போர்க் காலத்தில் பனை மரங்கள் பலவும் அழிந்துபோனதால் வட பகுதியில் பல சீவல் தொழிலாளிகள் தொழிலின்றிச் சிரமப்படுவதுடன், எதிர்காலத்தில் சீவல் தொழிலே அழிந்துபோகும் நிலை தோன்றியுள்ளது.அதிகளவு பனை மரங்கள் இருந்துவந்த தென்மராட்சிப் பகுதியில் நடைபெற்ற கடுமையான மோதல்கள் காரணமாக, பளை, கிளாலி, எழுதுமட்டுவாள், முகமாலை மற்றும் நாவற்குழி, கேரதீவு வீதியில் அமைந்துள்ள மறவன்புலவு கிராமம் உள்ளிட்ட பல இடங்களில் பெரும்பாலான பனை மரங்கள் அழிந்துபோயுள்ளன.
தென்மராட்சி மறுவன்புலவு கிராமத்தில் ஏறத்தாள அனைத்து பனை மரங்களும் அழிந்துபோயிருப்பதால், சீவல் தொழிலாளிகள் தொழில் இன்றிச் சிரமப்படுகின்றனர்.
1999ம் ஆண்டு இந்தப் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் மற்றும் இடப்பெயர்வையடுத்து, இந்தப் பகுதியிலிருந்த சுமார் 10,000 பனை மரங்களும், சுமார் 3,000 தென்னை மரங்களும் அழிந்துபோயிருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
2009இல் மீண்டும் இவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சீவல் தொழிலாளிகளே.
சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
இடப்பெயர்வுக் காலத்தில் இவர்கள் வேறு தொழில்களையும் பழகியுள்ளபோதும், அவற்றுக்குத் தேவையான உபகரண வசதிகள் எதுவும் இவர்களிடம் கிடையாது.
பனை மரங்கள் அழிந்துபோனதால், தமது பாரம்பரியத் தொழிலையும் தொடர முடியாமல் இவர்கள் சிரமப்படுகின்றனர்.
“ஊருக்கு வந்திருப்பது சந்தோசமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், எங்கடை தொழில் வளங்கள் எல்லாம் அழிந்துவிட்டன” என்று கூறிய மறவன்புலவு பிரதேச சீவல் தொழிலாளியான வ.சிவலிங்கம், இடம்பெயர்வுக்கு முன்னர் சீவல் தொழில் மூலம் தாம் நல்ல வருமானம் ஈட்டி வந்ததாகவும் கூறினார்.
“ஒரு நாளைக்கு 30லீற்றர் தொடக்கம், 60லீற்றர் வரையிலான கள்ளைத் தச்சன்தோப்புத் தவறணைக்கு முன்னர் நாங்கள் கொடுப்பம். நல்ல வருமானமும் கிடைத்தது. இப்ப எந்தவித வருமானங்களும் இல்லை” என்றார் அவர் வேதனையுடன்.
தொழில் இல்லாத காரணத்தினால் பல சீவல் தொழிலாளிகள் விவசாயக் கூலிகளாக வயல்களில் வேலைசெய்தனர். குப்பை பரவுதல், களை பிடுங்குதல், அருவி வெட்டுதல் போன்ற பணிகளில் நாட்கூலிகளாக இவர்கள் ஈடுபட்டனர்.
எனினும், தற்போது கிருமிநாசினிகளின் பயன்பாடு, அருவி வெட்டுவதற்கும், சூடடிப்பதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் இப்போது இவர்களுக்கு இந்தத் தொழில்வாய்ப்புக்களும் இல்லாமல்போயுள்ளது.
“தொழில்வாய்ப்பு எதுவும் இல்லாமல்போய் கஷ்டப்படிறம். எமக்கு ஏதாவது வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தால் எங்கட பிள்ளைகளைப் படிப்பீத்து அவர்களுக்காவது நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்” என்று வேதனையுடன் கூறினார் இரத்தினபூபதி அற்புதராசா என்ற சீவல் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய்.
மீண்டும் பனை மரங்களை நாட்டும் திட்டங்கள் இப்போது முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், தற்போதைய நிலையில் இவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கு ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டிய அவசர நிலைமை இங்கு காணப்படுகிறது.
அதேவேளை, இவர்களுக்குத் தற்காலிகமாக வேறு தொழில்களைப் பெற்றுக்கொடுக்கும்போது, எதிர்காலத்தில் இந்தப் பிரதேசங்களில் சீவல் தொழிலாளிகளே இல்லாத நிலைமை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
-ஜெயந்தி சிதம்பரப்பிள்ளை-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக