ஞாயிறு, 21 நவம்பர், 2010

பதவி பறிபோகிறது!எதியூரப்பா பாஜக மேலிடத்துடன் திடீர் மோதல்-முதல்வர் பதவி

ரூ. 500 கோடி நில மோசடி தொடர்பாக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக ஏராளமான எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி வருவதால், அவரை பதவியிலிருந்து நீக்க பாஜக மேலிடம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தனக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக எதியூரப்பா கூறியுள்ளார். மேலும் தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் கட்சியை விட்டு விலகப் போவதாக அவர் மேலிடத்தை மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்தியில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழலை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வேகமாக குரல் கொடுத்து வரும் நிலையில் எதியூரப்பாவின் மிகப் பெரிய ஊழல் பாஜகவை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

முறைகேடாக தனது குடும்பத்தினருக்கு கொடுத்த நிலங்களை எதியூரப்பா திரும்பக் கொடுத்து விட்ட போதிலும் சர்ச்சை ஓயவில்லை. எதியூரப்பாவை நீக்குமாறு கிட்டத்தட்ட 60 பாஜக எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் கத்காரியிடம் மனு அளித்துள்ளதால் எதியூரப்பாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று மாலை டெல்லியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது. இதில் எதியூரப்பாவும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் போவாரா இல்லையா என்பது தெரியவில்லை.

120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது: எதியூரப்பா

இதற்கிடையே, தனக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக எதியூரப்பா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. எனவே எனக்கு அடுத்து யார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கட்சிமேலிட அழைப்பை ஏற்று நான்டெல்லி கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். கர்நாடக விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கட்சித் தலைவர்களிடம் அளிப்பேன். என்னைத் தவிர வேறு எந்த எம்.எல்.ஏவும் டெல்லி செல்லவில்லை. எனக்கு எதிராக யாரும் டெல்லி போகவில்லை. நான் மட்டுமே போகிறேன்.

டெல்லி சென்று அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜை சந்திப்பேன். அத்வானியை சந்திப்பேன். என்னை நீக்கினால், எனக்கு அடுத்த வாரிசாக வரக் கூடியவரும் எதியூரப்பா மட்டுமே. பாஜக மேலிடத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார் எதியூரப்பா.

முன்னதாக தனது வீட்டில் தனக்கு நெருக்கமான அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் எதியூரப்பா. இக்கூட்டத்தில் ரெட்டி சகோதரர்கள், அடுத்த முதல்வர் என்று வர்ணிக்கப்படும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

எதியூரப்பாவை நீக்கும் முடிவு-கத்காரிக்கு அதிகாரம்

இதற்கிடையே, எதியூரப்பா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்காரி கூறுகையில், கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசியவர்கள் கர்நாடக விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் என்னிடம் தரப்பட்டுள்ளது.

இருப்பினும் எந்த முடிவாக இருந்தாலும் அதை எடுப்பதற்கு முன்பு எதியூரப்பாவுடன் ஆலோசனை நடத்திய பிறகே எடுப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக