சனி, 6 நவம்பர், 2010

நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் பயங்கர புயல் 'ஜல்'!

சென்னை: கடும் புயலாக உருவெடுத்துள்ள 'ஜல்' இன்று காலை நிலவரப்படி வங்கக் கடலில் செனனையிலிருந்து 550 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து நாளை மாலை அல்லது இரவில் புதுச்சேரி- நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை:

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து வருவதோடு, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் நாளை மாலை அல்லது இரவில் புதுச்சேரி- ஆந்திராவின் நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும்.

இதனால் இன்று முதலே வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரங்களில் மிக பலத்த சூறாவளிக் காற்று வீசும். மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை சூறைக் காற்று வீசும்.

நாளை அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி.மீ. வரை புயல் காற்று வீசும்.

புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும்.

24 மணி நேரத்துக்குப் பின் தமிழகத்தின் சில இடங்களிலும் ராயலசீமா உள்ளிட்ட சில ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 25 செ.மீ. வரை மிக மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு்ண்டு.

கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளி்ல் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பலத்த மழை, சூறாவளிக் காற்று காரணமாக குடிசை வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. மரங்கள், மின்கம்பங்களும் சரியலாம். சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் கனமழை:

இந்த புயல் சின்னம் காரணமாக ராமேஸ்வரத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது.

ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய கடல் பகுதிகள் வழக்கத்தைவிட இன்று மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றன. 5 அடி உயரத்துக்கும் மேலாக அலைகள் எழுகின்றன.

75 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசி வருவதால் பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
  Read:  In English 
பாம்பன் ரயில் தண்டவாளத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.

மேலும் கோடியக்கரையிலும் கன மழை பெய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக