வியாழன், 4 நவம்பர், 2010

கனகராயன்குளத்தில் புலிகளின் சுரங்கம்: ஆயுதங்கள் மீட்பு!


வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக படையினர் அறிவித்துள்ளனர். இந்தச் சுரங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலவற்றையும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைப்பற்றியிருப்பதாகவும், ஆட்லறி ஏவுகணைகளுக்குப் பயன்படுத்தப்படும் 175 தோட்டாக்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிரவும், வன்னியில், முரசுமோட்டை, இரணைமடு மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஒரு தொகை வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 152 மில்லிமீற்றர் ஆட்லெறி ஷெல் 2, 130 மில்லிமீற்றர் ஆட்லெறி ஷெல் 39, 122 மில்லிமீற்றர் ஆட்லறி ஷெல் 3, கிரனைட் 7, எறிகணை 1 மற்றும் 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு ஒன்று என்பன கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள தேக்கஞ்சேனை என்ற இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் நேற்று முன்தினம் கண்டுபிடித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு, சி.4 எனப்படும் ஒரு கிலோ நிறையுடைய வெடிமருந்துப் பொருள்கள், ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் 183 மற்றும் வோக்கி டோக்கி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக