சனி, 27 நவம்பர், 2010

கவிஞர் வாலி : மயக்கமா கலக்கமா’ ் பாடலின் ஒவ்வெரு வரியும் எனக்கு தன்னம்பிக்கைய் தந்தது. வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக

கவிஞர் வாலி :
ஜெமினியும் நானும் திருச்சிக்காரர்கள். ஜெமினியை கஞ்சன் என்று கூறுவார்கள். ‘கஞ்சன்’ என்றால் ‘பிரம்மா’ என்றொரு பொருளும் உண்டு. பிரம்மா போல், ஜெமினியும் பல கதாபாத்திரங்களை படைத்தவர்.ஜெமினி கருமி அல்ல. உண்மையில் அவர் ஒரு தருமி. நான் கூறுவது திருவிளையாடல் தருமி அல்ல. அவர், யாருக்கும் தெரியாமல் எவ்வளவோ செய்திருக்கும் தருமி.


இன்று உலக நாயகன் என்று கொண்டாடும் கமலை, பாலசந்தரிடம் ‘இவன் நல்ல திறமையானவன்’ என அறிமுகப்படுத்தி வைத்தவர் ஜெமினி. இவர் அறிமுகப்படுத்தி வைத்ததால்தான் நமக்கெல்லாம் ஒரு உலகநாயகன் கிடைத்தார். பாசமலர் படத்தில் ஆரூர்தாஸ் வசனம் எழுத இவர்தான் காரணம். இதுபோல் எத்தனையோ பேர் திரைத்துறைக்கு அறிமுகமாக இவர் காரணமாக இருந்துள்ளார்.
நான், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு ஒரு சில பாடல்கள் எழுதியிருந்தபோதும் சரிவர வாய்ப்புகள் இல்லாது இருந்த காலம்... எனது நண்பர் ஒருவர், மதுரைக்கு வந்துவிடு உனக்கு 3000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித்தருகிறேன் என அழைத்தார். நானும் சரி மதுரைக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். அப்போது பி.பி. ஸ்ரீனிவாஸ், நான் தங்கியிருந்த அறைக்கு வந்திருந்தார்.
அவரிடம், சமீபத்தில் என்னப் பாடல் பாடியிருக்கிறாய் என கேட்டேன். அதற்கு ஸ்ரீனிவாஸ், ஜெமினி நடித்த ‘சுமைதாங்கி’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ என்றப்பாடலை பாடியிருப்பதாக கூறி, பாடியும் காட்டினார்.அந்தப் பாடலின் ஒவ்வெரு வரியும் எனக்கு புது உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தது. அது என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
மற்றொரு சமயம் கண்ணதாசனிடம் இது பற்றி பேசும் போது, “என்னை, உமது பாடலே உனக்கு ‘சத்ரு’வாக்கியது” என்று கூறியிருக்கிறேன்.
ஜெமினி கணேசன் ஒரு நாடகம் எடுப்பதாக இருந்தது. அதில் ஏ.எம்.ராஜாதான் கதாநாயகன். ஆனால் கதாநாயகி கிடைக்கவில்லை. என்கிட்ட அதுபற்றி கேட்டதற்கு, “பாரதியாரின் ‘குயில்’ நாடகத்தில் நடித்த பொண்ண அறிமுகப்படுத்தி, இந்தப் பொண்ணு நல்லா நடிக்கும். உனது நாடகத்தில் நடிக்க வை,” என்றேன். அதேமாதிரி அந்தப் பொண்ணே நடிக்க முடிவாகி ஒத்திகை நடந்துகிட்டிருந்தது. ஒரு நாலு நாள் கழித்து, “என்ன நாடகம் எடுத்தாச்சா, அந்தப் பொண்ணு எப்படி நடிக்கிறது.” என்று கேட்டேன். அதற்கு ஜெமினி, “நாடகம் எடுக்கவில்லை. அந்தப் பொண்ணும் இனிமே நடிக்காது. நானே அந்தப் பொண்ண கல்யாணம் கட்டிக்கப்போறேன்” என்றார். இப்படி நாலுநாள் ஒத்திகையின் போதே நடிக்க வந்தப் பொண்ண மனைவியாக்கி கொண்ட காதல் மன்னன்தான் ஜெமினி கணேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக