எனது கணவர் இரக்கமே இல்லாத குற்றவாளி. என்கெளன்டரில் கொல்லப்பட்டிருக்காவிட்டால் அவருக்கு கோர்ட் மூலம் தண்டனை கிடைத்திருக்கும். என்னையும், எனது குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்க வேண்டும். நாங்கள் வாழ உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார் கோவையில் என்கெளன்டரில் கொல்லப்பட்ட மோகனகிருஷ்ணனின் மனைவி.
மோகனகிருஷ்ணனின் செயலால் அவனது குடும்பம் பெரும் இக்கட்டில் மாட்டியுள்ளது. மக்கள் கண்ணில் படாமல் வாழும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மோகனகிருஷ்ணனின் மனைவி பெயர் ஆரோக்கிய மேரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாகவும் உள்ளார் ஆரோக்கிய மேரி.
மோகனகிருஷ்ணனின் நடத்தை பிடிக்காமல் அவர் திருச்சிக்குப் போய் தனது தாயுடன் வசித்து வருகிறார். மோகனகிருஷ்ணன் கொலையான செய்தியை அறிந்து அவர் பெரும் அதிர்ச்சியுற்றுள்ளார்.
கோவைக்கு தனது மகள், தாயுடன் வந்துள்ள அவர் கண்ணீர் மல்க தமிழக மக்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார். அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி. கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளும் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.
என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படாவிட்டால் கோர்ட் மூலம் தண்டனை கிடைத்து இருக்கும்.
இப்போது நானும், என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் நாங்கள் வாழ உதவ வேண்டும் என்று கதறியபடி கூறினார்.
அவருடன் இருந்த தாயார் அந்தோணியம்மாள் கூறுகையில்,
மோகன்ராஜ் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை ஆரோக்கிய மேரி டெலிவிஷனில் பார்த்ததும் மூர்ச்சையாகி விட்டாள் என்றார்.
இதற்கிடையே, மோகனகிருஷ்ணனின் தாயார் சாவித்திரி கேரளாவிலிருந்து கோவை வந்துள்ளார். அவர் மோகனகிருஷ்ணன் சாவு குறித்து பேச மறுத்து விட்டார்.
ஆரோக்கிய மேரியிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்குத் தேவைப்பட்டால் மீண்டும் வர வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக