ஞாயிறு, 14 நவம்பர், 2010

கவுண்டர் சமூகத்தை இழிவு படுத்திய உத்தமபுத்திரன் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்

ஜெனிலியா நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியாகியுள்ளது உத்தமபுத்திரன். இதில் கவுண்டர் சமூகத்தைப் பற்றி தரக்குறைவான வசனங்கள் இடம் பெறுவதாகக் கூறி கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பைத் தொடர்ந்து கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உத்தமபுத்திரன் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.



குறிப்பிட்ட சில வசனங்களையும் காட்சிகளையும் நீக்க வேண்டும் என்பதும் கவுண்டர் சமூகத்தை இழிவு படுத்திய உத்தமபுத்திரன் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் மோகன் அப்பாராவ் மற்றும் இயக்குனர் ஜவஹர் ஆர்.மித்திரன் இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டனர். பின் சில கேள்விகளுக்கும் தனுஷ் பதிலளித்தார்.  “உத்தமபுத்திரன் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் காயப்படுத்துவதாக பிரச்சனை நடக்கிறது. ஆனால் அது எங்களை அறியாமல் நடத்த விஷயம்.

எதார்த்தமான விஷயங்களை வைத்துதான் நகைச்சுவையாக சொல்லி இருந்தோம். காயப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் உத்தமபுத்திரன் டீம் சார்பாக நான் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

க்யூப் வடிவத்தில் இருக்கும் பிரிண்டுகளில் நீக்கிவிட்டோம், மற்ற வடிவத்தில் இருக்கும் பிரிண்டுகளில் டெக்னிக்கல் சிக்கல்களால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகும். அதையும் விரைவில் நீக்கிவிடுகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதுவரைக்கும் கோவை, சேலம் மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து காட்சிகளை நிறுத்த வேண்டாம். மேலும், படத்தில் நிறைய நல்ல விஷயங்களையும் சொல்லி இருக்கிறோம், பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதும், அதே சமூகத்தினர்... மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்பதும் படத்தில் காண்பிக்கப்படுகிறது. சின்னச் சின்ன விஷயங்களால் இந்தப் பிரச்சனை வந்துள்ளது,” என்று சொல்லி மீண்டும் அதற்கு வருத்தம் தெரிவித்தார் தனுஷ். 

சின்ன கவுண்டர், குங்குமப் பொட்டுக் கவுண்டர் என படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இந்தப் படத்திற்கு ஏன் எதிர்ப்பு, ஏதாவது காரணம் இருக்கா? 

அதான் எனக்கும் தெரியல. படம் முழுக்க அதை பற்றிய படமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அனைவரும் குடும்பமாக பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படத்தை எடுத்தோம். இந்த விஷயத்தில் எனக்கு ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. 

நீக்கப் பட்ட வசனங்கள் என்ன ?
 
அதை இப்போது சொல்ல வேண்டாம் என நினைக்கிறன். அவர்கள் எங்களுக்கு ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறார்கள். அதன்படி அந்த வசனங்களை நாங்கள் நீக்கிவிட்டோம்.

இதுபோன்ற எதிர்ப்புகளால் சினிமாவில் சுதந்திரம் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? 

நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒருவரை காயப்படுத்தும் சினிமாவை எடுக்காமல் இருப்பதே நல்லது.

சென்சார் அனுமதித்ததைத் தானே திரையிட்டுள்ளீர்கள்? 

ஆமாம், ஆனாலும் இதில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்வதையே நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னார் தனுஷ்.  

சமீபமாக தெலுங்கு படங்கள் நிறைய தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றதன. அப்படி ரீமேக் செய்யும் இயக்குனர்கள் அதை தமிழுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துள்ளதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அதை செய்வதே இல்லை என்பதே இதில் வேடிக்கை. தெலுங்கில் ஹிட்டான 'ரெடி' படத்தை தமிழுக்கு தகுந்தவாறு ரீமேக் செய்திருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது. இனிமேலாவது இயக்குனர் ஜவஹர் ஜாக்கிரதையா இருக்கணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக