ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஹாலிவுட் சினிமாவில் பாடிய முதல் தமிழர் . உலகிலேயே மிகத் தொன்மையானது தமிழிசைதான்!’’


மாணிக்கம் யோகேஸ்வரன், உலகப் பிரசித்திபெற்ற சர்வதேச தமிழ் இசைக் கலைஞர். பாரம்பரிய தமிழ் இசையும் மேற்கத்திய இசையும் கலந்து ஒரு புது வெள்ளமாகப் பிரவாகம் எடுக்கும் மாணிக்கம் யோகேஸ்வரன் குரல் கேட்பவர்கள் அனைவரையும் கிரங்கச் செய்யக்கூடியது. ஹாலிவுட் சினிமாவில் பாடிய முதல் தமிழர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. வார்னர் பிரதர்ஸ் தயாரித்த, ஸ்டான்லி குப்ரிக்கின் ‘eyes wide shut’ சினிமாவில் நிர்வாணக் காட்சியில் இவர் பாடிய பகவத் கீதை ஸ்லோகங்கள், பெரிய சர்ச்சைக் குள்ளானது. திருக்குறளை 133 ராகத்தில் பாடி இவர் வெளியிட்டுள்ள ஆல்பமும் புகழ்பெற்றது. மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார், மாணிக்கம் யோகேஸ்வரன். இதில் ஐந்து தமிழ் ஆல்பங்கள். லண்டனில் வசித்து வரும் இவர், ‘ஏசியன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்ற இசைக் கல்லூரியை நடத்திக்கொண்டு வருகிறார். இதன் மூலம், முக்கியமான கலைஞர்களை அழைத்து வருடம் தோறும் லண்டனில் இவர் நடத்தும் தமிழிசைக் கச்சேரிகள் பிரசித்தமானவை. இப்போது தமிழிசைப் பன்கள், சுரங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற சங்கமம் நிகழ்ச்சியில் பாடுவதற்காக, மாணிக்கம் யோகேஸ்வரன் தமிழகம் வந்திருந்த போது இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

‘‘முதலில் உங்களைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள். எப்படி இசை உங்களுக்கு அறிமுகமானது?”

‘‘என் சொந்த ஊர் யாழ்ப்பாணம். அங்கேதான் பிறந்து, வளர்ந்தேன். அப்போது, மிகவும் அமைதியாக, பார்ப்பவர்கள் எவரையும் உடனே வசீகரித்துவிடக்கூடிய அழகுடன் இருந்தது யாழ்ப்பாணம். எங்களுடையது இசைக் குடும்பம் கிடையாது. ஆனால் அப்பா, அம்மாவுக்கு நல்ல குரல் வளம்; தேவாரம் பாடல்களை வீட்டில் பாடுவார்கள். அவர்கள் பாடுவதைக் கேட்டு, கேட்டுதான் எனக்கு முதலில் இசை அறிமுகமானது. பாடசாலையில் சங்கீத பூஷனம் முத்துக்குமாரசாமி எனக்கு ஆசிரியராக இருந்தார். அவர் மூலமாக, சின்ன வயதிலேயே பாட்டுகளைக் கேட்கிற ஆசையும் பாடுகிற வேட்கையும், இசை வளமும் எனக்கு வந்தது.

‘‘பாடசாலையை முடித்தவுடன் மிருதங்கம், வயலின், ஆர்மோனியம் என்று உள்ளூரிலேயே ஒரு சிறிய இசைக் குழு அமைத்து கோவில்களில் பாடினோம். அதன்பிறகு பக்கத்து ஊர்களுக்கும் சென்று சின்னச் சின்ன கச்சேரிகள் செய்யத் தொடங்கினோம். எல்லோருமே சின்னப் பசங்கள் தான். அதிகமும் பக்திப் பாடல்களும் கொஞ்சம் கிளாசிக்கலான சினிமா பாடல்களும் பாடுவோம். நல்ல வரவேற்பு இருந்தது. வாரியார் சுவாமிகள் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, என் கச்சேரி கேட்டு, பொன்னாடை போர்த்தி பட்டம் சூட்டி பாராட்டினார்.

“அமைதியாக, விளையாட்டுத் தனமாக போய்கொண்டிருந்த வாழ்க்கை; 1983 இனக் கலவரத்தில் சீர்குலைந்து சின்னாபின்னம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. எனவே, என் குடும்பத்தார்கள் படிப்பதற்காக என்னை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே என் அக்கா இருந்தார்கள்.

‘‘லண்டனுக்கு வந்தபிறகு கர்நாடக சங்கீதம், அரேபியன் பாடல்கள், மேற்கத்திய இசை எல்லாவற்றையும் முறையாகக் கற்றுக்கொண்டேன். சென்னைக்கு வந்து மிருதங்க வித்வான் டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் சங்கீதம் படித்தேன். பெரிய மேதை டி.வி. கோபாலகிருஷ்ணன். இன்று இருக்கும் இசை விற்பன்னர்களில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இரண்டையும் ஒரே மேடையில் பாடக்கூடியவர் உலகில் இவர் மட்டும்தான். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்றவர்களுக்கு இசை சொல்லிக்கொடுத்தவர். அவரிடம் கற்ற சங்கீதம்தான் இன்றும் என் பலம். மீண்டும் லண்டன் திரும்பி, கோயில்களில் கச்சேரி செய்து கொண்டிருந்தேன். ஒரு கோயில் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சர்வதேசப் பிரபலமான ஜெர்மனியில் உள்ள ‘dissidenten' ஜாஸ் இசைக்குழுவில் என்னைப் பாட அழைத்தார்கள். அது ஒரு பெரிய வாய்ப்பு; ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா என அவர்களுடன் நான் சுற்றாத நாடுகள் இல்லை. உலகப் பிரசித்திபெற்ற பல இசைத் திருவிழாக்களில் அவர்களுடன் பாடியிருக்கிறேன். அவர்களது இரண்டு ஆல்பங்களில் தமிழிலேயே பாடினேன். அந்த ஆல்பங்களுக்கு கிடைத்த வரவேற்பால் ஜெர்மனி, பிராங்க்பர்ட் இசைத் திருவிழாவில் என்னை தமிழிசைக் கச்சேரி செய்யச் சொன்னார்கள்.


‘‘இப்போது, ‘the shout’ இசைக்குழுவில் இருக்கிறேன். ஜாஸ், ஒபரா, இந்திய பாரம்பரிய சங்கீதம் என வெவ்வேறு பின்னணி கொண்ட இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழு அமைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் உதித்ததுதான் ‘தி சவுட்’. மொத்தம் பதினாறு பேர் இருக்கிறோம். எல்லோருமே அந்தந்தத் துறைகளில் மிகப்பெரிய கலைஞர்கள். ஆங்கிலம், தமிழ், அரேபியன், லத்தின் அமெரிக்கா இசை என எல்லாம் கலந்த, ஒரு ஒழுங்கு இல்லாத இசைக் கோர்வையாக இருக்கும் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எட்டு வருஷத்தில் உலகளவில் முக்கியமான இசைக்குழுக்களில் ஒன்றாக ஆகியிருக்கிறோம். லண்டனில் வருஷா வருஷம் நடக்கும் மிகப்பெரிய இசைவிழா பிபிஸி விழா. அதில் பாடும் வாய்ப்பு சென்ற வருஷம் எங்களுக்குக் கிடைத்தது. 600க்கும் மேற்பட்ட சிம்பொனி இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பாடிய அந்த நிகழ்ச்சி சிலிர்ப்பான ஒரு அனுபவம்.

“நான், இந்திய பாரம்பரிய சங்கீதத்தைச் சேர்ந்தவன் என்றாலும் என் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். ‘இந்திய இசையைக் கேட்டால் மனசுக்கும் இதயத்துக்கும் ஒரு அமைதி கிடைக்கிறது; தியானம் செய்வது போல் இருக்கிறது’ என்கிறார்கள் அவர்கள்.’’

‘‘ஹாலிவுட் சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?’’

‘‘ஹாலிவுட்டில் மிகப்பெரிய இசைக் கம்போஸர் ஜோஸ்லின் புக். அவருடைய இரண்டு ஆல்பங்களில் நான் பாடியிருக்கிறேன். அந்த ஆல்பங்களைக் கேட்ட ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், ஜோஸ்லின் புக்கிடம் இவர் என் படத்தில் பாடவேண்டும் என்று சொல்லி என்னை அழைத்தார். அந்தப் படம்தான் ‘eyes wide shut. கணவனை ஜலசியாக்குகிற ஒரு மனைவி, அதனால் வரும் பிரச்னைகள் பற்றிய படம். அதில் ‘கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் வருவான்’ என்ற அர்த்தம் தரும் பகவத்கீதை ஸ்லோகங்களை பாடினேன். படம் வெளியான பிறகுதான், நிர்வாணக் காட்சியில் அப்பாடல் இடம்பெற்றிருப்பது தெரிந்தது. அமெரிக்காவில் மிகப்பெரிய சர்ச்சை ஆகிவிட்ட்து. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தினர் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். பிறகு, ‘காதலா, இன்பமா, இதுவொரு நரகமா...’ என்று தமிழிலேயே எழுதி பாடி மாற்றினோம். அதன்பிறகு ஸ்பைக் லீயின் ‘25th hour’ சினிமாவில் பாடினேன். தொடர்ந்து சில படங்களில் பாடியிருக்கிறேன்.’’

‘‘தற்கால தமிழ் சினிமா இசை பற்றிய உங்கள் மதிப்பீடு?’’

‘‘இசையை எப்படி ரசிப்பது என்பதற்கு முறையான ஒரு பயிற்சி இருக்கிறது. தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களிடம் இந்த ரசனைப் பயிற்சி இல்லை. எனவே, இந்த பாடல் சரியாக இல்லை; எங்களுக்கு புதிதாக வேண்டும் என இசையமைப்பாளர்களிடம் கேட்டு வாங்கத் தெரியவில்லை. தமிழ் சினிமா இசையின் தரம் குறைந்துகொண்டே வருவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். தேவைதான் உற்பத்தியை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில், உலகம் முழுக்க தன் ஆதிக்கத்தைச் செலுத்தும் வல்லமைபடைத்த ஏ.ஆர். ரஹ்மான் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சிறந்த இசையை ரசிகர்கள்தான் கேட்டுப் பெறவேண்டும். அதற்கு ரசிகர்களும் கொஞ்சம் உழைக்க வேண்டும்.’’

‘‘உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக் குழுவினருடன் பணியாற்றிய இருக்கிறீர்கள். இந்த அனுபவத்தின் பின்னணியில் உலக இசையில் தமிழிசையின் இடம் என்ன என மதிப்பிட முடியுமா?’’

‘‘சந்தேகமே இல்லாமல், உலகிலேயே மிகத் தொன்மையான இசை தமிழிசை தான். நான் தமிழன் என்பதால் இதைச் சொல்லவில்லை. ஐயாயிரம் வருஷத்துக்கு மூன்னால் இருந்தே தமிழிசை பாடப்பட்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும், கேரளாவில் சாதாரண மக்களிடமும் அந்த பழங்காழ இசையின் எச்சங்களும் சுவடுகளும் இன்றும் இருக்கிறது. நீலகிரி மலையில் வசிக்கும் இருளர்கள் வாசிக்கும் புல்லாங்குழலின் ஓசை தோடி ராகம் தான். கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பழங்கால இசைகளில் தமிழிசையின் கலப்பு இருக்கிறது. மக்கள் இடம்பெயர்ந்து குடியேறியது, கண்டங்கள் நகர்வு போன்ற பல காரணங்களால் இது நடந்திருக்கலாம். ஐரோப்பாவில் உள்ள சில நாட்டுப்புற இசைகள் கிட்டத்தட்ட தமிழிசையைப் போல இருக்கின்றன.’’

‘‘ஈழத்தில் நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே வரும் பிரச்னை குறித்து...’’

‘‘சின்ன வயதில் படிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டதுதான். அன்று, விரைவில் என் சொந்த ஊருக்கு திரும்புவேன்; அப்பா, அம்மா, உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வேன்; என் பள்ளித் தோழர்களுடனும் பால்ய கால நண்பர்களுடனும் தெருப் புழுதி கிளம்ப விளையாடிய என் தாய் மண்ணை முத்தமிடுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால், இன்று வரைக்கும் யாழ்ப்பாணம் திரும்ப முடியவில்லை. இடையில் ஒரே ஒரு முறை மட்டும், கச்சேரி செய்வதற்காக கொழும்பு சென்றேன். அந்த ஒருமுறைதான் இலங்கையைப் பார்த்ததும். 1987 அக்டோபர் 19ஆம் தேதி நடந்த ராணுவத் தாக்குதலில் என் அப்பாவும் தங்கையும் இறந்துவிட்டார்கள். அவர்களின் இறுதிச் சடங்குக்குகூட என்னால் செல்ல முடியவில்லை.

‘‘நார்வே முயற்சியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை ஒரு நம்பிக்கையைத் தந்தது. சமீபமாக அதிலும் அடி விழுந்திருக்கிறது. இப்போது, இலங்கையில் நடக்கும் யுத்தம் மிகவும் துரதிஷ்டவசமானது. தாய்லாந்தில் 2001இல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, ‘peace for paradise’ என்ற ஆல்பத்தை நான் வெளியிட்டேன். மிகப்பெரிய வரவெற்பைப் பெற்றது அந்த ஆல்பம். ‘தாய்லாந்திலே அமைதி பேச்சு ஆனது... தாய் நாட்டிலே இன்பம் பெருகிப் போனது... தாய்த் தமிழ் தலைவர்கள் சிங்கள அமைச்சர்கள்... தூய உள்ளத்துடன் மனம் நிறைந்த பேச்சு... மனதில் நிம்மதி ஆச்சு....’ என அதில் ஒரு பாடல் வரும். இப்போது அந்த மன அமைதி பாடலில் மட்டும்தான் இருக்கிறது. உலகம் முழுக்க எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்து, என் தாய்நாட்டினர் புலம்பெயர்ந்து வசிக்கும் இடங்களுக்குச் சென்று, ‘peace for paradise’ பாடல்களை மீண்டும் பாடவேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். ஒரு இசைக் கலைஞனாக என் தாய்நாட்டு அமைதிக்கு என்னால் இயன்ற பங்களிப்பு இது’’

சந்திப்பு: தளவாய் சுந்தரம்

(இந்த நேர்காணலின் சுருக்கமான வடிவம் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வெளியானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக