புதன், 3 நவம்பர், 2010

இலங்கை கடல் எல்லைக்குள் இராமேஸ்வர மீனவர்கள் அத்துமீறல்: இறால்,மீன்களை பறித்துவிட்டு விரட்டியடித்த இலங்கைக் கடற்படை

இராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களிடம் இறால், மீன்கள்,  செல்போன் ஆகியவற்றை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துகொண்டு  விரட்டியடித்ததாக  ஞாயிற்றுக்கிழமை கரை  திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்,   இறால்,மீன்கள் பறிப்பு   உள்ளிட்ட சம்பவங்களைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த அக்.8 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தம் செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில், 21 நாட்களுக்குப் பின் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 30 ஆம் திகதி 634 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இப்படகுகள் ஞாயிற்றுக்கிழமை பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பின.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 10 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகுகளை மடக்கினர். பின்னர் சுமார் 10 கிலோ எடையுள்ள விலையுயர்ந்த இறால்,  கணவாய்,  மீன்கள் மற்றும் செல்போன்,  மீன்பிடி வலையின் கயிறுகளை 50 இற்கும் மேற்பட்ட படகுகளிலிருந்து பறிமுதல் செய்தனர்.
மேலும், இப்பகுதியில் மீன்பிடிக்கவரக்கூடாது எனத் துப்பாக்கியால் மிரட்டி விரட்டியடித்தனர்.      இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தால் ஒரு படகுக்கு தலா ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டு மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பியதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக