வியாழன், 18 நவம்பர், 2010

இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கைகான விஜயம் ஒத்திவைக்கப்பட்டதன் பிண்ணனி என்ன??

கிருஸ்ணாவின் இலங்கைக்கான கன்னி விஜயம் கடந்தமாத   இறுதியில்     இடம்பெறவிருந்த     நிலையில் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட   விஜயம் இம்மாதம் 25 ஆம் திகதி   இடம்பெறும் என புதுடில்லி அறிவித்துள்ளது.    எனினும், இந்திய வெளியுறவு அமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு   புதுடில்லி   எந்தக் காரணங்களையும் வெளியிடவில்லை.   ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் சிலவற்றை அவதானிப்பதற்காகவே   இந்த விஜயம்   ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம்    என நம்பப்படுகிறது.
சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்ற ஷங்காய் எக்ஸ்போ 2010 கண்காட்சியின் இறுதி வைபவத்திற்கு வருமாறு   சீனா விடுத்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனா சென்றிருந்தது அனைவரும் அறிந்ததே.      கண்காட்சியின் இறுதி வைபவத்தில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின் ஜனாதிபதி,    பிரதமர் ஆகியோரைச சந்தித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கிடையிலான      பொருளாதார உறவுகளின் மேம்பாடு குறித்து சந்திப்புக்களில் பேசப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.   எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்திற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதற்கும் இடையே தொடர்பிருப்பதாகவே கருப்படுகிறது.
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை    அடிப்படையாகக் கொண்ட    சீனாவின் நண்பரான    மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து காதில் ஓதிய மந்திரத்தை ஊகித்துக் கொள்வதும், சீனாவை எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ அணுகுகின்றார் என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதுமே இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் பிற்போடப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சீனாவுடன் மஹிந்த அரசாங்கம்    நெருங்கிப் போவதை சகித்துக்கொள்ள முடியாமல், பல வழிகளிலும் அதற்குத் தடைகளை ஏற்படுத்தி தம்பக்கம் இழுத்துக்கொள்ளவே   தொடர்ந்தும்    இந்தியா  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.      தீபாவளி கொண்டாட்டத்திற்காக கடந்த    6ஆம் திகதி   மூன்றுநாள் பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்தியாவை மிக நெருங்குவதற்கு பல காரணங்கள் உள்ள போதிலும், அது இலங்கை அரசியலில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
இந்திய ஊடகங்கள் அனைத்தும் வெளிக்காட்டியதைப் போன்று தீபாவளி கொண்டாட்டத்திற்காகவோ, பலகாரங்களை உண்டு மகிழவோ, பட்டாசு வெடித்து குதூகலமாக இருக்கவோ அமெரிக்க ஜனாதிபதி     இந்தியா வரவில்லை   என்பதை இலகுவாகப்   புரிந்துகொள்ள  முடியும்.
சரிந்துபோயுள்ள அமெரிக்காவின்    பொருளாதாரதை சீர்செய்வதற்காக     இந்தியாவின் சந்தையை பயன்படுத்திக் கொள்வதற்கே அமெரிக்க   ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய விஜயம் அமைந்திருந்ததாக பொதுவாக எடுத்துக்கொள்ளலாம்.     ஆனால் இதனைத் தாண்டி,      2018இல் உலக வல்லரசு என்ற இலக்கை நோக்கி நகர்வுகளை மேற்கொண்டுவரும்     சீனாவின் ஆதிக்கத்தை     அல்லது வேகத்தைப் பொறுத்துக் கொள்ள  முடியாத   அமெரிக்கா    தற்போது பல திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே அமெரிக்க  இந்தியத் தலைவர்களின் சந்திப்பு அமைந்துள்ளதாக உணரப்படுகிறது.
இந்தியாவிற்கு வருவதற்கு  முன்னர் ஒபாமா விடுத்த அறிவிப்பொன்றில்,    “ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில்       இந்தியாவிற்கு நிரந்த இடம் கிடைப்பது சிரமம் ” எனக் கூறியிருந்தார்.     எனினும்,    இந்தியப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில்      இந்திய நாடாளுமன்றத்தில்    அவரது பேச்சு   முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப ஐ.நா., சபையிலும் மாற்றங்கள் தேவை.
இவ்வாறு மாற்றியமைக்கப்படும் போது ஐ.நா.   பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்படவேண்டும்  எனக் கூறியிருந்தார். ஒபாமாவின்  இந்தத் திடீர் மாற்றத்திற்கான சூட்சுமத்தை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சீனாவின் உலக வல்லரசுப் பயணத்தைத் தடுப்பதற்காக ஆசிய பிராந்தியத்தில் அதற்கெதிராக இந்தியாவை வளர்த்தெடுக்கும்  முயற்சியில் அமெரிக்க ஈடுபட்டுள்ளதை கவனிக்கக் கூடியதாகவுள்ளது.     இதற்காகத்தான் அண்மைக்காலமாகவே தனது உரைகளில் இந்தியாவை உதாரணம் காட்டுவதும், நேசக்கரம் நீட்டுவதுமாக பராக் ஒபாமா தனது நடவடிக்கைகளை மாற்றியமைத்திருந்தார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைப்பதாகவே அமைந்துள்ளது.   எனினும், சீனாவைப் பகைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான நிலையில் அமெரிக்க உள்ளது என்பதுதான் அமெரிக்காவிற்கு கசப்பான உண்மை. காரணம் அமெரிக்காவிலுள்ள சீனாவின் முதலீடுகள் அப்படி வியாபித்திருக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைப்பதற்கு குடும்பிப்பிடியாக அமெரிக்காவில்       தனது முதலீடுகளை சீனா பயன்படுத்தி வருகிறது.   அமெரிக்க டொலரின் மதிப்பை  அசைத்துப் பார்க்கும் சக்தியாக சீனா தற்போது உருவெடுத்துள்ளது.      சீனாவைப் பகைத்துக்கொள்ளும் பட்சத்தில்,      தற்போது ஆட்டம் காணும் நிலையிலுள்ள அமெரிக்காவின் பொருளாதாரம் அதோகதியாகிவிடும் என்ற பயம் அமெரிக்காவிற்கு உள்ளது.
எனவே எதிரிக்கு    எதிரி நண்பன் என்பதைப் போன்று இந்தியாவின் தோள் மீது அமெரிக்கா கரம்போட்டுக் கொண்டுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது. இதில் அமெரிக்கா ஒரே கல்லில்   இரண்டு மாங்காய்களை அடிக்க  முயற்சிக்கிறது.
தற்போது மீண்டும் இலங்கை  சீன நட்புறவைக் குறித்து பார்போமேயானால், அமெரிக்காவிற்கே பெரும் சவாலாக இருக்கும் சீனாவை நெருங்கிய நண்பனாக வைத்துக்கொள்வதே தமது குடும்ப ஆட்சிக்கு ஆரோக்கியமானது     என்பதை நன்கு அறிந்துகொண்டுள்ள     இலங்கை அரசுத் தலைவர்கள் அதற்குத் தேவையானதை சீனாவிற்கு   மறுப்பின்றி செய்துகொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சீனாவுடன் நெருங்கிச் செல்லும் மஹிந்த அரசாங்கத்தின் மீது தற்போது இந்தியா அதிருப்திக் கொண்டுள்ளதை இந்திய ஊடகங்களின் ஊடாகக் காணக்கூடியதாக உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த, பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பத்தில் யுத்தக் குற்றங்களுக்காக அவர் பிரித்தானிய சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படலாம் என்ற காரணத்தால் மகிந்த ராஜபக்ஷ                 லண்டன் விஜயத்தை ரத்துச் செய்துள்ளார் என “ரைம்ஸ் ஒவ் இந்தியா ” ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.   இது ஒரு உதாரணம் மாத்திரமே. இதுதவிர தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்தும் நீதிமன்றத் தீர்ப்பாயத்தின் மூலம் புதுடில்லி ஆராய்ந்து வருகிறது.
இவற்றைப் பார்க்கும்போது    இலங்கையின் செயற்பாடுகளில் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இந்த அதிருப்தியை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது வடக்கில்    இலங்கை இராணுவத்திற்காக  முகாம்களை அமைக்கும் பணிகளும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அல்லது சீனா அதனைப் பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து கைமீறிச் செல்லும் இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்தியா பல வழிகளிலும் முயற்சிப்பதை விளங்கிக் கொள்ளக்கூடியதாகவுள்ளது.
உலக வல்லரசு என்ற இலக்கில் செல்லும் சீனாவை அண்டியிருப்பதால் இலங்கை அரசாங்கத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும் எராளமான நன்மைகள் கிடைத்துவருவதையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது. குறிப்பாக பொருளாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சீனாவின் தயவையே இலங்கை பெரும்பாலும் நாடியுள்ளது.
மிகமுக்கியமாக     சீனாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இலங்கை தற்போது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.     குறிப்பாக தமக்கெதிரான பிரசாரங்களை மேற்கொண்டுவரும் இணைய ஊடகங்களை ஒடுக்குவதற்கும், அரசாங்க உயர்மட்டத்துடன் அதிருப்தி கொண்ட அரசாங்கத்திலுள்ளவர்களின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்பதற்கும்    தற்போது சீன தொழில்நுட்பமே    பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு பிராந்திய அரசியலில் குளிர்காயும்      இலங்கை ஆட்சியாளர்கள்    அதில் உள்ள ஆபத்துக்களையும் உணராமல் இல்லை. குறிப்பாக இந்தியாவை முற்றுழுதாக    இலங்கை ஆட்சியாளர்கள் புறக்கணிக்கும் பட்சத்தில்    இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குக் கூட     புதுடில்லி வழிவகுக்கக் கூடும்.
தற்போதைய அரசாங்கத்திலுள்ள இந்தியாவிற்கு விசுவாசமான ஒருவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியில் அமர்த்துவதற்கும் இந்தியா திரைமறைவில் முயற்சி செய்து வருவதைப் போன்ற ஒருநிலை உருவாகியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமானவர் என்று பார்த்தால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷவைக் குறிப்பிடலாம்.   காரணம் இலங்கை அதிகாரிகளுக்கு    புதுடில்லி உத்தியோகபூர்வ      அழைப்புக்களை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அதில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் இருக்கின்றாரோ,           இல்லையோ கட்டாயமாக பசில் ராஜபக்ஷ அதில் இருப்பார் என்பது கடந்தகால இந்தியாவிற்கான இலங்கை அதிகாரிகளின் சுற்றுப் பயணத்தைப் பார்க்கும் போது புலப்படுகிறது.
எனவே, மஹிந்த ஆட்சி தமக்கு பணிந்துவர மறுக்கும் பட்சத்தில் குடும்பத்தில் குட்டையைக் குழப்பி, பசில் ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்தக் கூடும் என்ற ஒரு ஊகம் உள்ளது .   ஆக, இலங்கை,   சீனாவை நெருங்கிச் சென்றாலும்      இந்தியாவை நினைத்தாற்போல்    பகைத்துக்கொள்ள   முடியாத ஒரு நிலையிலேயே இலங்கை ஆட்சியாளர் இருக்கின்றனர் என்பதே இங்கு க்கியமானதாகும்.
பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை, இந்தியாவைவிட சீனாவிற்கு ஏற்கனவே பலமடங்கு இலங்கைக்குள் கால் ஊன்ற அனுமதித்துள்ள நிலையில், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவையும் அனுசரித்துப் போகவேண்டியுள்ளது.
இன்னும் பல       ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி மாறாது என்ற     ஒரு கருத்து மக்கள் மத்தியில் ஆழமாக    ஏற்பட்டிருந்தாலும்    அந்நிய நாடுகளின்   முக்கியமாக பிராந்திய ஆதிக்க நாடுகளின் ஆதரவு இன்றி ஆட்சியில் நீண்டகாலத்திற்கு நிலைத்திருப்பது இக்காலகட்ட அரசியலில் மிகக் கடினமான விடயமாகவே நோக்கப்படுகிறது.
ஆக, காரணம் கூறப்படாது ஒத்திவைக்கப்பட்ட    இந்திய வெளியுறவு அமைச்சரின் இம்மாத வருகையானது பிராந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டத்தில் மிகமுக்கியமாக கருதப்படுகிறது.
வீ.ஏ.கே.ஹரேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக