மக்களுடன் நாம் ஒற்றுமையாக வாழ முடியும் என நம்புகிறோம்' எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மற்றும் யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரிடம் கேட்டபோது மேற்படி காணி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்ட காணியெனவும் அது தமது பொறுப்பின் கீழ் இல்லையெனவும் தெரிவித்தனர்.
1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாம் யாழ் கொழும்புத்துறையில் காணிகளைக் கொண்டிருந்ததாக மேற்படி குடும்பத்தினர் யாழ் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தபோது தமிழ் மிரருக்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
'சிலர் தொழில் நிமித்தம் வாடகை வீடுகளில் வேறிடங்களிலும் தங்கியிருந்த போதிலும் எமக்கு கொழும்புத்துறையில் காணிகள் இருந்தன. பின்னர் நாம் அங்கிருந்து வெளியேறியபின் அக்காணிகளில் வேறு மக்கள் வசிக்கத் தொடங்கிவிட்டனர். நாம் மீண்டும் அக்காணியைக் கேட்டு அம்மக்களுடன் பிரச்சினை ஏற்படுத்த விரும்பவில்லை. எஞ்சியிருக்கும் அரசாங்கக் காணிகளில் எம்மை குடியேற்றுமாறும் நாம் கேட்கிறோம்.
நாம் தமிழ் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்து வளர்ந்தவர்கள். எமது பிறப்பிடம் யாழ்ப்பாணம் என்பதால் தென்னிலங்கையில் வசித்த காலத்தில் நாம் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டோம்' என அவர்கள் கூறினர்.
இந்நிலையில், நேற்றிரவு அவர்கள் நாவற்குழியில் குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு அவர்கள் நாவற்குழியில் குடியேறியுள்ளனர்.
- தமிழ்மிரர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக